இளநி நொங்கு சாப்பிடுங்க... எஸ்.புதூரின் ‘நோ’புரட்சி!


சுதந்திரப் போராட்டத்தின்போது ‘வெளிநாட்டுப் பொருட்களை வாங்காதீர்கள்’ என்று மக்களுக்கு காந்தி அறைகூவல் விடுத்தார். பொருளாதாரரீதியில் வெளிநாட்டுப் பெருநிறுவனங்களிடம் இன்று நாம் அடிமைப்பட்டிருக்கும் இந்த வேளையிலும் வெளிநாட்டுக் குளிர்பானங்களை விற்கமாட்டோம் என முடிவெடுத்து ஓராண்டாக அதைக் கடைபிடித்தும் வருகிறது எஸ்.புதூர் கிராமம்.

கும்பகோணம் அருகேயுள்ளது எஸ்.புதூர். சுமார் 3,000 பேர் வசிக்கும் இந்த ஊர் முப்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூடும் மையமும்கூட. இவ்வூரில் போய் யாரிடமாவது, “பெப்சி, கோக் எங்கண்ணே கிடைக்கும்?” என்று கேட்டுவிடாதீர்கள். ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “போங்க தம்பி... போய் இளநி, நொங்கு சாப்பிடுங்க. ஒங்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது” என்று சொல்வார்கள். இந்த ஊரில், தமிழ்நாட்டில் தயாராகும் குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன. கூடவே, பழச்சாறு, கரும்புச் சாறு, இளநீர், நொங்கு என்று மக்கள் இயற்கையை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள்.

“ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது வணிகர் சங்கப் பேரவை தலைவர் விக்கிரமராஜா “2017, மார்ச் 1 முதல் கடைகளில் பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டுக் குளிர்பானங்களை விற்கமாட்டோம்” என பிரகடனம் செய்தார். அதைத் தொடர்ந்து பல ஊர்களிலும் கோக், பெப்சி விற்பதில்லை என முடிவெடுத்தார்கள்.

ஆனால், நாளடைவில் மக்களின் விருப்பத்தையும் தங்களின் வியாபாரத்தையும் கருதி வணிகர்கள் மீண்டும் அவற்றை வாங்கி விற்கத் தொடங்கிவிட்டனர். எஸ்.புதூர் வியாபாரிகள் மட்டும் ஓராண்டைக் கடந்தும் தங்களது முடிவில் உறுதியாக நின்று சாதித்துள்ளனர்.” என்கிறார் வணிகர் பாதுகாப்புச் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட இணைச் செயலாளர் செல்வம்.

x