தமிழில் வெளியாகும் பிக்பாஸ் சீஸன் 6, தனது 50வது தினத்தை எட்டியுள்ளது. இதற்கான கொண்டாட்டங்கள் பிக்பாஸ் வீட்டில் களைகட்டிய சூழலில், பிக்பாஸ் தமிழின் நடப்பு சீஸன் போரடிக்கிறது என்ற ரசிகர்களின் ஆதங்கத்தை கமல்ஹாசனும் எதிரொலித்துள்ளார்.
சுமார் 100 தினங்களுக்கு நாளொரு சண்டையும், பொழுதொரு விளையாட்டுமாக பிக்பாஸ் வீடும் அதன் போட்டியாளர்களின் அக்கப்போருமாக பிக்பாஸ் வீட்டின் அன்றாடங்கள் வசீகரிப்பது வழக்கம். ஆனால் முந்தைய சீஸன்களோடு ஒப்பிடுகையில் நடப்பு 6வது சீஸன் போரடிப்பதாக ஆதங்கக் குரல்கள் எழுந்திருக்கின்றன. வார இறுதி நிகழ்வை ஒட்டி பிக்பாஸ் போட்டியாளர்களுடன் அளவளாவும் கமல்ஹாசனும், அவர் முன்னிலையில் கருத்து தெரிவித்த பார்வையாளர்களும் இந்த அதிருப்தியை உறுதி செய்திருக்கிறார்கள்.
பிக்பாஸ் முதல் சீஸன் தொடங்கியபோது, அதன் வடிவம் தமிழுக்கு புதிது என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த எதிர்பார்ப்பு நிலவியது. நிகழ்வை கமல்ஹாசன் தொகுத்து வழங்கப்போகிறார் என்றதும் அந்த எதிர்பார்ப்பு பன்மடங்கு எகிறியது. ரசிக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அப்போதைய பிக்பாஸ் போட்டியாளர்களின் பங்களிப்பும் இருந்தது. அடுத்த 2 சீஸன்களிலும் அந்த விறுவிறுப்பு ஓரளவு தொடரவும் செய்தது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது இவ்வளவுதான் என்று புரிந்துகொண்ட பார்வையாளர்களை திருப்திபடுத்த, நிகழ்ச்சியின் படைப்பாளர்கள் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியதானது. அவர்களின் படைப்பூக்கம் வறட்சி காணும்போது அது நிகழ்ச்சியிலும் வெளிப்பட்டு பார்வையாளர்களை வெறுப்பேற்றின.
அதன் பிறகான சீஸன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும், முந்தைய பிக்பாஸ் காணொலிகளை பார்த்து தங்களுக்கான வியூகங்களை வடிவமைத்த பின்னர் களம் கணடவர்களாக இருந்தார்கள். இவர்கள் மத்தியில் ஒரு வித உஷார்த்தனம் ஒட்டிக்கொண்டது. தாங்கள் சதா கண்காணிக்கப்படுகிறோம், கேமராக்கள் தங்கள் அசைவுகளை பதிவு செய்தே வருகின்றன என்பதை போட்டியாளர்கள் உணர்ந்திருந்த போதும், சில தருணங்களில் அவற்றை மறந்துவிட்டு சுயத்தை வெளிப்படுத்த தலைப்படுவார்கள். அது அன்போ, ஆவேசமோ, ஆத்திரமோ, அழுகையோ, காதலோ, உவகையோ.. எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த தருணங்களே பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்து பார்வையாளர்களை கட்டிப்போடும். ஆனால் எப்போதும் எச்சரிக்கை உணர்வு அகலாது சுதாரிப்பவர்கள் மற்றும் பங்கேற்பை தவிர்ப்பவர்களால் நிகழ்ச்சி ரசமிழந்து போகும்.
கடந்த 2 வருடங்களாக கரோனா பரவல் காரணமாக வீடடைந்து கிடந்த மக்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஆறுதல் தரவே செய்தது. அதன் வழக்கமான குறைபாடுகளை பொருட்படுத்தாது பார்வையாளர்கள் தங்கள் தொடர் ஆதரவை நல்கினர். ஆனால் பிக்பாஸ் சீஸன் 6 தொடங்கியபோது, வெகுஜனம் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர். அன்றாட பணிகள், குடும்பக் கடமைகள் ஆகியவற்றுக்கு அப்பால் கிடைக்கும் சொற்ப நேரத்தை பயனுள்ளதாக கழிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கும் அவர்கள் ஆனார்கள். சுவாரசியக் குறைவான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் முன்னுரிமையில் பின்தங்கின. பார்வையாளர்களின் மாறும் போக்கில் ஈடுகொடுக்க பிக்பாஸ் படைப்பாளர்களும் நிறையவே மெனக்கிட வேண்டியிருந்தது.
