‘ஸார்… திஸ் ஈஸ் சம்திங்க் அப்நார்மல்’ என்று சொன்ன தியானேஷை மஹிமாவும் கெளசிக்கும் நடுங்கும் பார்வையோடு ஏறிட்டார்கள்.
‘‘தியானேஷ்… வாட் டூ யூ மீன்..!’’
‘‘ஸார் திஸ் ஈஸ் ஸீம்ஸ் டு பி சி.ஐ.ஆர்’’
‘‘நீங்க என்ன சொல்லவர்றீங்கன்னு எனக்குப் புரியலை’’
மஹிமாவின் கம்ப்யூட்டர் திரையினின்றும் பார்வையை நகர்த்திக் கொள்ளாமலேயே தியானேஷ் பேசினார்.
‘‘ஸார்… மஹிமாவோட அறை முழுவதும் இப்படி சிவப்பு மயமாய் இருப்பதற்குக் காரணம் இன்ஃப்ராரெட் கதிர்கள். இதுவும் ஒருவகையான சி.சி.டி.வி. காமிரா ஜாமர்தான். இது மாதிரியான ஜாமர்கள் வெளிநாடுகளில்தான் இருக்கும்… இந்த ஜாமைரை ‘சி.ஐ.ஆர்.’ன்னு குறிப்பிடுவாங்க. இந்த எழுத்துக்களின் விரிவாக்கம் கார்பன் இன்ஃப்ராரெட் எமிட்டர்ஸ். இந்த ஜாமர் டிவைஸ் ஒருத்தரோட கையில் இருந்தா எப்படிப்பட்ட சி.சி.டி.வி. காமிராக்களும் ஊமையாயிடும்’’
கெளசிக் தன் ஸ்பெக்ஸைக் கழற்றி மேஜையின் மேல் வைத்துவிட்டு நெற்றியைப் பிடித்துக்கொண்டார். அறையின் ஏ.ஸி. குளிரையும் மீறி அவருடைய முன் வழுக்கை வியர்த்து கண்ணாடித் தாளாய் மின்னியது. சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு தியானேஷ் நிமிர்ந்தார்.
‘‘இது ஒரு ஹை டெக் ஜாமர் இல்லையா?’’
‘‘எஸ் ஸார்’’
‘‘இப்படிப்பட்ட ஜாமரை நீங்க நேர்ல பார்த்திருக்கீங்களா தியானேஷ்?
‘‘இல்ல ஸார்… ‘டே ஆஃப்டர் டுமாரோ’ என்கிற ஐ.டி.புக்ல இந்த சி.ஐ.ஆர். ஜாமர் பற்றிய கட்டுரை ஒண்ணைப் படிச்சேன். ஒரு அறைக்குள்ளே இருக்கிற முக்கியமான டாக்குமென்டேஷனையோ ரகசியமான ஃபைலையோ எடுக்கறதுக்கு முந்தி அந்த அறையை ‘இன்ஃப்ரா ரெட்’ன்னு சொல்லப்படுகிற அகச்சிவப்பு கதிர்களால் நிரப்பிட்டு அதுக்கப்புறமாய் சி.சி.டி.வி. காமிரா பயம் இல்லாமலே வேண்டப்பட்ட ஃபைலையோ, டாக்குமெண்ட்டையோ அந்த நபர் தேடலாம்’’
அதுவரைக்கும் எதுவும் பேசாமல் இருள் மண்டிய முகத்தோடு நின்றிருந்த மஹிமா தியானேஷிடம் திரும்பினாள்.
‘‘உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கலாமா?’’
‘‘ப்ளீஸ்…’’
‘‘இப்ப நீங்க சொன்ன இந்த சி.ஐ.ஆர். ஜாமர் டிவைஸ் ஒரு புது விதமாய் இருக்கு. நான் இதுவரைக்கும் கேள்விப்பட்டதில்லை. நம்ம கம்பெனியில் வேலை செய்யற யார்க்காவது அந்த டிவைஸ் பத்தி தெரியுமா? யாராவது அதைப்பத்தி உங்ககிட்ட பேசியிருக்காங்களா..?’’
‘‘இல்லை மிஸ் மஹிமா…’’
‘‘சரி… உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கா?’’
