பாடுக பாட்டே! - 2


கடலாக விரியும் தமிழில் அலைகளாய் எழுந்த இலக்கியங்களில் இருந்து... ஈரச்சுவையுடன் ரசிப்புக்குரிய வரிகளையும் பாடல்களையும் சுட்டிக் காட்டுகிறார் நாஞ்சில்நாடன். அவர் காட்டும் அடையாள வரிகளில் சொல்லழகு பொருளழகு மட்டுமல்ல, தமிழர்களின் பல நூற்றாண்டு வாழ்வும் வளமும் விரிகின்றன. சென்ற இதழில் நாரையைத் தூதாக விட்ட பாடலொன்றின் மூலம் தொடங்கிய சுவாரசியம் இனி, வாரா வாரம் தொடரும். நகைப் பெட்டியைத் திறந்து காட்டுவதைப் போல நம் தமிழின் இனிமையைத் தொட்டுத் தொடரும் தொடர்....

கோவையில் 2010-ம் ஆண்டு செம்மொழி மாநாடு கொண்டாடப்பட்டபோது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், ‘செம்மொழித் தமிழ்' என்றொரு நூல் வெளியிட்டது. பைபிள் அச்சிடும் தாளில், ஏ-4 அளவில் திடமான 'காலிக்கோ' அட்டையுடன், மிகச் சிறப்பான தயாரிப்பில். செம்மொழித் தமிழ் நூல்கள் அனைத்தும் ஒரே தொகுப்பாக! மூலம் மட்டும் 1,564 பக்கங்கள், விலை ரூ. 300, பதிப்பாசிரியர் பேராசிரியர் ம.வே.பசுபதி. செம்மொழி மாநாட்டில் எது நன்றாக நடந்ததோ இல்லையோ, இந்தப் புத்தகம் நல்ல முயற்சி.

அந்தத் தொகுப்பில் 41 நூல்கள். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, சிலம்பும் மேகலையும், முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள் என நாற்பத்து ஒன்று.

அவற்றுள் முத்தொள்ளாயிரம் அற்புதமான நூல். அனைத்துப் பாடல்களும் சிறுகதையாக பிரித்து எழுதப்பெறும் தகுதி பெற்றவை. யாவும் வெண்பாக்கள். முத்தொள்ளாயிரத்தின் சுவடிகள் கிடைத்ததில் - ‘புறத்திரட்டு’ என்று 15-ம் நூற்றாண்டில் தொகுக்கப்பெற்ற நூலிலிருந்து 108 பாடல்களும், பழைய உரைகளிலிருந்து பெறப்பட்ட பாடல்கள் 22-ம். ஆக, இன்று கிடைப்பது 130 பாடல்களே! சேர, சோழ, பாண்டியன் மீது தலைக்கு 900 என்று பாடப்பட்ட 2,700 பாடல்களில் மிஞ்சியவை இவை. கிடைத்த பாடல்களே படிக்கப்பெறாமல் கிடப்பதுதான் நம் வீர வரலாறு.

பாடிய புலவர் பெயர் தெரியாது; சைவ சமயத்தவர் என்று சொல்கிறார்கள். முத்தொள்ளாயிரத்தை முதலில் 1905-ல் பதிப்பித்தவர் ரா.இராகவய்யங்கார். மு.இராகவய்யங்கார் என்பவர் வேறு. புறத்திரட்டு நூலை, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் 1938-ல் பதிப்பித்தவர் ச.வையாபுரிப்பிள்ளை.

இதெல்லாம் முன்கதைச் சுருக்கம்.

காதல் எனும் சொல், ஆதியில் அன்பைக் குறிக்கவே பயன்பட்டிருக்கிறது. அதாவது காதல் எனும் சொல்லுக்கு எதிர்பாலர் மீது தோன்றும் வேட்கை, விருப்பு, ஈர்ப்பு, நேசம், காமம் என்பது மட்டுமே பொருள் அல்ல. அயோத்தியா காண்டத்தில் நகர்நீங்கு படலத்தில், ராமன் கோசாலையிடம், ‘நின் காதல் திருமகன், பங்கம் இல் குணத்து எம்பி, பரதனே, துங்க மாமுடி சூடுகின்றான்’ என்கிறான்.

