வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் தயாராகியுள்ள ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் எந்த தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற தகவல் இன்று அறிவிப்பாகி உள்ளது.
நீண்ட இடைவேளிக்குப் பின்னர் பிரதான கதாபாத்திரத்தில் வடிவேலு தோன்றும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம், டிச.9 அன்று நேரிடையாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
சுராஜ் இயக்கிய இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஷிவானி நாராயணன், ஷிவாங்கி, ஆனந்த்ராஜ், கின்ஸ்லி உள்ளிட்ட பலர் உடன் நடித்துள்ளனர். விவேக் மற்றும் அசல் கோளார் பாடல்கள் எழுத, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான ’அப்பத்தா’ பாடலின் முழு வீடியோவும், அதன் தொடர்ச்சியாக வெளியான ’பணக்காரன்’ லிரிக் வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. 2 பாடல்களையும் வடிவேலு தனது சொந்தக் குரலில் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் டிவி மற்றும் ஓடிடி உரிமம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்படி, திரையரங்க வெளியீட்டைத் தொடர்ந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் சன் டிவியில் வெளியாகும். மேலும் ஓடிடி வெளியீடாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வெளியாகும். சன் டிவியில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் ’சன் நெக்ஸ்ட்’ தளத்திலும் காணக்கிடைக்கும் என்பதால், நெட்ஃபிளிக்ஸ், சன் நெக்ஸ்ட் என 2 ஓடிடி தளங்களில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.