சொட்டாங்கல்: தமிழச்சி தங்கபாண்டியன்


“இதென்ன மெட்ராஸ்ல ‘சீனி'யப் போய்ச் சக்கரைங்கிறீங்க? அப்புறம் வெல்லக்கட்டிய என்னம்பீங்க?”னு துலுக்கன்குளம் ஆத்தாளு ஒரு வாட்டி கேட்டவுடன், குருவாச்சியின் அதப்பிய கன்னங்களும், சதா அரிசியை அதக்கி, மெதுவாக அதை ருசித்து அரக்கிக்கொண்டிருக்கிற அவளது தடித்த உதடுகளும், வெல்லக்கட்டி வாசமடிக்கும் அவளது கனமான மூச்சுக் காத்தும் நினைப்புக்கு வந்தது.

“ஏ குட்ட குருவாச்சி”னு யாராச்சும் கூப்ட்டா அவ்ளோதான் – “ஏன் நெட்டையாப் பொறந்து இந்த நாட்ட நிமித்திட்டீகளாக்கும்! குட்டையாப் பொறந்து கொறஞ்சு போனவுகளுமில்ல - நெட்டையாப் பொறந்து நெறஞ்சு போனவுகளுமில்ல”ன்னு பிலுபிலுவெனப் பிடித்துக்கொள்வாள்.

அவளுக்கு அரிசியும், வெல்லக் கட்டியும் உசிரு. வெல்லக்கட்டியச் சட்டை ஓரங்களில் பொதிஞ்சு வைச்சு வைச்சு பழுப்புக் கறையாயிருக்கும் ஓரங்களில் துவைச்சாப் போகாத ஒருவித மக்கு அழுக்கிருக்கும்.

எப்பவும் பள்ளியோடத்துக்கு லேட்டாதான் வருவா. அவளுக்கும் சேத்து அவளோடக் கீரைப் பாத்திகளுக்கும் நான்தான் தண்ணி ஊத்துவேன். ஆரம்பப் பள்ளிகளில் அப்போதெல்லாம் காலை வந்தவுடன் தோட்ட வேலை, வாய்ப்பாடு ஒப்பித்தல் அப்புறம்தான் பிரேயர் ஆரம்பிக்கும்.

x