குகப் படலத்தில் தேனும் மீனும் திருத்திக் கொணர்ந்த குகனைப் பார்த்து இராமன்,

‘அரிய, தாம் உவப்ப, உள்ளத்து

அன்பினால் அமைந்த காதல்

தெரிதரக் கொணர்ந்த என்றால்,

அமிழ்தினும் சீர்த்த அன்றே?’ என்பான்.

‘தேனும் மீனும் அருமையான உணவு. யாம் மகிழ்வுறக் காரணமானவை. மனத்துள்ளே இருக்கின்ற அன்பு முதிர்ச்சியால் தேர்ந்து கொணர்ந்தவை. எனவே, இவை அமுதத்தைக் காட்டிலும் சிறந்தவை அல்லவா?’ என்பது பொருள். இதுபோல, ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’ எனும் தொடரை யாவருமே கேள்விக்கப்பட்டிருக்கக் கூடும்.

தமிழ் இலக்கியத்தில் காதலுக்கு மிகச் சிறப்பான இடம் உண்டு.  ‘தமிழ் இலக்கியத்தில் காதல்’ எனும் பொருளில் இங்கு ஏகப்பட்ட இரண்டாம்தரப் புத்தகங்கள் உண்டு. அறிஞர் என்று அழைக்கப்படுபவர், பேராசிரியர் தவிர்த்துப் படைப்பிலக்கிய நாட்டம் உடைய எவரும் எழுதினால் சிறப்பாக இருக்கும். அந்த வேலைக்கு நான் விண்ணப்பிக்க மாட்டேன்!

முத்தொள்ளாயிரத்திலிருந்து சில காதல் கவிதைகள் எடுத்துப் பேசவே முனைந்தேன். அதற்குமுன், திருக்குறள், ‘என்னைச் சொன்ன பிறகு, மறுகாரியம் பார்’ என்கிறது. அதனால்...

‘படர் மெலிந்து இரங்கல்’ என்றொரு அதிகாரம். ‘படர் மெலிந்து இரங்குதல்’ என்றால், காதலனின் அல்லது தலைவனின் பிரிவை எண்ணியோ, காதலை அடைய முடியாததை நினைத்தோ... வருந்தி, மெலிந்து இரங்குதல்.

‘கரத்தலும் ஆற்றேன் இந்நோயை நோய் செய்தார்க்கு

உரைத்தலும் நாணுத் தரும்’ என்றொரு குறள். கை மீறிப்போன என் காதல். நோயைக் கரந்து, மறைத்து வைக்கவும் எனக்கு ஆகவேயில்லை. நோய் தந்தவரிடம் சென்று எடுத்துச் சொல்லவும் நாணமாக இருக்கிறது என்பது பொருள். சொல்லவும் துணிவில்லை, சொல்லாமலும் தீராது என்று நிலை.

அதே அதிகாரத்தில் மற்றுமொரு குறள்.

‘காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன்

யாமத்தும் யானே உளேன்’ என்று. காமப் பெரு வெள்ளத்தைக் கடக்க, நீந்தி நீந்திப் பார்தேன். கரையும் கண்டிலேன். இந்த நள்ளிரவில் யாரும் அருகே துணையில்லை. நான் மட்டும் தனித்திருக்கின்றேன் என்பது அவர் ஏக்கம். காதல் என்பது நோயும் அல்ல, பேயும் அல்ல என்று சொல்லும் குறுந்தொகையில் மிளைப் பெருங்கந்தன் பாடல்.

‘காமம் காமம் என்ப, காமம்

அணங்கும் பிணியும் அன்றே’ என்பன பாடல் வரிகள். இங்கே அணங்கு என்றால் பேய். பிணி எனில் நோய்.

இன்னொரு குறளில் வள்ளுவர் பேசுவார் -

‘மலரினும் மெல்லிது காமம் சிலரதன்

செவ்வி தலைப்படு வார்’

அதாவது, மலரை விட மென்மையானது காமம். சிலரே அதன் நுட்பத்தை அறிய முனைவார்கள்.

