அந்த அறை முழுவதும் அன்பும் அமைதியும் தவழ்கிறது. தனது சிறுநீரகங்களில் ஒன்றை ஓர் இஸ்லாமியருக்குக் கொடுத்துவிட்டு, மருத்துவமனையில் ஓய்வில் இருக்கிறார் கிறிஸ்தவப் பங்குத்தந்தை. இவ்வளவுக்கும் முந்தைய நாள்வரை அந்த இஸ்லாமிய சகோதரரின் முகத்தைக்கூட அவர் பார்த்ததில்லை!
மார்த்தாண்டம் மலங்கரை கத்தோலிக்க மறை மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி சங்க இயக்குநர் பீட்டர் பெனிடிக்ட்ராஜன். குமாரபுரம், கள்ளிகுளம் நைல்நகர் ஆகிய பகுதிகளின் தேவாலயங்களின் பங்குத்தந்தையும் இவரே. “சொந்த ஊர் குமரி மாவட்டம், நடைக்காவு. அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்களாக இருந்தார்கள். சேவை செய்யும் ஆர்வத்தில் இறையியல் கல்வி படித்தேன். சாதி, மதம் கடந்து விளிம்புநிலை மக்களுக்கு உதவுவதே எங்கள் சங்கத்தின் நோக்கம். இறையியல் கல்வி படித்த காலம் தொட்டு இதுவரை 67முறை ரத்த தானம் செய்திருக்கேன். தொடர்ந்து உறுப்பு தானம் செய்யவும் விரும்பினேன். அப்போதுதான் எனது தேவாலயப் பங்குக்கு உட்பட்ட பகுதியில் டார்வின் என்ற இளைஞருக்குச் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டது தெரிந்தது. அவருக்கு சிறுநீரகம் அளிக்க முன்வந்தேன்.
ஆனால், சொந்தங்கள் மட்டுமே அளிக்க முடியும் என்றார்கள். அப்போதுதான் எர்ணாக்குளத்தில் டேவிஸ் சிறமேல் என்னும் பங்குத்தந்தையின் ‘கிட்னி பவுண்டேசன் ஆப் இந்தியா’ பற்றிக் கேள்விப்பட்டேன். அவர்களிடம் விவரத்தைச் சொன்னேன். ஒரு வாரம் ஆலோசனை செய்துவிட்டு, அதன் பின்பும் இதே நிலைப்பாட்டில் இருந்தால் சொல்லுங்கள் என்றார்கள். நான் மூன்று நாட்களில் எனது மாறாத முடிவைச் சொன்னேன்.
“உடனே அவர்கள், ‘வாலிபருக்கு மாற்று ஏற்பாடு செய்துக்கொள்ளலாம். ஆலப்புழாவில் 54 வயதான மைதீன் குஞ்சு என்பவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக அவருக்குச் சிறுநீரகம் கிடைக்கவில்லை. மனைவியின் ரத்த வகையும் அவருக்குப் பொருந்தவில்லை. ரத்த சுத்திகரிப்பிலும் அவரை மீட்க முடியாது. அவருக்கு உதவ முடியுமா?’ என்றனர்.