அரேபிய ரோஜா 1: ராஜேஷ் குமார்


சென்னையின் பிரதான சாலையில் ஒரு பிரம்மாண்ட கண்ணாடிச் செவ்வகம் போல் நின்றிருந்த மைக்ரோ ஃப்ளைஸ் கட்டிடத்தின் ஏழாவது மாடி.

கணினிக்கு முன்பாய் உட்கார்ந்து மென்பொருள் புரோகிராம் ஒன்றைச் சரிபார்த்துக்கொண்டிருந்த மஹிமாவை இண்டர்காம் போன் முணுமுணுப்பாய்க் கூப்பிட்டு அவளுடைய கவனத்தை ஈர்த்தது.

ரிஸீவரை எடுத்து வலது காதுக்கு இதமாய் ஒற்றினாள்.

“யெஸ்...”

மறு முனையில் கம்பெனியின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் கௌசிக் சின்ன சிரிப்போடு கேட்டார்.

“என்னம்மா மஹி… பிஸியாய் இருக்கே போலிருக்கே. எனக்கு ஒரு பத்து நிமிஷம் அப்பாய்ன்ட்மென்ட் கொடுக்க முடியுமா?”

கௌசிக் எப்போதுமே இப்படித்தான். கம்பெனியின் ஆணிவேரே அவர்தான் என்றாலும் தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் ஏதேனும் பேச வேண்டுமென்றால் அப்பாய்ன்ட்மென்ட் கேட்பது அவருடைய தனிப்பட்ட பண்புகளில் ஒன்று.

மஹிமா பதற்றமாகி எழுந்தாள்.

“இதோ… இப்பவே புறப்பட்டு வர்றேன் சார்.”

“வாம்மா… வெயிட் பண்றேன்.”

மஹிமா கணினித் திரையை இருட்டாக்கிவிட்டு அறையிலிருந்து வெளிப்பட்டு, நீளமான கிரானைட் வராந்தாவில் நடந்து கௌசிக்கின் அறையை நோக்கிப் போனாள். கண்ணாடிக் கதவை நெருங்கியபோது உள்ளே ஐம்பது வயதின் விளிம்பில் இருந்த கௌசிக், மஹிமாவை பார்வையில் வாங்கியதும் தலைக்கு மேல் இடது கையை உயர்த்தி உள்ளே வரச் சொன்னார். மஹிமா கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனாள்.

நீல நிற ஃபுல்சூட்டுக்குக் கச்சிதமாய்ப் பொருந்தி

யிருந்த கௌசிக் தனக்கு முன்பாய் நாற்காலியைக் காட்டினார்.

“உட்கார்மா..!”

மஹிமா உட்கார்ந்ததும் தன் கையில் வைத்து இருந்த ஒரு ஃபைலை நீட்டிக்கொண்டே சொன்னார். முகத்தில் ஒரு டன் பெருமிதம்.

“மஹிமா… அந்த துபாய் புராஜெக்ட் நம்ம கைக்கு வந்தாச்சு. நூறு கோடி ரூபாய் புராஜெக்ட் கையை விட்டுப் போயிருமோன்னு நினைச்சேன். ஆனா அது நம்ம மடியிலேயே விழுந்துடுச்சு..!”

மஹிமாவின் பெரிய கயல் விழிகள் வியப்பில் மேலும் பெரிதாயிற்று. “சார்… ரியலி… ஆஸம்… நான் எதிர்பார்க்காத சந்தோஷம் இது.”

“இந்த புராஜெக்ட் நமக்குக் கிடைச்சதுக்குக் காரணம் முழுக்க முழுக்க நீ அதுக்காக எடுத்துக்கிட்ட முயற்சிகள்தான். சின்சியார்ட்டி, ஹார்டு வொர்க் அண்ட் டெடிகேஷன் வில் பி ரிவார்டட்னு சொல்வாங்க… அதுக்கான சரியான உதாரணம் நீதாம்மா..!”

“சார்… நீங்க என்ன சொன்னீங்களோ அதைத்தான் நான் பண்ணினேன்… அதுவுமில்லாமே எனக்குக் கீழே இருந்து ஒரு டீமும் இந்த புராஜெக்ட்டுக்காக ராத்திரியும் பகலுமாய் உழைச்சிருக்காங்க.. வி மஸ்ட் தேங்க் தெம்.”