ஆனால் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டிருக்கும் போட்டியாளர்கள் மத்தியில் இவ்வளவுதான் முடியும் என்றளவில் திட்டமிடப்படும் விளையாட்டுக்கள் மற்றும் டாஸ்க் ரகங்கள் ஒரே வட்டத்தில் சுருங்கின. முந்தைய பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் ஓரிரு மாற்றங்களோடு புதிய நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டன. ஆனால் மிகுந்த தன்னுணர்வும், சுதாரிப்புமாக விளையாடும் போட்டியாளர்களால் அந்த நிகழ்ச்சிகளும் சுரத்திழந்து போகின்றன. தம்மை தக்கவைத்து கொள்வதற்கான கூடுதல் எச்சரிக்கை உணர்வு அவர்களை ஆட்டத்தில் ஒன்றவிடாது செய்கிறது. இதனால் பல விளையாட்டுகள் மற்றும் டாஸ்க் ரகங்கள் குழந்தைகளின் செப்பு விளையாட்டு போல முதிர்ச்சியான பார்வையாளர்களை கவராது முடிந்து போகின்றன.
இவற்றை உணர்ந்தே அவ்வப்போது போட்டியாளர்களை உசுப்பேற்றி வரும் கமல்ஹாசன், போட்டியாளர்கள் எப்படியெல்லாம் ஒரு நிகழ்ச்சியை சொதப்பி வீணடிக்கிறார்கள் என்றும் அவற்றை எவ்வாறு அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதன் மூலம் பார்வையாளர்களை ரசிக்கச் செய்திருக்கலாம் என்றும் அவ்வப்போது விளக்கிப் பார்த்தார். போட்டியாளர்கள் திருந்துவதாக தெரியவில்லை. இந்த வாரமும் பார்வையாளர்களின் பரிதாப நிலையை சுட்டிக்காட்டி போட்டியாளர்களை நாசுக்காக குத்திக்காட்டினார். நேற்றைய தினத்தின் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் வெளியேற்றம் எதிர்பார்த்ததுதான் என்றபோதும், பங்கேற்பும் ஈடுபாடும் இல்லாதவர்களை குறிவைக்கும் டாஸ்க் என்ற பெயரில் போட்டியாளர்களுக்கான எச்சரிக்கையாகவே அது விடுக்கப்பட்டது.
வீட்டுக்குள் இருந்தபடி வெறும் பார்வையாளர்களாக தொடரும் போட்டியாளர்களை அடையாளம் காணும் அந்த ஆட்டத்தில் சொல்லி வைத்தார்போல பெரும்பாலானோர் ராபர்ட்டை வளைத்தனர். அடுத்தபடியாக ரச்சிதா, குயின்சி, ராம் உள்ளிட்டோரும் கட்டம் கட்டப்பட்டார்கள். ஒருவழியாக வீட்டுக்கு போவேன் என்று அடம் பிடித்த ராபர்ட்டை வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டமாய் வீட்டுக்குள் பிரவேசித்த ராபர்ட், அதன் பின்னர் ரச்சிதாவுக்கு ஜொள் மற்றும் நூல் விட்டதோடு தனது பிக்பாஸ் வீட்டின் பங்களிப்பை சுருக்கிக்கொண்டது பரிதாபத்துக்கு உரியது.
போட்டியாளர்களின் பங்கேற்பு குறைந்திருப்பதையும் பார்வையாளர்களின் சங்கடங்களையும் கமல்ஹாசன் சுட்டிக்காட்டியதோடு, பார்வையாளர் வரிசையிலிருந்த சிலரை வைத்தே போட்டியாளர்களை இடித்துரைக்கவும் வழி செய்தார். ‘எங்கள் நிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள். வெறும் பார்வையாளராக இருக்கவும், வீட்டுக்கு போக வேண்டும் என்று இங்கே வந்து புலம்புவதற்கும் எதற்கு பிக்பாஸ் வீட்டுக்கு வர்றீங்க’ என்றெல்லாம் பெயர் குறிப்பிட்டு காய்ச்சி எடுத்தார்கள். ‘நான் இவ்வளவுதான். என் சுபாவம் இதுதான்’ என்பதாக ரச்சிதா தன்னை சுருக்கிக்கொண்டார். ‘நாளை முதலே ஒழுங்காக விளையாடுகிறேன்’ என ஜனனி உறுதியளித்தார்.
அதேவேளை, பிக்பாஸ் வீட்டின் இலக்கணங்களுக்கு ஆட்பட்ட அசீம் தனக்கான எதிர்நாயகன் பிம்பத்திலிருந்து நாயகனாக மாறி வருகிறார். தனலட்சுமியும் அவ்வாறே! அசீம், தனம் ஆகிய இருவரும் பார்வையாளரின் சிலாகிப்புக்கு ஆளாக, அதிலிருந்து இதர போட்டியாளர்கள் தங்களுக்கான செய்தியை அடையாளம் கண்டிருக்கின்றனர். அதன்படி அவர்களில் பலரும் சண்டைக்கோழிகளாக மாறியது அன்றைய தினத்தின் நிறைவிலேயே நிகழ்ந்தேறியது. பாதிக்கிணறு தாண்டியிருக்கும் பிக்பாஸின் நடப்பு சீஸன் இனியாவது களைகட்டுமா?