கீழடியை மிஞ்சுமா கொடுமணல் அகழாய்வு?


ஆதிச்சநல்லூர்- கீழடி அகழாய்வை முன்வைத்து ஒருவிதமான அரசியல் பாடாய்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஈரோடு மாவட்டம், கொடுமணலில் அகழாய்வுப் பணிகளை ஜனவரி 16-ம் தேதியிலிருந்து தொடங்கி இருக்கின்றனர் மத்திய தொல்லியல் துறையினர். இரண்டு மாதங்களாக ரகசியம் காப்பதுபோல நடந்து கொண்டிருக்கும் இந்த அகழாய்வில் என்னதான் கிடைத்திருக்கிறது? அறிந்துகொள்வதற்காகக் கொடுமணலுக்கே புறப்பட்டோம். அதற்கு முன்பு, கொடுமணல் ஆய்வைப் பற்றி ஒரு முன்கதைச் சுருக்கம்.

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் கொடுமணல் (கொடுமணம்) சிற்றூர் பாடப்பெற்றுள்ளது. ‘கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு...’ என்று நீள்கிறது கபிலரின் பாடல். ‘கொடுமணல் பட்ட வினை மாண் அருங்கலம் பந்தர்ப் பெயரிய பலர்புகழ் முத்தம்!’ என்கிறார் அரிசில் கிழார். நொய்யலாற்றின் இருகரைகளில் அமைந்துள்ளது இவ்வூர். கபிலர், அரிசில் கிழார் பாடல்கள் கொடுமணலில் செய்யப்படும் கல்மணி அணிகலன்களை புகழ்வதற்கேற்ப இன்றைக்கும் இங்கே உள்ள தோட்டங்காடுகள், ஆற்றங்கரைகள் போன்ற இடங்களில் வண்ண வண்ணக் கல்மணிகள், முதுமக்கள் தாழிகள், பிராமி எழுத்துக்களுடன் கூடிய மண்பாண்ட ஓடுகள் கிடைப்பது வாடிக்கை.

1979-ல் ரோமானிய ஓடு

தமிழகத் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் இங்கே பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றனர். 1979-ல் தமிழக அரசின் தொல்லியல் துறை, மாதிரி அகழாய்வுக் குழியைக் கொடுமணலில் தோண்டியது. அதில் ரோமானிய ஓடு ஒன்று கிடைத்தது. 1985 முதல் தமிழ்ப் பல்கலைக்கழகம் மூன்று பருவங்களில் அகழாய்வுகளை செய்தது.

x