பாடுக பாட்டே! - 3


காதல் நோயை ‘பேய்’ என்று தவறாகஒரு தாய் புரிந்துகொண்டதால் பிறந்த பாடலைப்போன அத்தியாயத்தில் பார்த்தோம். பாடப் புத்தகத்தில் 55 ஆண்டுகளுக்கும் முன்பு நான் வாசித்த பாடல்தான் அதற்கும் முந்தைய அத்தியாயத்தில் நாம் கண்டது. வாழ்நாளில் எப்போது நாரைக் கூட்டத்தைப் பார்த்தாலும் சத்திமுத்தப் புலவர் ஞாபகத்துக்கு வந்துவிடுவார்!

சில ஆண்டுகளுக்கு முன்பு, காரைக்குடி பழைய பேருந்து பக்கம்  நாலைந்து நாரைகளைக் காலில் கட்டித் தலைகீழாகத் தூக்கியபடி ஒருவர்  நடந்து போனார். எதற்கு? கறிக்கு விற்கத்தான்! அப்போதும் எனக்கு சத்திமுத்தப் புலவர் நினைவுதான்.

 மனத்தில் நின்ற அந்தப் பாடலை, ஒரு வாசகனாக நான் வாசித்தது 1989-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில். அதுவும் உக்கடம் பழைய புத்தகக்  கடையில் ஐந்து ரூபாய்க்கு வாங்கிய ‘தனிப்பாடற்றிரட்டு’ இரண்டு பாகங்களாக வாங்கியது. சென்னை இட்டா பார்த்தசாரதி நாயுடு அவர்கள் குமாரன் இ.கோவிந்தராஜுலு நாயுடு அவர்களால் 1932-ம் ஆண்டில் பதிப்பிக்கப்பெற்ற புத்தகம் அது. காஞ்சிபுரம் மகாவித்வான் இராமசாமி நாயுடு அவர்களால் உரை செய்யப்பட்டது.

மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான் நா.கிருஷ்ணசாமி நாயுடு அவர்களால் திருத்தம் பெற்றது. என் கைக்கு வந்தபோதே கிட்டத்தட்ட பப்படக் கட்டுப் போலத்தான் இருந்தது. இன்றும் பாதுகாக்கிறேன்.

 இதே ‘தனிப்பாடற்றிட்டு’ நூலை இரண்டு பாகங்களாக கா.சுப்பிரமணிய பிள்ளை எனும் கா.சு.பிள்ளை, அவரது உரையுடன் 1939-ல் பதிப்பித்து இருக்கிறார். சாரதா பதிப்பகம்  ஒரே புத்தகமாக 2011-ல் வெளியிட்டது. மொத்தம் 1,736 பாடல்கள். 888 பக்கங்கள். விலை 600 ரூபாய்! புத்தகத் திருவிழாக்களில் 50% தள்ளுபடியில் வாங்கலாம்.

இதுபோலவே, தனிப்பாடல் களஞ்சியம் என்றொரு நூல்... மெய்யப்பன் பதிப்பு வெளியீடாக 2014-ம் ஆண்டு வெளியானது. இதன் தொகுப்பாசிரியர், அண்மையில் காலமான மூத்த தமிழறிஞர் பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன். இதன் முதற்பதிப்பு வெளியானபோது ச.வே.சு. அவர்கள் கையெழுத்திட்டு எனக்கொரு படியை அன்பளித்தார். இந்நூலில் 608 புலவர்கள் பாடிய 7,159 பாடல்கள் அடங்கும். இதையெல்லாம் சொல்லக் காரணம், சிறந்த பாடல்களே தொகுக்கப்படுகின்றன என்றாலும், அனைத்தும் காலம் வென்று வாழும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை.

 நிற்க... தலைவனைப் பிரிந்து வாழும் பெண், தனிமையில் இரவைப் போக்குவதற்குப் படும் பாடு பற்றித் தமிழிலக்கியப் புலத்தில் ஏராளமான பாடல்கள் உண்டு.

