குரங்கணி சித்தன் கதை - 2


சித்தர் பூமி!

மக்கிப்போன இலை தழைக மட்டும்

மண்ணுக்கு உரமில்லை...

வேதாந்த சித்தாந்த தத்துவக் கதைகளும்

மண்ணுக்கு உரமாச்சு!

பூமியில பொதஞ்ச கதை

மறுபடியும் கருவாச்சு..!

நல்ல சனங்க போற பாதையில

நல்ல விதை முளைக்கும்...

சரித்திரத்தச் சொல்லுகிற

சாட்சியாக இருக்கும்!

அத்துவானக் காடு... கன்னியிருட்டு விலகிருச்சு.

பப்பாளிப் பழத்தைப் பிழிஞ்சு ஊத்தின மாதிரி, வானம் ‘செவசெவ’னு தெளியுது!

காட்டுக்கு நடுவாந்திரமா, கொட்டக்குடி ஆத்துக்கரையில ஒரே ஒரு குடிசை மட்டும் அமைதியா இருக்கு. ராத்திரி பூரா பேஞ்சு ஓஞ்சு போன மழைத் தண்ணி, மரஞ்செடி கொடியிலிருந்து ‘சொட் சொட்’னு குடிசை மேல விழுற சத்தம் கேக்குது.

ஈரம் படிஞ்சுபோன வானமா இருக்கிறதால, ஆதிவாசி சாதி சனங்க அங்கன அங்கன குளிர்காய்றதுக்காக வெச்ச நெருப்புப் புகை, மேலே எழும்பாம மரங்களுக்குள்ளேயே பரவி, பனிமூட்டத்தோடு மிதந்துக்கிட்டு இருக்கு..!

‘டிர்ர்ர்ரிட் டிர்ர்ர்ரிட்’, ‘கூர்க்கூர்க்’ன்னு பறவைகள் ஒலி.

‘விடிஞ்சு எந்திரிச்சா, இந்த பூமிக்கு ஏதாவது செய்யணுமே’னு பறவைங்க எல்லாம் பழத்தைத் தின்னுப் போட்டு, ஈர மண்ணுல கொட்டைகளைப் போடுற சத்தம் கேக்குது..!

காட்டுக் கோழிக, றெக்கைகளை உலுப்பி ரெண்டு மூணு தடவ காத்துல ‘வெடவெட’னு விசிறிட்டுக் கக்கத்துல இடுக்கிக்கிற சத்தம் கேக்குது..!

மேய்ச்சலுக்கும் வேட்டைக்கும் தயாரான மானும் புலியும், முன்னங்கால்களையும் பின்னங்கால்களையும் முடிஞ்சளவு நீட்டி வளச்சு, முறுக்கி சொடக்கு விட்டு, நிமிந்து நின்னு, தலையை உலுப்பிக் காதுகளை ரெண்டு பக்கமும் ‘படபட’னு அடிச்சிக்கிற சத்தம் கேக்குது..!

குரங்குக நாவல் மரத்துலயும், கோங்கு மரத்துலயும் அணி அணியா பிரிஞ்சு உக்கார்ந்துக்கிட்டு, யாருக்கோ தகவல் சொல்ற மாதிரி ‘காவ் குர்ர்ர்’னு ஒலி எழுப்புறது கேக்குது..!

இதயெல்லாம் கேட்டுக் குடிசைக்குள்ள தவத்திலிருந்த ரெண்டு கண்கள் மட்டும் மெல்ல அசையிது..!

குடிசைக்கு வெளியே, ‘‘சித்தா.. சித்தா...!’’ - ஒரு மனுசன் சத்தம் கேட்குது!

நம்ம மனுசப் பய இருக்கானே... தேனீக்கள் பாடுபட்டுச் சேர்த்த தேனை எடுக்க, காலங்காத்தால தீப்பந்தத்தோட பாறையிலயும், மரத்துலயும் ஏற ஆரம்பிச்சுட்டான்.

