அதிமுக ஆகுமா அமமுக?


தமிழக பட்ஜெட் என்றால், அன்றைய தினம் பட்ஜெட்டைத் தாண்டி வேறு எந்தப் பொருள் குறித்தும் ‘பிரஸ் மீட்’ வைக்கக்கூட அரசியல்வாதிகள் தயங்குவார்கள். ஆனால், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களே பட்ஜெட்டில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு புதிய கட்சித் தொடக்க விழாவைப் பிரமாண்டமாக நடத்தியிருக்கிறார் டி.டி.வி.தினகரன்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும், தனது முதல் அரசியல் பயணத்தை தினகரன் தொடங்கிய அதே மேலூர் திடலில் விழா. காலை 10 மணிக்கு நிகழ்ச்சி என்றால், 7.30 மணிக்கெல்லாம் அரங்கு நிறைந்துவிட்டது. மதுரையில் இருந்து மேலூர் வழியாக திருச்சி செல்லும் சாலையில் தொடர்ந்து 5 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

சில வாரங்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசனின் புதிய கட்சி தொடக்க விழாவுக்குக் கூடிய கூட்டத்தைப் போல இரண்டு மடங்கு கூட்டம் இது. பகல் நேரக் கூட்டத்தில் இவ்வளவு பேர் திரண்டதே பலரை ஆச்சரியப்படுத்தியது.

ஆனால், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமைப்புச் செயலாளர் மேலூர் ஆர்.சாமியோ இன்னும் அதிகமானவர்கள் அரசால் தடுக்கப்பட்டதாகச் சொன்னார். “கூட்டத்துக்கு ஒன்றரை லட்சம் பேர் வந்திருந்தார்கள். போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி பாதிப்பேரை காவல்துறையினர் நகருக்குள்ளேயே அனுமதிக்கவில்லை” என்றார் அவர்.

x