‘‘இந்தக் கம்பெனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்க வேலை செய்யறாங்க… எல்லா மாநிலத்தைச் சேர்ந்தவங்களும் இருக்காங்க. யார் யாருக்கு இந்த சி.ஐ.ஆர். பற்றி தெரியும்னு எனக்குத் தெரியாது. வேணும்ன்னா ஒரு என்கொய்ரி பண்ணிப்பார்க்கலாம்!’’
‘‘வேண்டாம்’’ என்று தலையாட்டிய கெளசிக் தொடர்ந்தார்.
‘‘இது சம்பந்தமாய் ஒரு என்கொய்ரி பண்ணினா சம்பந்தப்பட்ட நபர் ‘அலர்ட்’ ஆகி தன்னை வெளிப்படுத்திக்காமல் இருக்க வாய்ப்பு அதிகம். மஹிமாவோட அறைக்குள் வந்த நபரின் நோக்கம் ‘அரேபிய ரோஜா’ சம்பந்தப்பட்ட ப்ராஜக்ட் ஃபைல் எடுத்துட்டு போக வந்ததாகக்கூட இருக்கலாம்… அது கிடைக்காமல் போகவே கம்ப்யூட்டரை ஓப்பன் பண்ணி வார்னிங் கொடுத்து இருக்கலாம்’’
தியானேஷ் திட்டவட்டமாய் சொன்னார். ‘‘ஸார்! என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த சம்பவத்துல ஒரே ஒரு விஷயம் மட்டும் ‘அக்மார்க்’ உண்மை..!’’
‘‘என்ன?’’
‘‘அறைக்குள்ளே வந்த நபர் ஆணோ பெண்ணோ தெரியாது. ஆனா அந்த நபர் மிஸ் மஹிமாவுக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட நபராய்தான் இருக்கணும். ஏன்னா அந்த நபர்க்கு ‘பாஸ்வேர்ட்’ தெரிஞ்சிருக்கு…’’
‘‘என்னோட பாஸ்வேர்ட் யார்க்கும் தெரிய வாய்ப்பு இல்லையே… ஒவ்வொரு மாசமும் என்னோட பாஸ்வேர்ட்டை மாத்திக்கிட்டே இருப்பேன். அதை என்னோட பர்சனல் டைரியில் கூட எழுதி வைக்கமாட்டேன். பட்… எனக்கு இதில் இருக்கிற ஆச்சர்யமே வேற…’’
‘‘என்ன?’’
‘‘அரேபிய ரோஜா’ ப்ராஜக்ட்டுக்காக துபாய் போகிற விஷயம் எனக்கும் நம்ம ஈ.டி. ஸார்க்கு மட்டும்தான் தெரியும். ஆனா நான் ஈ.டி. ரூம்ல பேசிட்டிருக்கும்போதே என்னோட ரூமுக்கு யாரோ வந்து இருக்காங்க. எதையோ தேடியிருக்காங்க. தேடிய எதுவும் கிடைக்காததினால என்னுடைய
பி.சி.யைக் லாக்-இன் பண்ணி என்னை பயமுறுத்துகிற மாதிரி வாசகங்களை டைப் பண்ணியிருக்காங்க..’’
கெளசிக் மஹிமாவை ஏறிட்டார்.
‘‘அம்மா மஹி..! இந்த அரேபிய ரோஜா ப்ராஜக்ட்டிலிருந்து நீ விலகிடும்மா… நான் ஜென்ட்ஸ் யாரையாவது செலக்ட் பண்ணி துபாய்க்கு அனுப்பிடறேன்..!’’
மஹிமா லேசாய் சிலிர்த்தாள். முகம் மாறியிருந்தது.
‘‘என்ன ஸார்… சொன்னீங்க… ஜென்ட்ஸ் யாரையாவது துபாய்க்கு அனுப்பறீங்களா..?’’
‘‘ஆமாம்மா… இவ்வளவு பகிரங்கமாய் புத்திசாலித்தனத்தோடு யாரோ உனக்கு எதிராய் செயல்பட்டிருக்காங்க. நீ துபாய்க்கு போறதுல அவங்களுக்கு விருப்பம் இல்லை போலிருக்கு… அதனால..!’’
‘‘என்ன ஸார் பயந்துட்டீங்களா?’’
