இந்தியாவில் பெரும்பாலான இணைய பயனர்கள் ஓடிடி சேவைகளைப் பெறுவதாகவும், அவர்களில் 53 சதவீதத்தினர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அண்மை ஆய்வு ஒன்று ஆச்சரியம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் இன்டர்நெட் வசதியை துய்ப்போரில் 86 சதவீதத்தினர் ஓவர் தி டாப் எனப்படும் ஓடிடி உலகத்தின் ஆடியோ மற்றும் வீடியோ சேவைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள். இவை உட்பட பல்வேறு சுவாரசியமான தரவுகளை இன்டர்நெட் மொபைல் அசோசியேஷன் அன்ட் மார்க்கெட்டிங் டேட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனத்தின் தொழில்துறை அறிக்கை வெளிப்படுத்தி உள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், ஃபயர்ஸ்டிக், குரோம்காஸ்ட் போன்றவற்றின் அதிகரிப்பால் டிஜிட்டல் பொழுதுபோக்கு சேவைகளின் உயர்வு, 2021 - 2023 ஆண்டுகளுக்கு இடையே 58 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதில் கிராமப்புற பயனர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் உள்ளனர் என்றும் அறிக்கை கண்டறிந்துள்ளது.
லட்சத்தீவுகள் தவிர்த்து இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 90 ஆயிரம் குடும்பங்களின் இணையப் பயன்பாடுகள் அடிப்படையில் இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை தற்போது நடந்துகொண்டிருக்கும் ’இந்தியா டிஜிட்டல் உச்சிமாநாடு 2024’-ல் வெளியிடப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு நிலவரப்படி நாட்டில் 823 மில்லியனுக்கும் அதிகமான இணைய பயனர்கள் செயலில் உள்ளனர். அதாவது கடந்த ஆண்டு 55 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 8 சதவீத வளர்ச்சியாகும். இணைய பயன்பாட்டில் 442 மில்லியன் என்ற எண்ணிக்கையுடன் கிராமப்புற பயனர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.
பாலினக் கண்ணோட்டத்தில், இணைய பயனர்களின் ஆண்-பெண் விகிதம் 2015 இல் 71:29 என்பதாக இருந்தது. இதுவே 2023-ல் 54:46 என்பதாக மாற்றம் கண்டுள்ளது. ஓடிடி பயனர்கள் மத்தியிலும் 57 சதவீதத்தினர் தங்கள் பிராந்திய மொழிகளில் உள்ளடக்கத்தை அணுக விரும்புகின்றனர். இந்த பிராந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய தென்னக மொழிகளே ஓடிடி உள்ளடக்கத்திற்கான வலுவான மொழி முன்னுரிமையைக் கொண்டுள்ளன என்றும் ஆயுவறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.