பாலிவுட்டின் அடுத்த பத்மாவதி


இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஜான்சி ராணி லக்குமிபாய் மிகவும் புகழ்பெற்றவர். இவர் ஆண்ட பகுதிகளில் ஒன்றான புந்தேல்கண்ட்டில் இவரைவிட அதிக புகழை இவரது மெய்க் காப்பாளராக இருந்த ஜல்காரிபாய் என்பவர் பெற்றுள்ளார்.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் 13 மாவட்டங்களில்  புந்தேல்கண்ட் பகுதி பரவி உள்ளது. மிகவும் பின்தங்கிய பகுதியான புந்தேல்கண்ட் மக்களின் மனதில் இடம்பெற்ற முக்கிய வீரப் பெண் ஜல்காரிபாய். இவர், 1830 நவம்பர் 22-ல் பிறந்து 1858-ல் வீரமரணம் அடைந்தவர். ஜான்சி ராணி லக்குமிபாயின் நெருங்கிய தோழியாகவும், படைத்தளபதிகளில் ஒருவராகவும் இருந்தவர். மக்களிடையே நிலவும் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் கதைகளிலும் ஜல்காரிபாயின் வீரம் போற்றிப் புகழப்படுகிறது.

இவரது பெருமைகளை அறிந்த புரண் சிங் எனும் படை வீரர் ஜல்காரிபாயை மணமுடித்தார். திருமணத்துக்குப் பிறகு லக்குமிபாயின் படையில் சாதாரண பெண் சிப்பாயாகச் சேர்ந்த ஜல்காரிபாய் பின்னாளில் அவரது நம்பிக்கைக்குரிய ஆலோசகராக வளர்ந்தார்.

1857-ல் மீரட்டில் உருவான சிப்பாய் கலகத்தைத் தொடர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் மூண்டது. அப்போது ஜான்சி ராணியின் ஒரு படைக்கு ஜல்காரிபாய் தலைமை ஏற்றார். ஜான்சி கோட்டையைச் சூழ்ந்த கிழக்கிந்திய கம்பெனியின் படைகள் ராணி லக்குமிபாயை நெருங்கி விடாதபடி ஜல்காரிபாய்தான் பாதுகாத்தார். இதற்கு இருவரது முக ஒற்றுமையும் காரணம். ஒருமுறை ராணியைப் போல் வேடமிட்டு ஜல்காரிபாய் போர் புரிந்ததால் கோட்டையில் இருந்து லக்குமிபாய் பாதுகாப்புடன் வெளியேறித் தப்பினார் என்பதும் புந்தேல்கண்ட் வரலாறு.

x