“ஷ்யூர்… அதுக்கான ஏற்பாட்டை ரெண்டு நாள்ல பண்ணிடுவோம். அதுக்கு முன்னாடி நாம ஒரு விஷயத்தை கன்ஃபர்ம் பண்ணிக்கணும்.”

“என்ன சார்”

“அடுத்த வாரத்துக்குள்ளே நீ துபாய் புறப்படணும்.”

மஹிமாவின் அழகிய நெற்றி ஆச்சரிய வரிகளுக்கு உட்பட்டது.

“நான் துபாய் புறப்படணுமா..?”

“ஆமாம்மா… இந்த புராஜெக்ட்ல ஆரம்பத்திலிருந்து ஆர்வம் காட்டிவந்தது நீதான். அதுக்காக நிறைய ஹோம் வொர்க் பண்ணி அது சம்பந்தப்பட்ட ஃபைலை அல்-அராபத் டெக்னாலஜிஸ் பீப்பிளுக்கு அனுப்பிவெச்சு அதை க்ளோஸாய் ஃபாலோ அப் பண்ண எனக்கு ஃபீட்பேக் கொடுத்ததும் நீதான். ஸோ இந்த புராஜெக்ட்டை நாம் வெற்றிகரமாய் செயல்படுத்தணும்னா நீ துபாய்க்கு போய் ரெண்டு வார டிரெய்னிங் கோர்ஸை முடிக்கணும். அதை நான் சொல்லலை. துபாயில் இருக்கிற அல்-அராபத் டெக்னாலஜிஸ் பீப்பிளே டாக்குமென்டேஷன் பேப்பர்ல மென்ஷன் பண்ணிருக்காங்க. அவங்க அனுப்பியிருக்கிற புராஜெக்ட் ஃபைலை ஒரு தடவை பார்த்துக்கும்மா. அப்பதான் அதுபத்தின டீடெய்ல்ஸ் எல்லாம் தெரியும்..!”

“சார்… அது… வந்து…”

“ஏம்மா தயங்கறே..!”

“அது ஒண்ணுமில்ல சார்… இந்த கம்பெனியில் என்னைவிட சீனியர்ஸ் நிறையப் பேர் இருக்காங்க… அவங்களையெல்லாம் ஓவர்கம் பண்ணியபடி நான் எப்படி சார்?”

கௌசிக் ஒரு புன்னகையோடு கையமர்த்தினார்.

“இதோ பார்மா… இந்த கம்பெனியில் உன்னை விட சீனியர்ஸ் இருக்காங்க. நான் ஒப்புக்கறேன். ஆனா, அவங்க உன்னைவிட டேலண்ட்டடா இல்லையே… துபாய்க்கு யார் போகணும்னு முடிவுபண்ண வேண்டியது நான். அந்த புராஜெக்ட் நமக்குக் கிடைச்ச அடுத்த விநாடியே அங்கே நடக்கிற டிரெய்னிங்ஸ் கோர்ஸுக்கு உன்னைத்தான் அனுப்பறதுன்னு முடிவு பண்ணிட்டேன். உனக்கு துபாய் போக விருப்பம்தானே மஹிமா..!”

“விருப்பம்தான் சார். ஆனா… அதுல ஒரு சின்ன பிரச்சினை..!”

“என்ன பிரச்சினை?”

“சார்… எனக்குக் கல்யாணம்... கல்யாணம் நிச்சயமாகியிருக்கிற விஷயம் உங்களுக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன்.”

“தெரியாம என்னம்மா… நானும் உன்னோட நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்தேனே? உனக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை கனடாவில் டெபுடேஷனை முடிச்சிட்டு வர்றதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கிறதால கல்யாணத்தையும் தள்ளி வெச்சு ஜூன் நாலாம் தேதி ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க… இப்ப நான் சொன்ன தகவல்கள் எல்லாம் சரிதானே… மாப்பிள்ளையோட பேரை மட்டும் மறந்துட்டேன்.”

“சகாதேவ்” என்றாள் மஹிமா.

“யெஸ்… யெஸ்..! சகாதேவ்… நீ துபாய் போகப்போகிற விஷயத்தை அவர்கிட்டே சொன்னா அவர் சைடிலிருந்து ஏதாவது அப்ஜக் ஷன் வரும்னு நினைக்கறியாம்மா..?”