‘சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே, நில்லென்று கூறி, நிறுத்தி வழி போனாரே!’ என்கிறாள் ஒரு தலைவி. இன்று அந்தச் சிக்கல்கள் இல்லை. முகநூல் உண்டு, வாட்ஸ்-அப் உண்டு, இருபால் நண்பர்கள் இருக்கிறார்கள். தொலைக்காட்சி சேனல்கள் உண்டு. அவற்றில் இரவு 10 மணிக்கு மேல், ‘ஒன்று போதும்; நின்று பேசும்’ என்று ஊக்க மாத்திரைகள் விற்கும் பாலியல் காட்சிகளும் பாடல்களும் ஒளிபரப்பும் யோக்கியர்களின் ஏகப்பட்ட சேனல்கள் உண்டு.

இரவையும் காதல் ஏக்கத்தையும் சொல்ல இலக்கியத்தில் எத்தனையோ நயமான செய்யுள்கள் உண்டு. திருக்குறள் காமத்துப் பாலில், ‘படர் மெலிந்து இரங்கல்’ என்றொரு அதிகாரம்...

 ‘மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா

என் அல்லது இல்லை துணை’.

 இந்த இரவானது உலகத்து உயிரினங்கள் அனைத்தையும் உறங்க வைத்துப் பாதுகாக்கிறது. ஆனால், தான் மட்டும் தனியே விழித்துக் கிடக்கிறது. தனித்திருக்கும் அந்த இரவுக்கு என்னைத் தவிர வேறு துணையே இல்லை என்கிறாள் தலைவி.

இரவில் தான் மட்டும் விழித்திருக்கும் அவளது ஏக்கம் தொனிக்கும் பாடல் இது.  திருக்குறள் இலக்கியம் இல்லை; அது நீதி நூலே என்று புலம்பிய வர் பலர் உண்டு தமிழ்நாட்டில். அவர்கள் இத்தகைய பாடல்களுக்கு அறிமுகம் ஆகி இருக்க மாட்டார் கள்!

 எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான குறுந் தொகையில் நான்கே வரிகளில் பதுமனார் பாடல் வருகிறது. மொத்த சங்க இலக்கியப் பரப்பில் இவர் பெயரில் காணப்படும் பாடல் இந்த ஒன்றேதான்.

 ‘நள்ளென்று அன்றே யாமம், சொல் அவிந்து

இனிது அடங்கினரே மாக்கள் முனிவின்று

நனந்தலை உலகமும் துஞ்சும்

ஓர்யான் மன்ற துஞ்சா தேனே!’

 இருள் செறிந்த நடுச்சாமம் ‘நள்ள்ள்ள்’ளென்று ஒலிக்கிறது. ஓசைகள் எல்லாம் அடங்கி, மக்கள் அனைவரும் துயில்கின்றனர். இவ்வுலகமும் உறங்குகின்றது. ஒற்றைத் தனியாளாக நான் மட்டும் உறங்காமல் விழித்திருக்கிறேன். பிரிவும் தனிமையும் கொண்ட தன்னிரக்கப் பாடல் இது. ‘சனியன் எங்கேயோ போய்த் தொலஞ்சான்.

இன்னைக்கி ராத்திரியாவது சல்லியம் இல்லாமல் உறங்கலாம்’ என்று சலித்து, வெறுத்துப் பேசுவதன் எதிர்மறை பாவம். ‘நள்’ எனும் சொல் - இரவின் ஒலிக் குறிப்பு - சுள்ளென்று வெயில் அடிக்கிறது என்போமே, அதுபோல! ‘யாமம்’ எனில் ஜாமம். ‘முனிதல்’ எனில் காய்தல், வெறுத்தல். ‘நனந்தலை’ எனில் பரந்த, ‘துஞ்சும்’ எனில் உறங்கும், ‘மாக்கள்’ எனில் மக்கள்.

முதலில் சொன்ன இட்டா பார்த்தசாரதிநாயுடு, கா.சு.பிள்ளை  தனிப்பாடல் திரட்டு நூல்களில் ஒப்பிலாமணிப் புலவர் என்று ஒருவரின் 27 பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்...

