தமிழக விவசாயிகள் போராட்டத்தின் விளைவே மகாராஷ்டிர விவசாயிகள் பேரணி!- அய்யாக்கண்ணு பேட்டி


மகாராஷ்டிர விவசாயிகளின் போராட்டம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. நாசிக்கிலிருந்து புறப்பட்டு 200 கி.மீ. நடைப்பயணமாகவே வந்த விவசாயிகளின் எண்ணிக்கை மும்பையை வந்தடைந்தபோது  ஐம்பதாயிரத்தைத் தாண்டியது. பொது அமைதிக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவோடு நடந்து முடிந்துள்ள இந்தப் போராட்டம், அரசை அடிபணிய வைத்திருக்கிறது.

‘ஆறு மாதங்களுக்குள் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்’ என்று உறுதியளித்திருக்கிறது மஹாராஷ்டிர அரசு. கடந்த ஆண்டு அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் நடத்திய போராட்டத்தோடு, இப்போராட்டத்தை ஒப்பிட்டு ஊடகங்களில் விவாதங்கள் நடந்துவரும் சூழலில், அய்யாக்கண்ணுவிடம் பேசினோம்.

மகாராஷ்டிர விவசாயிகளின் போராட்டம் பெற்ற வெற்றி ஏன் தமிழக விவசாயிகளுக்கு சாத்தியம் ஆகவில்லை?

நான் அப்படிப் பார்க்கவில்லை. எங்களது டெல்லி போராட்டத்தின் விளைவாகத்தான், மகாராஷ்டிராவில் விவசாயிகளிடையே எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் டெல்லியில் 41 நாட்கள் போராடியபோது, எங்கள் போராட்டத்துக்கு நாட்டின் 29 மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் ஆதரவளித்தார்கள். பல்வேறு மாநில விவசாய சங்கத் தலைவர்களை வைத்துத்தான் டெல்லியில் ஒரு கூட்டம் நடத்தினோம். அந்த விழிப்புணர்வால்தான் இன்று இந்தியா முழுக்க விவசாயிகளின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடக்கின்றன.

x