ஏப்ரல் 20, 2017. வைகை அணையை தெர்மகோல் அட்டையால் மூடும் திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ செயல்படுத்திய நன்னாள். அந்த மகத்தான திட்டம் செயல்படுத்தப்பட்டு ஓராண்டு நெருங்குவதையொட்டியும், மீண்டும் தமிழகத்தில் கோடை வெயில் தகிக்கத் தொடங்கியுள்ளதை முன்னிட்டும் அவரைப் பேட்டி காணச் சொல்லி, நிறைய அன்புத்தொல்லைகள்.
அமைச்சரைத் தொடர்புகொண்டேன். “நூறு சாமிகள் இருந்தாலும்... அம்மா உன்னைப் போல் ஆகிடுமா… கோடி கோடியைக் கொடுத்தாலும்... நீ தந்த அன்பு கிடைத்திடுமா” என்ற ‘டயலர் டியூன்’ ஒலிக்க, போனை எடுத்தார் அமைச்சர்.
விஷயத்தைச் சொன்னதும், “நான் ரொம்ப பிஸி. இப்பத்தான் முதல்வர் நடத்திய மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டை முடிச்சிருக்கேன். அடுத்து எஸ்.பி-க்கள் மீட்டிங் இருக்கு” என்றார். “அப்புறமா பேசவாண்ணே..?” என்று தயங்க, “சரி, பேட்டின்னு வந்துட்டீங்க... கேளுங்க...” என்று வான்டடாக வந்து வண்டியில் ஏறினார்.
தெர்மகோல் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்க வேணாம்னு இப்ப தோணுதா அண்ணே?