அண்ணா, காமராஜர் வழியில் அரசியல் செய்வேன் என்று ஆறேழு மாதங்களுக்கு முன்பு சொன்ன நடிகர் ரஜினிகாந்த், ஏழெட்டு வாரங்கள் கழித்து ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக அறிவித்தார்.
தற்போது, எம்ஜிஆர் தந்த நல்லாட்சியைத் தரப்போவதாக அறிவித்திருக்கிறார். “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே” என்று பாடி, “என் வழி தனி வழி” என்று ‘பஞ்ச்’ வசனம் பேசிய ரஜினிகாந்த், தற்போது எம்ஜிஆர் ஆட்சி அமைப்பேன் என்கிறார் என்றால், அதன் பின்னணி என்ன? அப்படி எதையெல்லாம் சாதித்திருந்தது எம்ஜிஆர் ஆட்சி?
எம்ஜிஆர் முதல்வராகப் பதவியேற்றபோது அவர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன.
காரணம், திரைக்கு உள்ளே வெல்ல முடியாத நாயகனாக வலம்வந்து, திரைக்கு வெளியே அரசியல் களத்தில் கருணாநிதிக்கு எதிராக ஊழல் ஒழிப்பு இயக்கம் நடத்தியவர் எம்ஜிஆர். வாரி வழங்கும் வள்ளலாகவும், தவறுகளைத் தட்டிக்கேட்கும் துணிச்சல் கொண்டவராகவும் அறியப்பட்ட அவர், முதலமைச்சர் எனும் பெரும் பொறுப்பை எப்படிக் கையாளப்போகிறார் என்பதுதான் அந்த எதிர்பார்ப்புகளின் பின்னணி.