“தெரியலை சார்… நான் அவர்கிட்டே பேசிப் பார்க்கணும். வீட்ல அப்பா, அம்மாகிட்டே சொன்னா அவங்க பக்கம் இருந்து எதுமாதிரியான ரியாக் ஷன் வரும்னு தெரியலை.”

“இதோ பார்மா மஹி… நமக்குக் கிடைச்சிருக்கிற இந்த புராஜெக்ட் ஒரு வரம். அல்-அராபத் சாதாரண கம்பெனியில்லை. ஐக்கிய அரபு நாடுகளில் அதுதான் நம்பர் ஒன் ஐ.டி.பார்க். இது ஒரு ஹை டெக் புராஜெக்ட். புராஜெக்ட்டுக்கு அவங்க வெச்சிருக்கிற பேர் என்ன தெரியுமா ‘அன் அரேபியன் ரோஸ்’ தமிழில் சொல்லணும்னா அரேபிய ரோஜா. பாலைவனத்தில் ரோஜா பூக்கிற மாதிரி இது ஒரு அதிசய புராஜெக்ட். நீ மட்டும் துபாய் போய் ரெண்டு வார டிரெய்னிங்கை முடிச்சுட்டு வந்துட்டியின்னா... நமக்குப் போட்டியாளர்களாய் இருக்கிற அத்தனை ஐ.டி. கம்பெனிகளையும் ஓரம் கட்டிக் கதற வெச்சுடலாம். உன்னால் மட்டுந்தான் அந்த டிரெய்னிங் கோர்ஸை சக்சஸ்ஃபுல்லா முடிச்சுட்டு வர முடியும்னு என்னோட மனசுக்குப் படுது..!”

“சார்! எனக்கு ரெண்டு நாள் டைம் குடுங்க. வீட்ல அப்பா, அம்மாகிட்டே பேசணும். முக்கியமா என்னோட வுட் பி சகாதேவ்கிட்டே பேசணும்.”

“தாராளமாய் பேசிட்டு சொல்லும்மா… நான் ரெண்டு நாள் வெயிட் பண்றேன்… பட் நீ எடுக்கிற முடிவு பாஸிட்டிவாய் இருந்தா ஐ வில் பி ஹேப்பி…”

மஹிமா தலையாட்டிவிட்டு எழுந்தாள். கௌசிக் தன் கையில் வைத்திருந்த புராஜெக்ட் ஃபைலை நீட்டினார்.

“இந்தாம்மா… அந்த அரேபிய ரோஜா. டேக் ஏ வ்யூ டீப்லி!”

மஹிமா ஃபைலை வாங்கிக்கொண்டு வெளியே வந்தாள். கிடைக்காது என்று நினைத்த ஒரு புராஜெக்ட்டை வெற்றிகரமாய் வாங்கிவிட்டதால் ஒரு பக்கம் சந்தோஷம் மூச்சை முட்டினாலும், இன்னொரு பக்கம் இரண்டு வார டிரெய்னிங்கை முடிக்க துபாய் போக வேண்டும் என்ற நினைப்பு அடிவயிற்றை அவஸ்தையாய்க் கலக்கியது.

யோசனையோடு நடந்து அறைக்கு வந்து நாற்

காலிக்குச் சாய்ந்து இரண்டு வாய் மினரல் வாட்டர் குடித்து

விட்டுத் தன் செல்போனை எடுத்து கனடாவில் இருக்கும் சகாதேவைத் தொடர்புகொண்டாள். மறு முனையில் சகாதேவ் தன் குரலில் ஆச்சரியம் காட்டினான்.

“என்ன மஹி, இந்த நேரத்துக்கு ஃபோன்..! நீ ஆபீஸில் இருக்கும்போது எனக்கு ஃபோன் பண்ண மாட்டியே. இப்ப இங்கே ராத்திரி பத்தரை மணி.”

“என்ன தூங்கிட்டீங்களா?”

