நீ தெரிஞ்சேதான் உதைச்சே... நல்லாவும் உதைச்சே


ரத்தக்கண்ணீர் நாடகம் 1949-ம் வருடம் பொங்கல் அன்று திருச்சியில் அரங்கேறியது. அடுத்துவந்த மூன்று ஆண்டுகளில் ஐநூறு மேடைகளைக் கண்டுவிட்டது. அதன் பிரபலத்தைக் கண்ட நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் 1953-ல்அதைப் படமாக்கும் உரிமையை வாங்கினார்.

கதாநாயகன் எம்.ஆர்.ராதாவுக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம். அரசியல், நாடகம் ஆகியவற்றில் பெரியாரின் துருவேறாத போர்வாளாக மின்னிக்கொண்டிருந்த ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவுடன் நடிக்க அன்று எந்த முன்னணிக் கதாநாயகியும் முன்வரவில்லை. மிடுக்கும் துடுக்கும் தெறிக்கும் பகட்டான பாலியல் தொழிலாளி ‘காந்தா’வாக நடிக்கும் துணிவு யாருக்கும் இல்லை. இறுதியில், படத்தின் இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு இருவரும் ஓர் அறிமுகக் கதாநாயகியைத் தேர்வுசெய்தார்கள். அவர்தான் எம்.என்.ராஜம்.

அண்ணா கதை, வசனம் எழுதி, கலைவாணர் நடித்து, தயாரித்த ‘நல்லத்தம்பி’ படத்தை இயக்கிவர்கள் இதே கிருஷ்ணன் – பஞ்சு இரட்டையர்கள். அந்தப் படத்தில் டி.ஏ.மதுரத்தின் தங்கையாக 12 வயது சிறுமி எம்.என்.ராஜத்தை திரைக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்கள். அவர் குமரியாகி ‘என் தங்கை’, ‘மனிதனும் மிருகமும்’ போன்ற படங்களில் நகைச்சுவை குணச்சித்திரமாக சிறு கதாபாத்திரங்களில் தோன்றிக்கொண்டிருந்தார். ராஜத்தின் திறமை மீது இயக்குநர்களுக்கு நம்பிக்கை இருந்தது.

படப்பிடிப்பு தொடங்கியது. பூங்காவில் எம்.ஆர்.ராதாவுடன் பேசிக்கொண்டு வருவதுபோல முதல்நாள், முதல் காட்சி. 7 வயதிலிருந்து நாடகத்துறையில் கிடைத்த பயிற்சி காரணமாக பயமின்றி நடித்தார் ராஜம். “ரீடேக் வாங்காம நடிக்கிறே.. கொஞ்சம் அசந்தா எனக்கே டேக்கா கொடுத்துடுவ போலிருக்கே….! ஆல் த பெஸ்ட்… ஆல் த பெஸ்ட்..!” என்று பாராட்டினார் எம்.ஆர். ராதா.

x