செம்மீனே செம்மீனே!


ஷீலா என்றால் தெரியாது. ‘செம்மீன்’ ஷீலா என்றால் பளிச்சென்று நினைவில் ஒளிரும் இவரது நிலா முகம்.சாகித்ய அகாடமி விருதால் தேசிய அளவில் புகழ்பெற்று விளங்கிய தகழி சிவசங்கரப் பிள்ளையின் ‘செம்மீன்’ நாவல், 1965-ல் திரைவடிவம் கண்டது.

அதில் ஏழை மீனவரின் மகள் கருத்தம்மாவாக ஷீலாவும்,மொத்த மீன் வியாபாரி பரீக்குட்டியாக மதுவும் வாழ்ந்திருந்தார்கள். மொழிமாற்றம் செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் தென்னகம் முழுவதும் வெளியாகி வெற்றிபெற்றது ‘செம்மீன். அதன்பின் ‘செம்மீன்’ நாயகி மலையாள சினிமாவின் செல்லமாக மாறிப்போனார். இதுவரை 520 படங்களில் நடித்திருக்கும் ஆச்சரியமான ஆளுமை ஷீலா. கதாநாயகியாக மட்டுமே 200 படங்கள். ஆனால், இன்றும் ஷீலாவின் பெயருடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது ‘செம்மீன்’.

ஷீலாவுக்கு முன் பல அழகிய கதாநாயகிகளைக் கண்டிருக்கிறது மலையாள சினிமா. அழகு, நடிப்பு ஆகியவற்றோடு அனைத்து வயதினரையும் ஈர்க்கும் வசீகரம் ஷீலாவிடம் இருந்ததால் தனது கனவுக் கன்னியாக அவரை வரித்துக்கொண்டது கேரளம். அப்படிப்பட்ட ஷீலாவை மலையாள சினிமாவுக்கு அளித்தது தமிழ் நாடகமேடை என்றால் நம்புவீர்களா?

திருச்சூரில் பிறந்து கோவையில் வளர்ந்த ஷீலா சிறுவயது முதலே நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். 1961-ம் ஆண்டு. கோவையில் முகாமிட்டிருந்தது எஸ்.எஸ்.ராஜேந்திரனின் நாடகக் குழு. ‘தென்பாண்டி வீரன்’ என்ற நாடகத்தைப் பார்க்க அம்மா கிரேஸியுடன் சென்றிருந்தார். நாடகம் முடிந்ததும் எஸ்.எஸ்.ஆரிடம் ஆட்டோகிராஃப் கேட்டு நோட்டை நீட்டினார். 15 வயது ஷீலாவைக் கண்ட எஸ்.எஸ்.ஆர், “உனக்கு நாடகத்தில் நடித்த அனுபவம் இருக்கிறதா?” என்றார்.

x