ஈரம் இழக்கும் காவல்துறை!


திருச்சியில் வாகனச் சோதனையின்போது, போலீஸ்காரரின் அத்துமீறலால் கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்திருப்பது தமிழகத்தையே அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்வதற்காகக் காவல்துறையினர் விதிகளை அமலாக்குவதில் கடுமை காட்டிவருகின்றனர். இது தவறில்லை. ஏனென்றால், இருசக்கர வாகன விபத்துக்களில் இறப்பவர்களில் கணிசமானோர் தலைக்காயங்களாலேயே உயிரிழக்கின்றனர்.

ஆனாலும்,  இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருப்பது இரண்டு மனிதர்கள், இரண்டு உயிர்கள் என்ற பிரக்ஞையே இல்லாமல், எவரும் செய்யத் துணியாத காரியத்தைக் காவல் ஆய்வாளர் காமராஜ் செய்திருக்கிறார். வண்டியோடு சேர்த்து அவர்களை உதைத்திருக்கிறார் காவல் ஆய்வாளர். நிலைகுலைந்தவர்களுக்குப் பலத்த அடி. கர்ப்பிணி உஷா இறந்தே போனார். மக்கள் கொந்தளித்துப் பெரும் போராட்டத்தில் இறங்கியபோதும், நிலைமையின் தீவிரத்தை உணராமல் அவர்கள் மீதும் தடியடி நடத்தியிருக்கிறது காவல்துறை.

இதே வாரத்தில் இரண்டு காவலர்கள் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதும் கூட பரிதாபப் பார்வைக்கு உரியது.

வழக்குப் பதிவு செய்வதில் இலக்கை எட்டும் நிர்ப்பந்தம், வாய்ப்பு கிடைத்தால் வசூலில் இறங்கும் கீழ்மைக் குணம், பணிச் சுமையாலும் மேலதிகாரிகளின் கொடுமைகளாலும் நிதானமிழக்கும் உளவியல் துன்பம் என்று காவலர்களின் இத்தகைய செயல்களுக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். தமிழகக் காவல்துறை ஒரு ஈரச் சிகிச்சைக்கு, மனப் புத்துயிர்ப்புக்குத் தன்னைத் தானே உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையே இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

x