“நோ… நோ… இப்பதான் இந்தியன் ரெஸ்டாரெண்ட்டுக்குப் போய் டின்னரை முடிச்சுட்டு என்னோட ரூமுக்கு வந்தேன். கொஞ்ச நேரம் டி.வி. பார்க்கலாமான்னு யோசனை பண்ணிட்டு இருக்கும்போதுதான் உன்னோட ஃபோன். எனிதிங்க் இம்பார்ட்டன்ட்?”

“யெஸ்...”

“என்ன?”

மஹிமா அரேபிய ரோஜா புராஜெக்ட் பற்றியும், தான் துபாய் போக வேண்டியிருக்கும் என்பதைப் பற்றியும் சொல்லி முடித்தாள். அடுத்த விநாடியே மறு முனையில் சகாதேவ் குரல் உற்சாகத்தில் துள்ளியது.

“வாவ்! கிரேட் ஜாப் மஹி. நீ உன்னோட எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் கௌசிக்கிட்டே யோசிக்க ரெண்டு நாள் டயம் கேட்டதே தப்பு. உடனடியாய் அவரோட ரூமுக்குப் போய் துபாய் போறதுக்கான ஃப்ளைட் டிக்கெட்டை கன்ஃபர்ம் பண்ணச் சொல்லு!”

“நிஜமாத்தான் சொல்றீங்களா?”

“இதுல பொய் சொல்ல என்ன இருக்கு மஹி… அல்-அராபத் ஒரு ஹைடெக் கம்பெனி. அந்த கம்பெனி

கிட்டயிருந்து ஒரு புராஜெக்ட் கிடைக்குதுன்னா... அது சாதாரண விஷயம் இல்லை. புராஜெக்டோட கேப்ஷனே கேட்சியா இருக்கும். அரேபிய ரோஜா… நிச்சயமாய் அது ஒரு வித்தியாசமான புராஜெக்ட்தான். துபாய் போக எந்த மறுப்பும் சொல்லாமே தலையை ஆட்டிடு.”

“உங்க வீட்ல… என்னோட வீட்ல இருக்கிறவங்க நான்

துபாய் போக அதுவும் தனியாப் போக சம்மதிப்பாங்களா?”

“இதோ பார் மஹி... உன்னோட அம்மா, அப்பாவைப் பத்தியோ என்னோட அம்மா, அப்பாவைப் பத்தியோ ஒரு பர்சன்ட்கூடக் கவலைப்படாதே… அவங்களை கன்வின்ஸ் பண்ணி ஓ.கே. சொல்ல வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு… ஒரு விநாடிகூட லேட் பண்ணாதே!”

மஹிமா சந்தோஷ மழையில் நனைந்தாள். மகிழ்ச்சியில் நுரையீரல்கள் சுவாசிக்கத் திணறின.

“இதோ… இப்பவே போறேன்.”

“நடக்காதே மஹி… ஓடு!”

மஹிமா செல்போனின் இணைப்பைத் துண்டித்து

விட்டு எழுந்தாள். மறுபடியும் ஒருவாய் மினரல் வாட்டரைக் குடித்துவிட்டு அறையை விட்டு நகர முயன்ற விநாடி அதைக் கவனித்தாள்.

மேஜையின் மேல் இருந்த அவளுடைய கணினி, இயக்கத்தில் இருப்பதற்கு அறிகுறியாக அதன் திரையில் நிறங்கள் மாறிக்கொண்டிருந்தன.

இது எப்படிச் சாத்தியம்?

“அறையை விட்டு வெளியே போகும்போது கம்ப்யூட்டரை ‘ஷட் டவுன்’ செய்துவிட்டுத்தானே போனேன்.

யார் உள்ளே வந்து எனக்கு மட்டுமே தெரிந்த பாஸ்வேர்டைப் பயன்படுத்தி ‘லாக் இன்’ செய்திருப்பார்கள்?’

வியப்பும் அதிர்ச்சியுமாய் கணினியை நெருங்கினாள். திரையில் அந்தத் தமிழ் வார்த்தைகள் ரத்தச் சிவப்பு நிறத்தில் மெதுவாய் நகர்ந்துகொண்டிருந்தன.

மஹிமா!

துபாயில் ஒரு அபாயம் உதட்டில் புன்னகையோடும் கையில் ‘பொக்கே’வோடும் உனக்காகக் காத்துக்

கொண்டிருக்கிறது.

விபரீதத்துக்கு விசா எடுக்காதே!(தொடரும்...)

x