தாவோ: பாதை புதிது - 4


மனித இயல்பை கோபுலு அளவுக்கு கார்ட்டூன்களில் சித்தரித்தவர்கள் தமிழில் மிகவும் குறைவு. ஆட்டை வைத்து அருமையான கேலிச்சித்திரம் ஒன்று வரைந்திருப்பார் கோபுலு. ஒரு முள்வேலிக்கு வெளியே உள்ள சிறு செடி, அருகே ஒரு ஆடு. தனக்கு அருகே உள்ள செடியைத் தின்னாமல் வேலிக்குள் உள்ள செடிகளைத் தின்ன ஆடு முயற்சித்துக்கொண்டிருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக உடலை நுழைத்து முள்வேலிக்குள் ஆடு சென்றுவிடும்.

உள்ளே சென்ற பின் அங்குள்ள செடிகளைத் தின்னாமல் வேலிக்குள் தலையை நுழைத்து வெளியே உள்ள செடியைத் தின்பதற்கு முயலும். ஆடு வெளியே இருந்தபோது எது உள்ளே இருக்கும் செடியை நோக்கி இழுத்தது? ஆடு உள்ளே இருந்தபோது எது வெளியே இருக்கும் செடியை நோக்கி அதனை இழுத்தது? வேலி! ஒரு வேலி எதிரெதிர்த் திசையில் இருப்பவற்றை அரியவையாக ஆக்குகிறது; அடைவதற்கு ஆசைப்பட வேண்டியவையாக ஆக்குகிறது. அந்த வேலியை நீக்கச் சொல்கிறது தாவோயிஸம்! மனதுக்குள் இருக்கும் வேலியை நீக்குவது என்று இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த அதிகாரத்தில் அழகு-அசிங்கம், நன்மை-தீமை போன்ற நேரெதிர் நிலைகள் குறித்துப் பார்த்தோம். எதையுமே எதிரெதிரானதாக, ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாக தாவோ கருதுவதில்லை, எல்லாமே வானவில் தொடர்ச்சிதான் என்பதையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகவே இந்த அதிகாரத்தையும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

அதிகாரம் ஒரு இடத்தில் குவிந்து கிடப்பது எப்படி ஒரு நாட்டுக்குப் பெருங்கேடு விளைவிக்குமோ அதேபோல்தான் திறமை, புகழ், செல்வம் போன்றவையும் ஒரே இடத்தில், ஒரே நபரிடத்தில் குவிந்துகிடப்பதும். அதிகாரம் உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையில், திறமை இல்லாதவர்களுக்கும் இருப்பவர்களுக்கும் இடையில், புகழ் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையில், செல்வம் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையில் பெரும் சுவர் எழுப்பப்படுகிறது.

இந்தப் பக்கத்தில் இருப்பவர்கள் மறுபக்கத்தில் இருப்பவர்களைப் பார்த்துப் பிரமித்துப் புகழ்கிறார்கள், எரிச்சல் அடைந்து இகழ்கிறார்கள், தங்களைவிட அவர்கள் உயர்வாக இருப்பதாகப் பொறாமை கொள்கிறார்கள். அதேசமயம், தாங்களும் மறுபக்கம் போவதற்காகப் போட்டி போடுகிறார்கள்.

ஆக, இந்தப் பக்கம் இருப்பவர்கள், மறுபக்கம் இருப்பவர்கள் என்ற நிலையைத் தாண்டி... மறுபக்கம் இருப்பவர்கள், மறு பக்கம் இருக்க முடியாதவர்கள் என்ற நிலை ஏற்படுகிறது. இந்தப் பக்கத்தில் இருப்பவர்கள் ஆடம்பரமாக வாழ்ந்தால் மறுபக்கத்தில் சிலருக்கு வியப்பு ஏற்படுகிறது; சாமானியர்களைப் போல எளிமையாக இருந்தால் அதிலும் இன்னும் சிலருக்கு வியப்பு ஏற்படுகிறது.

மறு பக்கத்தில் இருப்பவர்களில் செல்வம், புகழ், திறமை, அதிகாரத்தைக் குவித்துக்கொண்டவர்கள் முழுக்க முழுக்கத் தங்களின் நலன் சார்ந்தே, தங்களை மையமாகக் கொண்டே இயங்க ஆரம்பிக்கிறார்கள்.

