முழுமையாகக் கட்டி முடிக்காத வீடு அது. ஆனால், பூசப்படாத ஒவ்வொரு செங்கல்லும் ஒரு கவிதையைச் சொல்கின்றன. காதல் மொழி பேசும் கிளிகள்... மண்ணைக் கிளறும் கோழிகள் என சூழலே அவ்வளவு அழகாய் இருக்கிறது. அழகுக்குக் இன்னொரு காரணம் சிவானந்த் - செளமியா
காதல் தம்பதியர்!
கேரளம், பாறசாலை அருகில் தமிழகத்தின் தோலடி பகுதியில் வசிக்கிறது இந்தக் காதல் ஜோடி. பிழைப்புக்குச் சாலையோரத்தில் சர்பத் கடை நடத்துகிறார்கள். என்ன விசேஷம் என்கிறீர்களா? சிவானந்த் பிறப்பினால் பெண். அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியவர். இவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் செளமியா!
“என்கூடப் பிறந்தது மூணு அக்கா, ஒரு அண்ணன். அப்பா, அம்மா தவறிட்டாங்க. பிறப்பால் பெண்ணாக இருந்தாலும் எனக்குச் சின்ன வயசுலயே ஆம்பளைப் பசங்ககூட விளையாடுறதுதான் பிடிக்கும். அப்போ என் பேரு சுபா. எட்டாம் வகுப்பு படிக்கும்போது வயசுக்கு வந்துட்டேன். அதுக்கப்புறம் எனக்குப் பொண்ணுங்க மேல ஈர்ப்பு ஏற்படவும் ஆரம்பிச்சிடுச்சு.