தேனெடுக்கப் போன இடத்துல, தீப்பந்தத்தோட மரத்துல ஏறுன ஆதிவாசி தம்மாவை விட்டுட்டு, கீழே கலையத்தோட நின்னுக்கிட்டிருந்த அவம் பொண்டாட்டி பொம்மியை, விரட்டி விரட்டிக் கன்னத்துலயும் மார்புலயும் கொட்டினது கதம்ப வண்டு... விஷவண்டு..! ‘செவேர்’னு தடிச்சுப் போச்சு!

குடிசை வாசல்ல வந்து நின்ன தம்மாவும், பொம்மியும், ‘‘சித்தா.. சித்தா..!’’னு அலறும் சத்தங்கேட்டு வெளியில வந்தவன்... யாரு?

சுருள் சுருளா தலைமுடி, கருகருன்னு தாடி, இருட்டு மேகத்துக்கு இடைவெளியில எட்டிப் பார்க்கிற நிலா மாதிரி கண்கள், குடிசை வாசல்ல குனிந்து வெளிய வந்து, நிமிர்ந்து பார்க்கும்போதுதான் அவனோட உசரம் தெரிஞ்சது!

குரங்கணி சித்தன்!

பொம்மியோட கன்னத்தையும் மார்பையும் பார்த்ததுமே தெரிஞ்சுக்கிட்டான்... கதம்ப வண்டு கடிச்சிருக்குன்னு!

குடிசைக்கு எதிர்ல இருந்த பெரிய அத்தி மரத்தைப் பார்த்து நடந்தான். அந்த மரத்தை ரெண்டு கையால கட்டிப் பிடிச்சு ஆரத் தழுவி, ‘‘தாயே..! பல கோடி உயிர்களை காப்பாத்திக்கிட்டு இருக்கிற... அந்த வல்லமையை எனக்கும் தா!’’னு சொல்லிட்டு, பொம்மி பக்கம் திரும்பினான் சித்தன்.

இயற்கையோடு ஒன்றிக் கலந்த சித்தனுக்கு, தன் தவ வலிமையால கெடச்ச பேராற்றலாலும், வீரிய சிந்தனையாலும் அந்தக் காட்டுவாசிகளை வழிநடத்துற சக்தி கிடச்சது. படைப்புகளின் ரகசியம் அறிஞ்சவன். நினைக்கிற சங்கதிகளைப் பகுத்தறிந்து பேசத் தெரிஞ்சவன். இன்ன இன்ன நோய்க்கு இன்ன இன்ன மூலிகைதான் மருந்தா வேலை செய்யும்னு தெளிஞ்சவன்.

பொம்மியைப் பார்த்துச் சிரிச்ச சித்தன், ‘‘துன்பம் என்று வருவோர்க்கு இன்பம் பயக்கவே தும்பை என்று பேர் படைத்தாய்!’’னு சொல்லிக்கிட்டே, குடிசைக்குப் பின்னால இருந்த தும்பைச் செடியிலிருந்து, தும்பை இலையை லாவகமாப் பறிச்சு எடுத்து வந்தான்.

‘‘வலி தாங்கல சித்தா... அம்மே!’’

‘‘கவலைப்படாதே பொம்மி... இந்தக் கல்லு மேல இடது பக்கமா ஒருக்களிச்சுப் படு’’னு சொன்னான் சித்தன்.

தும்பை இலையைத் தன்னோட நடு உள்ளங்கையில வெச்சு, கசக்கிப் பிழிஞ்சு, பொம்மியோட வலது கன்னத்துலயும் மார்புலயும் பூசினான்.

பொம்மி, கண்களை மூடி ஏதோ சுகத்தை அனுபவிக்கிற மாதிரி நாக்கை நீட்டினாள்.

