எம்.என். என்று அழைக்கப்பட்ட எம்.நடராஜனின் மறைவுக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் புகழ் அஞ்சலிகள் வந்து சேர... தனிப்பட்ட நடராஜனாக மன நிறைவின்றியே அவர் வாழ்க்கை முடிவடைந்தது என்பதுதான் சோகம்.
பல முகங்கள் கொண்ட நடராஜனுக்கு, “ஜெயலலிதாவின் ஆரம்ப கால ஆட்சியைப் பின்னால் இருந்து இயக்கிய ‘நிழல் மனிதர்’ என்ற பட்டமும் பலமாகவே உண்டு. ஒருகட்டத்தில் அவருடைய போயஸ் தோட்ட தொடர்புகளை முற்றிலுமாகவே அறுக்க முடிவெடுத்த ஜெயலலிதா... தன் தோழி சசிகலாவுடன் நட்பைத் தொடருவதற்குப் போட்ட முக்கிய நிபந்தனையே, “நடராஜனுடன் ஒட்டும் கூடாது... உறவும் கூடாது’’ என்பதுதான்.
சசிகலாவின் ரத்த உறவுகளை தாராளமாகப் போயஸ் தோட்டத்துக்கு அனுமதித்த ஜெயலலிதா, நடராஜன் என்ற பெயரைக்கூட தன் காதுபட உச்சரிக்கக் கூடாது என்று ஒரு கட்டத்தில் உத்தரவே போட்டார்.
ஆனாலும், தன் மனைவி மீதான தனது கரிசனத்தையும், உரிமையை யும் முக்கியமான பல கட்டங்களில், அறிக்கைகளாகவும் பேட்டியாகவும் நடராஜன் வெளிப்படுத்திக் கொண்டேதான் இருந்தார்.