தலைமைச் செயலகம் - முதல்வர் நாற்காலியும், சுற்றி நடக்கும் அரசியலும்!


அஇஎதமுக கட்சி தலைவரும், தமிழக முதல்வருமான அருணாச்சலம் (கிஷோர்) மீதான ஊழல் வழக்கின் தீர்ப்பு வர உள்ளது. அவர் சிறை சென்றால் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி கட்சியினரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

அருணாச்சலத்தின் மகள் அமுதவல்லி (ரம்யா நம்பீசன்),மருமகன் ஹரியும் (நிரூப் நந்தகுமார்), அரசியல் ஆலோசகரான கொற்றவை (ஸ்ரேயா ரெட்டி) முதல்வர் ரேஸில் உள்ளனர். இறுதியில் அருணாச்சலம் வழக்கின் தீர்ப்பு என்ன ஆனது? யார் முதல்வரானார்? என்பது வசந்த பாலன் இயக்கியுள்ள இந்தத் தொடரின் மீதிக்கதை. ஜீ5 ஓடிடியில் 8 எபிசோடுகளாக தொடர் காணக்கிடைக்கிறது.

பெரும்பாலும் என்கேஜிங்காகவே நகரும் இந்த வெப்சீரிஸ், இந்தி, ஊழல் வழக்கு, குடும்ப அரசியல், கீழ்வெண்மனி சம்பவம், ஹெலிகாப்டர் விபத்து, மாநில அரசின் மீதான பாகுபாடு, மத்திய அரசின் ஆதிக்கம், கன்டெய்னர், சில்வர் டம்ளர், பழங்குடி மக்கள், மார்க்சிய, அம்பேத்கரிய பெரியாரிய கொள்கை, சமூகநீதி என ஒரே தொடரில் எக்கச்சக்க விஷயங்களை சேர்த்து அலுப்பில்லாமல் கொடுக்க முயன்றிருக்கிறார் வசந்தபாலன்.

நீதி குறித்த வசனம் மற்றும் “என் கைக்கு வர விலங்க அவ கைக்கு கட்டாதீங்க”, “மலையில இருக்கிற எறும்பு தான், தான் இந்த மலைய சுமக்குதுன்னு நெனைக்குமாம்” போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. ஒரு பக்கம் அரசியல் மறுபக்கம் த்ரில்லர் என நகரும் தொடரில், பரத் கதாபாத்திரமும் அதற்கான த்ரில்லரும் சுவாரஸ்யமில்லை.

அக மன போராட்டங்களை கச்சிதமாக கடத்துகிறார் கிஷோர். முதல்வர் கதாபாத்திரத்துக்கு ஏக பொருத்தம். ‘ரக்கட்’ கேர்ள் ஆக ஸ்ரேயா ரெட்டி புதிரான கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். முதல்வராக முட்டி மோதும் ரம்யா நம்பீசன் தந்தையுடன் சண்டையிடும் காட்சியில் கவனிக்க வைக்கிறார்.

போராளிக்குழுவைச் சேர்ந்த கனி குஸ்ருதி சைலண்ட் கில்லராக கலகம் செய்கிறார். கம்பீரமாக துப்பாக்கியுடன் சுற்றும் பரத் நடிப்பில் குறையில்லை. ஆனால் அவரது கதாபாத்திரத்தின் ஆழம் நிறைவைத்தரவில்லை. சில காட்சிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் சந்தான பாரதி ஈர்க்கிறார். நிரூப் நந்தகுமார், ஆதித்யா மேனன், தர்ஷா குப்தா,ஒய்.ஜி.மகேந்திரன், சித்தார்த் விபின், கவிதா பாரதி தேவையான பங்களிப்பு செலுத்துகின்றனர்.

ஜிப்ரான் பின்னணி இசையும், ரவிசங்கரின் ஒளிப்பதிவும் தொடருக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. ரவிக்குமாரின் படத்தொகுப்பால் இன்னும் கூட தொடரை சுருக்கியிருந்தால் கச்சிதம் கூடியிருக்கும். மொத்தமாக சில குறைகள் இருந்தாலும், தேர்ந்த அரசியல் தொடராக தனித்து தெரிகிறது இந்த தலைமை செயலகம்.

x