‘‘ஆங்கடி... நாக்கை உள்ளே போடு. வாய்ல ஊத்திருவேன். தும்பைச் சாறு... வலி குறையும், வீக்கம் வத்தும், விஷம் முறியும்! கவலைப்படாம வீட்டுக்குப் போகலாம்... ஆமா... உன் ரெண்டாவது புருஷன் எங்க போயிருக்கான்?’’ - சிரிச்சுக்கிட்டே கேட்டான் சித்தன்.

‘‘அவரு வேட்டைக்குப் போயிருக்காரு!’’

சித்தன், தம்மாவின் பக்கம் திரும்பி, ‘‘ஏன் தம்மா, நீயும் வேட்டைக்குப் போகலாமே?’’னு கேட்டான்

‘‘மாட்டேன்... மாட்டேன். யானைச் சத்தத்துக்கு என் மெய் நடுங்குது. ஆந்தைச் சத்தத்துக்கு என் மெய் கூசுது!’’

‘‘அதுக்குத்தான் மாமிசம் சாப்பிடணும்... வேட்டைக்குப் போறது உன் தர்மம். கீரையைச் சாப்பிடுறது உன் உடம்புக்குடா... மாமிசம் சாப்பிடறது உன் இனத்துக்குடா! உன் இனத்தைக் காபந்து பண்ண வேண்டாமா? நீ வேட்டைக்குப் போகலன்னா, மிருகம் உன்னை விழுங்கி எலும்பைத் துப்பிடும்!’’

‘‘பயமா இருக்கு சித்தா!’’

‘‘ஏன் பயப்படணும்..? கடைசி வரை பாதுகாப்பா குகையில இருக்கணும்னு நெனக்கிறவன், உயிர் வாழத் தகுதி இல்லாதவன். பெத்த தாயோட மடிக்குள்ளும், கட்டின தாரத்தோட மடிக்குள்ளும் தங்கி வாழவா பொறந்தோம்? அது சரி... தேன் எடுக்கப்போன இடத்துல கதம்ப வண்டு கொட்டின பிறகு, தீப்பந்தத்தை அப்படியே போட்டுட்டு ஓடி வந்தியா... அத அணைச்சுட்டு வந்தியா..?’’

பதறிப்போன தம்மா, ‘‘ஆங்கடி! அணைக்காம போட்டுட்டேன்... காடு எரிஞ்சுப் போயிருக்குமே!’’

மலைமேல பாத்தான்.

‘‘பதற்றப்படாதே... உன்னால காடு எரியும் சமயம் இப்ப வரல! விதி வலியது. அதுக்குத்தான் மழை வந்துச்சு!’’ - தன்னோட ரெண்டு கையையும் மேல தூக்கிப் பிச்சை எடுக்கிற மாதிரி ஏந்தினான் சித்தன். மரத்திலிருந்து மழைத் தண்ணியோட மிச்சம் அவன் கைல ‘சொட்டு’னு விழுந்துச்சு. அதை உச்சந்தலைல தேய்ச்சிக்கிட்டான்.

‘‘இதெல்லாம் உனக்கு யார் சொல்லிக் குடுத்தது சித்தா?’’

‘‘நுண்ணிய பொருளை பருப்பொருளாக்கிப் பார்... பருப்பொருளுக்குக் காரணம் கண்டுபிடி!’’

‘‘புரியல..!’’

‘‘ஹோ... எனக்குச் சொல்லிக் குடுத்தது... இந்த ஆறு, இந்த மரம், அந்தப் பூ, அந்தக் காத்து..!’’

‘‘புரியல சித்தா... விடு!’’

சித்தனையே வச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டே படுத்திருந்தாள், பொம்மி.

அவளைக் கவனிச்ச சித்தன், ‘‘பொம்மி, எழுந்து உட்காரு... ஏன் உனக்கு குழந்தை பிறக்கலனு தெரியுமா?’’

-சொல்றேன்...

- வடவீர பொன்னையா

x