சென்னை: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ‘கில்’ இந்திப் படம் வெளியாகியுள்ளது. அதிரடி, ஆக்ஷன் ரசிகர்களுக்கான திரை விருந்தான இப்படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பது குறித்த 10 காரணங்கள் இங்கே.
> படத்தில் ஒரு காட்சி கூட வலிந்து திணிக்கப்பட்டது போலவோ, சலிப்பை ஏற்படுத்தும் வகையிலோ இல்லாததே இப்படத்தின் முதல் வெற்றி.
> தொடங்கியது முதல் இறுதி வரை அடுத்தடுத்த அதிரடிகளாலும், விறுவிறுப்பான திரைக்கதையாலும் நம்மை வாய் பிளக்க வைத்து விடுகிறார் இயக்குநர்.
> இதுவரை கொரிய திரைப்படங்கள் போன்ற உலக சினிமாக்களில் மட்டுமே பார்த்து வியந்த அதிரடியான ஆக்ஷன், வன்முறை காட்சிகளை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையிலான காட்சியமைப்புதான் இப்படத்தின் பலம்.
> இந்த அளவுக்கு வன்முறையும், ‘பரபர’ ஆக்ஷன் காட்சிகளும் இதற்கு முன் வேறு எந்த இந்திய சினிமாவிலும் வந்திருக்கிறதா என்பதே சந்தேகம்தான்.
> ஒரு கட்டத்தில் நாயகனின் டிரான்பர்மேஷனும் அந்த இடத்தில் வரும் டைட்டில் கார்டும் ‘கிளாஸ்’ ரகம்.
> ஆக்ஷன் ரசிகர்களுக்கு என்ன தேவை என்ற அவர்களின் நாடித்துடிப்பை ஒவ்வொரு காட்சியும் வைக்கப்பட்டிருக்கிறது எனலாம்.
> படம் முழுக்கவே ரயிலில்தான் நடக்கிறது என்பதாலும், திரும்ப திரும்ப ஆக்ஷன் காட்சிகளே வந்துகொண்டிருப்பதாலும் சற்று பிசகினால் கூட கடுப்பை ஏற்றி விடும் சிக்கலான திரைக்கதையை மிக லாவகமாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் நிகில் நாகேஷ் பட்.
> ஹீரோ லக்ஷயா, நாயகி டான்யா நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். முக்கிய வில்லனாக வரும் ராகவ் ஜூயல் நம்மை முடிந்தவரையில் எரிச்சலூட்டும் அளவுக்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
> லாஜிக்காக யோசித்தால் இந்தப் படமே ஒரு பிரச்சினைதான். ஆனால், இதுபோன்ற எந்த கேள்வியும் எழாமல் நம்மை முழுக்க முழுக்க படத்துக்குள் ஒன்றச் செய்து விடுவதே திரைக்கதையின் ஜாலம்.
> ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்ஷன் படம் பார்க்க வேண்டும் என்று நினைப்போர் தவற விடக்கூடாது படம் ‘கில்’.