பிரிவு - காதலில் தீவிரத்தைப் புலப்படுத்தும் பொதுவாக. பொருள் தேடுவதற்காக தூரதேசம் போக எண்ணுகிறான் தலைவன். விரைந்து திரும்பிவிடுவதாக வாக்குறுதியும் தருகிறான். அவனுடைய தலைவிக்குப் பிரிவின் துயரம் தாங்கொணாதது என்று தோன்றுகிறது. தலைவனிடம் சொல்கிறாள் - ‘எங்கேயும் போகாமல், உள்ள வேலையைப் பார்த்துக்கொண்டு, இங்கேயே இருப்பதானால் என்னிடம் சொல்லும். மற்றபடி, நீர் விரைவாகத் திரும்பி வருவதான சங்கதியை எவள் உயிர்தரித்து இருப்பாளோ அவளிடம் போய்ச் சொல்லும். அதாவது, நீர் திரும்பி வரும்போது, நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று கூறும் இதுவும் திருக்குறள்தான். அது,

‘செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை’

மேற்சொன்ன குறளில், வல்வரவு என்பது, நல்வரவின் எதிர்ப்பதம் அல்ல. விரைந்து வருதல் என்பது பொருள்.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகள் என்று கொண்டாடப்படுகிற சிலர் சொன்னார்கள் - திருக்குறள் என்பதோர் நீதி நூல் என்று. ஆற்றிலேயே கிடந்தும் துறை எது என்று அறிய மாட்டாதவர்கள்!

இறுதியாக, முத்தொள்ளாயிரத்துக்கு வந்துவிடுவோம். அதிலோர் காதல் பாடல்... போரில் வெற்றி பெற்று, வீரம் சுடர் விடும் வேலை உடைய சேரன் பவனிவருகிறான். வீதி உலாவரும்போது பார்க்கிறாள் ஒரு பெண். சேரனின் வீரத்தில், அழகில், ஆண்மையில் லயித்த அந்தப் பெண்ணின் நெஞ்சில் காதல் நோய் கால்கொள்கிறது.

காதல் நோயின் தீவிரம் காரணமாக அவள் சரியாக உணவு கொள்வதில்லை. ஆடை அணிகலன்களை விரும்பி அணிவதில்லை. எப்போதும் வெறித்த பார்வை. பொருளற்ற பிதற்றல் பேச்சு. சோர்வு. பித்துப் பிடித்தாற்போல் இருக்கிறாள். நோயின் தீவிரம் அப்படி.

வேளை கெட்ட வேளையில், மூவந்திக் கருக்கலில், தோட்டப்புறத்தில் சுற்றித் திரிந்தபோது அவளுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று அவளுடைய தாய் நினைக்கிறாள்... பேய் ஓட்டும் முயற்சியில் முனைகிறாள். முதலில் களம் அமைக்கிறாள். களத்தில் பலி செய்யப்பட்ட வெள்ளாட்டு (காராட்டு) ரத்தத்தைத்  தெளிக்கிறாள். பெண்ணை நீராட்டி, களத்தில் கொணர்ந்து அமர வைக்கிறாள். ‘மணிச்சித்ரத்தாழ்’ எனும் மலையாளப் படத்தில் சோபனா, மோகன்லால், சுரேஷ்கோபி, திலகன், நெடுமுடி வேணு ஆகியோர் இடம் பெற்ற உச்சக் காட்சியை நீங்கள் நினைவில் கொண்டுவரலாம். அதுபோன்ற பேய் ஓட்டுதல் இப்போது ஆரம்பமாகப் போகிறது.

அப்போது வருகிறது முத்தொள்ளாயிரத்தின் பாடல்:

‘காராட்டு உதிரம் தூஉய், அன்னை களன் இழைத்து

நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ? - போராட்டு

வென்று களம்கொண்ட வெஞ்சினவேல் கோதைக்குஎன்

நெஞ்சம் களம்கொண்ட நோய்!’

சேரன் மேல் தீராக் காதல் கொண்ட பெண்தான் கூறுகிறாள்... போர்க்களத்தில் வெற்றி கொண்ட, வலிமை யான, கூர்மையான, கோபமுடைய சேரனின் மீது என் நெஞ்சில் காதல் நோய் களம் கொண்டிருக்கிறது. இதை உணராத என் அன்னை... பைத்தியக்காரி! களம் வரைந்து, வெள்ளாட்டின் உதிரம் தூவி, என்னை நீராட்டி அதில் அமர வைத்து, மலையாள மந்திரவாதியை வரவழைத்துப் பேயோட்ட நினைக்கிறாள். அப்படிப் போ என்று சொன்னால் போய்விடுகிற நோயா இது?

(இன்னும் பாடுவோம்...)

x