அவர்கள் அப்படித் தங்களைப் பெரிதாக நினைத்துக்கொள்வதற்கு, தங்களை மையப்படுத்தி இயங்குவதற்கு அந்தப் பக்கத்தில் உள்ளவர்களின் வியப்பு, புகழ்ச்சி, பொறாமை, போட்டி போன்றவை பங்களிக்கின்றன. இதனால், சமூகத்தில் மேலும் மேலும் பிளவு ஏற்பட்டுக்கொண்டே போகிறது.

நல்ல தச்சர் செய்த நாற்காலிக்காக யாரும் அவரைப் புகழ்ந்து பதாகைகள் வைப்பதில்லை, அவருக்கென்று ரசிகர் மன்றம் வைப்பதில்லை. நம்மைப் பொறுத்தவரை நல்ல நாற்காலி செய்வது வியப்புக்குரிய விஷயம் இல்லை.

உண்மையில், ஒரு நடிகர் பத்து வேடங்களில் நடிப்பதற்கு எந்த அளவுக்குத் தேவைப்படுகிறதோ அந்த அளவுக்குத் திறமை ஒரு நல்ல நாற்காலி செய்வதற்கும் தேவைப்படுகிறது. இதனால், தாவோ எதையும் வியந்துபார்க்கக் கூடாது என்று சொல்வதாக அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. வியப்பு என்பதும் இயல்பே. அது மிதமான நிலையில் இருக்க வேண்டும். அதீதமாகும்போதுதான் தாவோ கூறுகிற எதிரெதிர் நிலைகள், பிளவுகள் ஏற்படுகின்றன.

தனிமனிதரை நோக்கி எந்த அளவுக்குப் பேசுகிறதோ அதே அளவுக்கு ஆட்சியாளரையும் நோக்கி ‘தாவோ தே ஜிங்’ பேசுகிறது. இந்த நூல் சித்தரிக்கும் ஆட்சியாளர் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் அல்ல; அவர் ஆள்கிறாரா என்றே மக்களால் கண்டறியப்படாத வகையில் நாட்டை ஆள்பவர். அவர் அடிக்கடி பெரிய உரைகள் ஆற்றுவதில்லை, பெரிய நம்பிக்கைகள் விதைப்பதில்லை, பெரிய திட்டங்களைக் கொண்டுவருவதில்லை, தன் ஆளுகையை நிலைநாட்ட அயல்நாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை, போர்களில் ஈடுபடுவதில்லை.

இயல்பாக மக்களுக்குக் கிடைக்க வேண்டியது எந்தத் தடையுமின்றிப் போய்ச் சேர்கிறதா என்பதைக் கண்காணிப்பவர்தான் தாவோவின் ஆட்சியாளர். எந்தக் குறுக்கீடும் இல்லையென்றால் எல்லாமே மக்களிடம் இயல்பாகவே போய்ச்சேர்ந்துவிடும். அதற்கென்று நிர்வகிக்கப்படும் அதிகாரிகள், ஆட்சியாளர்கள்தான் பெரிதும் குறுக்கீடாக இருப்பது லாவோ ட்சுவின் காலத்திலிருந்து நம் காலம்வரை நடக்கிறது.

தாவோவின் ஆட்சியாளரோ ஒரு ஞானி. நாம் பார்க்கும் நம் காலத்து கார்ப்பரேட் ஞானிகளைப் போல் அல்ல. ஞானி என்றே கண்டுபிடிக்க முடியாத சாதாரணர்தான் தாவோவின் ஞானி-ஆட்சியாளர்.

மனதுக்கும் வயிறுக்கும் நேரெதிர் முரண்பாடு ஒன்றுண்டு. மனதில் எண்ணங்கள் நிறைந்து இருக்கும்போது ஆசை, கோபம் போன்றவற்றின் அதீத நிலையிலேயே சஞ்சரித்துக்கொண்டிருப்போம். குழப்பங்கள், சண்டைகள், சந்தேகம் அதிகமாகும். இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்போம். ஆனால், வயிறு நிறைந்தது என்றால் ‘போதும் போதும்’ என்றுதான் சொல்வோம். மனம் காலியாக இருக்கும்போது ஆசை, கோபம், குழப்பங்கள், பிரச்சினைகள் இருக்காது. ஆகவேதான், ஞானி மக்களின் மனங்களைக் காலியாக்கியும் வயிற்றை நிரப்பியும் ஆள்கிறான்.

