மம்மூட்டி, ராஜ் பி ஷெட்டியின் ‘டர்போ’ - ஆகஸ்ட் 9-ம் தேதி ஓடிடியில் வெளியீடு!


சென்னை: மம்மூட்டியுடன் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி இணைந்து நடித்துள்ள அதிரடி ஆக்ஷன் படமான ‘டர்போ’ ஆகஸ்ட் 9-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வைசாக் ‘புலிமுருகன்’, ‘மதுர ராஜா’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர். வெகுஜன சினிமாவுக்கு பெயர் போன இவர் மம்மூட்டியுடன் இணைந்த படம் ‘டர்போ’. இந்தப் படத்தில் ராஜ் பி ஷெட்டி, சுனில், சித்திக், அஞ்சனா, திலீஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மம்முட்டி தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்தார். கடந்த மே 23-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

கிறிஸ்டோ சேவியரின் இசை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. மிதுன் இமானுவேல் தாமஸ் திரைக்கதை சில இடங்களில் பலவீனமாக இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் படம் ரூ.70 கோடியை வசூலித்தது. திரையரங்குகளில் வெளியாகி 2 மாதங்களாக படத்தின் ஓடிடி அறிவிப்பு குறித்த எந்த அப்டேட்டும் இல்லை. இந்நிலையில் படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி சோனி லிவ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி,தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளிலும் படத்தை பார்க்கலாம்.

x