‘‘இது பயம் இல்லேம்மா… ஒரு முன்னெச்சரிக்கை யோடு கூடிய நடவடிக்கை… நீ நாளைக்கு துபாய் போய் ஏதாவது அசம்பாதவிதம் நடந்துச்சுன்னா பதில் சொல்ல வேண்டியவன் நான்தாம்மா…!’’
‘‘ஸார் ஸார்… உங்களுக்கு இருக்கிற பயம் எனக்கு இல்லை… இந்த அரேபிய ரோஜா ப்ராஜக்ட் நம்ம கம்பெனிக்கு கிடைச்சது நமக்கு காம்படீட்டர்ஸாய் இருக்கிற எந்த ஒரு கம்பெனிக்கோ பிடிக்கலை. ப்ராஜக்ட்டை முடக்கறதுதான் அவங்க நோக்கம். இது ஒரு கோழைத்தனமான பயமுறுத்தல். திஸ் ஷுட் நாட் பி கன்ஸிடர்ட்..!’’
‘‘அம்மா… மஹி.. நான் என்ன சொல்ல வர்றேன்னா..?’’
‘‘ப்ளீஸ்… என்னை கன்வின்ஸ் பண்ணாதீங்க ஸார்… இந்த ‘அரேபிய ரோஜா’ ப்ராஜக்ட் என்னோட பிக் ட்ரீம். இந்த ப்ராஜக்ட்டுக்காக எத்தனையோ ராத்திரிகளை பகல்களாய் நினைச்சு என்னோட உழைப்பைக் கொட்டியிருக்கேன். இது மாதிரியான மிரட்டல்களையெல்லாம் பார்த்து பயந்தா நம்மால எதையும் சாதிக்க முடியாது ஸார். நான் துபாய் போக ரெடி. டிக்கெட்டுக்கும் விசாவுக்கும் ஏற்பாடு பண்ணுங்க… பை த பை... இந்த விஷயம் என் வீட்ல இருக்கிற யார்க்கும் தெரிய வேண்டாம். அதேமாதிரி கனடாவில் இருக்கிற என்னோட வுட் பி சகாதேவுக்கும் தெரிய வேண்டாம்.’’
‘‘மஹி..! அவசரப்படாதேம்மா… எதுக்கும் ரெண்டு நாள் யோசி… எந்த ஒரு மிரட்டலையும் சுலபமாய் எடுத்துக்கக்கூடாது. இட் ஷுட் நாட் பி இக்னோர்ட்…’’
கெளசிக் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மஹிமாவின் செல்போன் மெஸேஜ் வந்ததற்கு அறிகுறியாய் அலர்ட் டோனை வெளியிட்டது. செல்போனை எடுத்து மெஸேஜ் ஆப்ஷனுக்குப் போய் பார்த்தாள். இரண்டே வரிகள்.
ஹாய் மஹி!
உன்னோட ‘வாட்ஸ் அப்’க்கு இரண்டு போட்டோக்கள் அனுப்பி இருக்கிறேன். யார்க்கும் தெரியாமல் பார்த்து ரசிக்கவும்.
மெஸேஜை அனுப்பியது யார்? மஹிமா தேடினாள்.
பெயர் இல்லை.
ஒரு இது எண்.
எகிறி படபடக்கும் இதயத்தோடு வாட்ஸ் அப்புக்கு போய் முதலாவதாய் வந்து இருந்த அந்த எண்ணைத் தொட்டாள்.
அடுத்த விநாடி இரண்டு போட்டோக்கள் உற்பத்தியாகி பக்கம் பக்கமாய் நெளிந்தன.
முதல் போட்டோவில் எமிரேட் விமானத்தின் ஸ்டேர் படிகளில் மஹிமா நின்று கையசைத்துக் கொண்டிருந்தாள்.
இரண்டாவது போட்டோவில் அதே எமிரேட் விமானத்தின் படிகளில் நான்கு பேர் ஒரு கண்ணாடி ஃப்ரீஸர் பாக்ஸைத் தூக்கியபடி இறங்கி வர, கண்ணாடி பெட்டிக்குள் கழுத்து வரை வெள்ளைத்துணி போர்த்தப்பட்டு மஹிமா தெரிந்தாள்.
(தொடரும்)