இதுவும் இரவு நீண்டுகொண்டே போக.. தலைவி இரங்கிப் பாடும் பாடல்தான். விடிந்தால் அவளுக்கு முற்றம் தெளித்தல் முதல், பால் உறையூற்றுவது வரை நாள் முழுக்கப் பல வேலைகள் இருக்கும்.  எதுவும் எண்ணிப் பார்க்கப் பொழுது இருக்காது. ஆனால், இரவு அங்ஙனம் அல்ல... தொலையாமல் நீள்கிறது. தனித்தும் நலிந்தும் இருக்கிற அந்தப் பெண் வெறுத்துப் பேசுகிறாள்:

‘ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ! யான் வளர்த்த

கோழிவாய் மண்கூறு கொண்டதோ – ஊழி

திரண்டதோ! கங்கும் தினகரனும் தேரும்

உருண்டதோ பாதாளத்துள்’

 ஊழி திரண்டு வந்ததுபோல் இரவு இருளாகச் செறிந்து நிற்கிறது. சூரியனும் அவனது ஏழு குதிரைகள் பூட்டிய தேரும் மொத்தமாக பாதாளத்தினுள் உருண்டு விழுந்துவிட்டதா, என்ன? விடாமல் அலை பிடித்து ஓசை எழுப்பி, மனுசியை உறங்கவிடாமல் செய்கிறது கடலாழி. சேவல் கூவினால் இரவு புலர்ந்துவிடும். ஆனால், நான் வளர்க்கும் சேவலோ வாயில் மண்ணை வாரிப் போட்டுக்கொண்டது போலும்! எப்போது விடியுமோ என்ற வேதனையில், தனிமையில் விழித்திருப்பவள் சலிப்பு இது.

 இதே ஒப்பிலாமணிப் புலவர், அடுத்த பாடலிலும் காதல் வயப்பட்டவர்களுக்கு நீண்ட இரவு தரும் துன்பத்தை இன் னும் தீவிரமாகப் பேசுகிறார். “குற்றாலத்தின் வட்டத்தொட்டி எனும் சபையில், ரசிகமணி டி.கே.சி. மிகவும் அனுபவித்துச் சொல்லும் பாடல் இது’’ என்பார் 95 வயதான மூத்த எழுத்தாளர் கி.ரா.

‘அரவம் கரந்ததோ! அச்சு மரம் இற்றுப்

புரவிதான் கயிறுருவிப் போச்சோ! – இரவிதான்

செத்தானோ இல்லையோ! தீவினையோ! பாங்கி எனக்கு

எத்தால் விடியும் இரா?’

இங்கே ஒன்று சொல்ல வேண்டும். தமிழ்ப் பாடலை வசனமாகப் படித்து ரசிப்பது என்பது, மாம்பழக் காடியை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது போலத்தான். பழத்தின் முழுச் சுவையை உணர முடியாது. இதுவே, எழுத்துக்கு மாற்றாக மேடைப் பேச்சாக இருந்தால், பாடலை சந்தத்துடன் சொல்லலாம்தான். சந்தம் என்றால் அழகு, ஓசை நயம்.  இப்போது நான் எழுதப் போகும் உணர்ச்சி பாவம், மேற் சொன்ன பாடலுக்கு உரியதுவே.

 முன்பு வெறுத்துப் புலம்பினாள் அல்லவா ஒரு தலைவி... அவளேதான் இந்தப் பாடலில், சூரியன் உதிக்காமற் போனதற்கான வேறு காரணங்களைத் தேடுகிறாள்.

சூரிய கிரகணத்தின்போது நிகழ்வதைப் போல, சூரியனைராகு, கேது போன்ற பெரும் பாம்புகள் மறைத்துக்கொண்டதோ? ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட கதிரவனுடைய தேரின் அச்சு முறிந்து, குதிரைகள் கயிற்றை உருவிக்கொண்டு ஓடிவிட்டனவா? அல்லது, இரவி ஒரேயடியாகச் செத்துத் தொலைந்துவிட்டானா? அதுவும் இல்லையென்றால், பொழுது புலராமல் போனதற்குக் காரணம் வேறேதும் தீவினையோ? தோழி... நீ சொல்! நெடிய இந்த இரவு எப்படித்தான், எப்போதுதான் விடியப் போகிறது?

‘பொழுது விடிந்து தொலைக்காதா’ என்று தூக்கமின்றித் தவிக்கும் பிரிவுத் துயர் பாடல்களுக்கு நேர் எதிராக... தலைவனுடன் முயங்கிக் கிடக்கும் வேளையில், ‘இரவு சீக்கிரம் விடிந்துவிடப் போகிறதே’ என்ற அச்சத்தில், விடியலைச் சபிக்கும் சுவையான பாடல்களும் உண்டு!

(இன்னும் பாடுவோம்...)

x