”எப்பவுமே நான் ‘ஜில்’ சம்பத்!”


மார்ச் 26-ம் தேதி அரியலூர் திருமழபாடியில் ‘அன்பே சிவம்’ என்ற தலைப்பில் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்த்த ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் அரசியல் துறவுபூண்டி ருக்கும் நாஞ்சில் சம்பத். ஆனாலும் ‘அரசியல் பேட்டி’ என்றதும் வெடித்துச் சிதறிவிட்டார்.

நல்லாத்தானே போயிட்டு இருந்தது... தினகரனோடு உங்களுக்கு என்ன உரசல்?

தினகரன் திராவிட இயக்கம் என்ற மையப் புள்ளியில் இருந்து இயங்க வேண்டும் என்பது என் போன்றவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், அவர் திராவிடத்தையும் அண்ணாவையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்களில் மோடியோ அமித்ஷாவோ தினகரனிடம் எந்த ஆதரவும் கேட்கவில்லை. அவரே வலிந்து சென்று ஆதரவளித்தார். அப்போதே அவரது பாஜக-வுக்கு எதிரான நிலைப்பாட்டில் சறுக்கலைக் கண்டேன்.

அகலாது அணுகாது தீக்காய்பவர் போல் தலைவர்களிடத்தில் பழகும் நான், டிடி.வி தினகரனை திராவிட இயக்க தீபஸ்தம்பம் என நினைத்து அவர் பின்னால் சென்றது தவறோ என நெஞ்சுடைத்துப் போனேன். தனிக் கட்சி தொடங்க வேண்டிய சூழல் அமைந்தபோது, அண்ணாவையும் திராவிடத்தையும் நிர்தாட்சண்யமாகத் தூக்கி எறிந்ததால் அவர் மீது சந்தேகத்தின் நிழல் படிகிறது. இதையெல்லாம் சகித்துக்கொண்டு பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என என்னால் அங்கே இருக்க இயலாது. அதனால் வெளியேறிவிட்டேன். தலைவனைவிட தத்துவம் மேலானது எனக் கருதும் என் போன்றவர்கள் இந்த முடிவைத்தான் எடுப்பார்கள்.

x