சிவகங்கை எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறது!


“அவரு எதைச் செஞ்சாலும் ஆர்ப்பாட்டமிருக்காது அமைதியா செஞ்சு முடிச்சுட்டுப் போயிட்டே இருப்பாரு. தன் புள்ளயும் தன்னைப் போலவே இருக்கணும்னு நினைச்சிருக்காரு. ஆனா, அந்தப் புள்ள இப்புடிப் பூதிப்புடியா செஞ்சு சிக்கல்ல மாட்டிக்கிருச்சு. இப்ப அந்தமனுசன் பாடும்ல திண்டாட்டமா போச்சு...” -  கார்த்தி சிதம்பரம் சமாச்சாரத்தை இப்படித்தான் பேசி ஆதங்கப்படுகிறது செட்டிநாட்டுச் சீமை.

சிதம்பரத்தின் அரசியல் தொடர்பில் ஆயிரம் பேச்சுகள் இருந்தாலும் சிவகங்கை மக்கள் மத்தியில் எப்போதும் அவர் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் தனி அன்பும் மதிப்பும் உண்டு. இந்த ஊரின் பெருமையை டெல்லியில் நிலைநாட்டியவர் என்ற பெருமிதமே காரணம். ஆகையால், கார்த்தி சிதம்பரத்தின் கைது பலத்த அதிர்வுகளை உண்டாக்கியிருக்கிறது. 

அப்பாவும் பிள்ளையும் ஒரே வீட்டில் இருந்தாலும் சந்தித்துப் பேசிக்கொள்ளும் நேரம் குறைவு. இருவரின் குணநலன்களும்கூட வேறுபட்டவைதான். சிதம்பரத்தின் அரசியல் காங்கிரஸ் பாணி. ஆனால், “காங்கிரஸ் கலாச்சாரமெல்லாம் இனிமேல் காரியத்துக்கு உதவாது. திராவிடக்கட்சிகள் பாணிதான் சரி. அப்போதுதான் கட்சியும் வளரும்; கட்சிக்காரனும் வளர்வான்” என்று தந்தைக்கே புத்தி சொன்ன தனயன் கார்த்தி.

அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோதுகூட, தனது கட்சிக்காரர்கள்செய்யும் தவறுகளுக்குத் தன்னை ஒருபோதும் பிணையாக்கிக்கொண்டதில்லை சிதம்பரம். தவறு செய்தவர்களுக்கு வக்காலத்து வாங்கியதுமில்லை. அவர் மத்திய உள்துறைக்கு அமைச்சராக இருந்த சமயத்தில், சிவகங்கையில் கட்சியின் முக்கிய பிரமுகர் தனியார் இடம் ஒன்றை ஆக்கிரமித்து வீடுகட்டிக்கொண்டார்.

x