இதற்கு ஆன்மிகரீதியில் வேறொரு பொருளும் சொல்லப்படுகிறது. மனம் என்பது அறிவுக்கான புலன், வேறுபடுத்திப் பார்ப்பதற்கான புலன். வயிறு என்பதோ இயல்புணர்வின் ஆன்மிகரீதியான மூலாதாரம். மனதையும் அதன் வெளிப்பாடுகளான அகந்தை, லட்சியம் போன்றவற்றையும் தாவோ இயல்பறிவின் வாழ்க்கைக்கு எதிரானவையாகக் கருதுகிறது. லட்சியம் என்பது தன்னைச் சிறந்தவராக, முக்கியமானவராக மற்றவர் முன்னிலையில் காட்டிக்கொள்வது என்கிறது தாவோ. இயல்பாக, தாவோ வழியில் வாழ்க்கையை நடத்துபவர் எந்த லட்சியத்தையும் கொள்வதில்லை.

ஆனால், எல்லாம் இயல்பாக நிறைவேறுகின்றன. வயிறும் எலும்பும் உடலையும் அதன் இயல்புணர்வு சார்ந்த வாழ்க்கையையும் பிரதிபலிப்பவை. மனதும் அகந்தையும் லட்சியமும் இயல்பான வாழ்க்கைக்கு எதிரானவை. ஆகவேதான், தாவோவின் ஞானி வயிறுக்கும் எலும்புக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்.

முக்கியமாக, செயல்படாமை மூலம் மக்களை ஆள்கிறார் தாவோ ஞானி. செயல்படாமை என்றால் என்ன, செயல்படாமல் சும்மா இருப்பதா? குழப்புகிறாரே இந்த லாவோ ட்சு!

அதிகாரம் 3

சான்றோரைப் பெருமைப்படுத்தாமல் இருப்பது

போட்டியிடுவதிலிருந்து மக்களைத் தடுக்கிறது.

அபூர்வமான பொருள்களை

மதிக்காமல் இருப்பது

திருடுவதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது.

விரும்பத்தக்க விஷயத்தை

வெளிக்காட்டாமல் இருப்பது

மனம் குழம்புவதிலிருந்து

அவர்களைத் தடுக்கிறது.

எனவே, ஞானி மக்களை ஆள்கிறான்,

அவர்களின் மனங்களைக் காலியாக்கியும்

அவர்களின் வயிறுகளை நிரப்பியும்;

அவர்களின் லட்சியங்களை நலியவைத்தும்

எலும்புகளை வலுவாக்கியும்;

எனவே, ஞானி

மக்களை எப்போதும் தடுக்கிறான்,

கெட்டது எதுவென்று தெரிந்துகொள்வதையும்

நல்லது எதுவென்று ஆசைப்படுவதையும்.

இவ்வாறு, தந்திரசாலிகள் செயல்பட

ஞானி வாய்ப்பு எதுவும் தருவதில்லை.

எனவே, ஞானி

செயல்படாமையினால் ஆள்கிறான்.

ஆகவே, ஆளாப்படாததென்று

உலகில் எதுவுமில்லை.

-2,500 ஆண்டுகளுக்கு முன் லாவோ ட்சு

எழுதிய ‘தாவோ தே ஜிங்’,

தமிழில்: சி.மணி

லாவோ ட்சுவும் கணியன் பூங்குன்றனாரும்

தாவோ பரிந்துரைக்கும் சமூகத்தில் யாரும் உயர்ந்தவர்கள் இல்லை, யாரும் தாழ்ந்தவர்கள் இல்லை; யாரையும் வியந்து பார்க்கத் தேவையில்லை, யாரையும் இளக்காரமாகப் பார்க்கவும் தேவையில்லை.

‘சான்றோரைப் பெருமைப்படுத்தாமல் இருப்பது போட்டியிடுவதிலிருந்து மக்களைத் தடுக்கிறது’ என்ற வரிகள் நமக்கு கணியன் பூங்குன்றனாரை நினைவுபடுத்துகின்றன. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று தொடங்கும் புறநானூற்றின் 192-வது பாடலால் புகழ்பெற்றவர் அவர். அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியையும் தாவோயிஸத்தின் விளக்கமாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பாக, ‘பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்ற வரிகள் இங்கு கொடுக்கப்பட்ட ‘தாவோ தே ஜிங்’ பாடலின் முதல் இரண்டு வரிகளோடு முற்றிலும் பொருந்திப்போகின்றன. லாவோ ட்சுவுக்கு சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர் கணியன் பூங்குன்றன் என்றாலும் சீனச் சிந்தனைக்கும் தமிழ்ச் சிந்தனைக்கும் ஒரு தொடர்ச்சியை நம்மால் காண முடிகிறது.

(உண்மை அழைக்கும்...)

-ஆசை

x