மதுரை புதுமண்டபம்: மூடப்பட்ட ஏழைகளின் ஷாப்பிங் மால்!


சிரியாவின் ‘டமாஸ்கஸ்’, சீனாவின் ‘கசகர்’, இங்கிலாந்தின் ‘காம்தென்’ போல் மதுரை புதுமண்டபத்தையும் ‘உலகத் தொல் சந்தை’ என்கிறார்கள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள். இங்கு கிடைக்கிற பொருட்களின் வரிசை அப்படி! .

பிறந்த குழந்தைக்கான தொட்டில் கம்பு, ‘பெயர் சொல்லாதது’ உள்ளிட்ட நாட்டு மருந்துகள், மரத்தால் ஆன நடைவண்டி, கறுப்பு வளையல், அரைஞாண் கயிறு, பாட்டிகளுக்குப் பிடித்த சுருக்குப் பை, சாமி விக்ரகங்களுக்கான ஆடை, அணிகலன்கள், சாமியாடி களுக்கான தொப்பி, கால்சட்டை, ஆணிச்செருப்பு, சல்லடம், தண்டை, அரிவாள், பிரம்பு, மணிகள் கோத்த பெல்ட், கருங்காலிக் கம்பு, ஈட்டி, சாட்டை, சலங்கை, திரி வரை  சகலமும் இங்கே வாங்கலாம். 

இன்னும் வியப்பானவர்கள் இங்குள்ள தையல் கலைஞர்கள். தேர்த்துணிகள் பழையதாகிவிட்டால், அதைக் கழற்றிக் கொண்டுவந்தால் போதும் அளவு மாறாமல் புத்தம் புதிதாகக் தைத்துக் கொடுத்து விடுவார்கள். தென் தமிழகத்தில் அத்தனை தேர்களுக்கும் இங்கிருந்துதான் தேர்த்துணியும், தொம்பைகளும் போகின்றன. அவ்வளவு பெரிய தேருக்கே துணி தைப்பவர்களுக்கு மனிதர்கள் எல்லாம் கொசுறு.

x