சொட்டாங்கல்: தமிழச்சி தங்கபாண்டியன்


கட்டிடங்களின் காடாக மாறிய நகரத்தில்வசித்தாலும்  தன் சொந்த மண்ணின் நினைவுகளைத்தனது நினைவின் நூலகத்திலிருந்து எடுத்துத் தரும் எழுத்து. தமிழர்கள் இழந்தவற்றைத் திரும்பிப் பார்க்கும் வகையில் உழவு மணம் கசியும் விளையாட்டு, சொலவடை, பொருட்கள், நிலம், கலையின் தரிசனத்தைச் சொல்லும் தொடர்.  குறுஞ்செய்திகளில்  உலகச் செய்திகளே பதிவாகும் இந்நாளில் சாயம் பூசாத வயல் மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றிய உரையாடல் தொடர்கிறது இத்தொடரில்...

‘கொட்டாப்புளி’ எங்க பள்ளியோடத்து செட்டுல பெரிய ‘தல’. வெங்கடாஜலம் என்கிற அவனது பெயர் ‘கொட்டாப்புளி’ ஆனது ஒரு சுவாரசியமான கதை. ‘கொட்டாப்புளி’ என்றால் வாயெல்லாம் பல்லாகத் திரும்புபவனை எரிச்சல்படுத்த, ‘ஏ, ஜலம்’ என்றால் போதும் – ‘அரிகண்டம்’ பாஞ்ச மூஞ்சியுடன் ‘என்ன இப்ப?’ என்பான்.

அவனை வம்புக்கிழுக்க லட்சுமண வாத்தியார் அருகிருக்க, “சார், ஜலம்தான் அப்படி சொன்னான்” என்று சொல்லிவிட்டால், வாத்தியாருக்குத் தெரியாமல் பல்லை நறநறவெனக் கடிப்பான். “வெளியே வாடா… வச்சுக்கிறேன்” என்று அர்த்தம். பள்ளியோடம் விட்டவுடன், வாத்தியாரிடம் சொன்னவனைப் புளியங்கொட்டைகளை உரசி, உரசித் தொடையில் தேய்ச்சுக் கதறவிட்டுத்தான் மறுவேலை பாப்பான்.

புளியங்காய்களை சேகரித்து, வீட்டுக்கு எடுத்துவந்து, கொல்லைப்பக்க வக்கப்போரில், துணிசுத்தி ‘கதகதப்பா’ பொதிஞ்சு வச்சுடுவான். பொதிஞ்சு வச்ச புளியங்காய்கள் பழுத்துருச்சான்னு நெதமும் எடுத்துப் பாக்குற சோலி கொட்டாப்புளிக்கு இல்லை. ஆனா அவன் தங்கச்சி அலமேலுக்கு உண்டு. அதுக்காகக் ‘கொட்டாப்புளி’கிட்ட அடி, கொட்டு வாங்கினாலும் வெள்ளன, பல்லு வௌக்குன ஒடனேயே வக்கப்போருக்குத்தான் போவாள்.

x