மாணவர் எதிர்காலம்... யாவரும் கை கோப்போம்!


தேர்வெழுதச் செல்லும் மாணவர்களுக்குப் பெரியவர்கள் வாழ்த்து கூறுவது ஒரு மரபு. தமிழகத்தில் இந்த ஆண்டு 9.07 லட்சம் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதியிருக்கின்றனர். வழக்கம்போல வாழ்த்து சொல்வதற்கு முன்னர் நமக்குள் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்வோம். குழந்தைகள் அவர்களுடைய தேர்வில் தேறிவிடுவார்கள்; நாம் நமக்கான தேர்வில் தேறுவோமா?

தேசம் முழுக்க ஒரே தேர்வுமுறை என்பது ஒரே கல்விமுறைக்கு வித்திட்டுச் செல்வது, கல்வியின் ஆதார விழுமியங்களில் ஒன்றான பன்மைத்துவ மரபுக்குக் குழி வெட்டுவது!

இந்த எச்சரிக்கையை ஆட்சியாளர்கள் இன்னும் புரிந்துகொண்ட பாடில்லை. முன்னெச்சரிக்கை மீது அக்கறை கொள்ளாமல் தவிர்க்கலாம். ஆனால், ஆபத்துநேரிலேயே வந்த பிறகாவது உண்மைக்கு முகம் கொடுத்துதானே ஆக வேண்டும்?

பலரும் எச்சரித்தது நடந்தேவிட்டது! ‘நீட் தேர்வு’க்குப் பின் சமூக – பொருளாதாரரீதியாகப் பின்தங்கியிருக்கும் மாநிலங்கள் எப்படி பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றன என்பதைச் சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரத்தில், மருத்துவப் படிப்புக்குள் நுழைந்த மாணவர்கள் எண்ணிக்கை 2016-ல் 38 என்று இருந்த சூழல் மாறி, 2017-ல் வெறும் 9 ஆகக் குறைந்திருக்கிறது. இதுவே ‘நீட்’ தேர்வு ஏற்படுத்திவரும் சேதத்துக்குத் துல்லியமான உதாரணம்!

x