அடி சறுக்கிய அமுதவாணன்: சரவணன், அசல் கோளார் வரிசையில் மாட்டுகிறாரா?


’பெண் போட்டியாளர் குளியலறையில் இருப்பதை அறிந்தும் கதவருகே எட்டிப் பார்த்ததாக’ அமுதவாணன் மீது நெட்டிசன்கள் காட்டம் காட்டி வருகிறார்கள். மேலும் பிக்பாஸ் வீட்டிலிருந்து அவரை வெளியேற்றவும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

டிவி நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலமாக மக்கள் மத்தியில் அபிமானம் பெற்றிருந்த அமுதவாணன், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக பங்கெடுத்தபோது மக்கள் ஆதரவு சற்று அதிகமாகவே அவருக்கு கிடைத்தது. சாமனியர்களில் ஒருவராக காட்சியளிப்பது, அவரது டைமிங் சென்ஸ், பாட்டு காமெடி என எதுவென்றாலும் களமிறங்கி கலக்குவது, இயல்பாக பழகும் விதம் என பிக்பாஸ் ரசிகர்களை வசீரிக்கவே செய்தார்.

ஆனால் இலங்கையரான ஜனனி உடன் அவர் பழக ஆரம்பித்ததும் இந்த மக்கள் ஆதரவு சரிவு கண்டது. இதற்கு அமுதவாணனின் நெருக்கத்தை ரசிக்காத ஜனனி ஆர்மியும் ஒரு காரணம் என்றாலும், சக போட்டியாளர்கள் கூற்றுப்படி ஜனனியை அம்பாக பயன்படுத்த ஆரம்பித்திருந்தார் அமுதவாணன். ’வில் அம்பு’ விஸ்தரிப்பில் அமுதவாணனை வில்லாகவும், ஜனனியை அம்பாகவும் சக போட்டியாளர்கள் வர்ணித்தபோது அமுதவாணன் பொங்கியெழுந்தார். விமர்சித்த விக்ரமனுக்கு எதிராக பிக்பாஸ் பஞ்சாயத்து கோரி கேமரா முன்பாக முறையிடவும் செய்தார். ஆனால் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ துணுக்கு அமுதவாணன் ஆதரவு ரசிகர்களுக்கு பேரிடி தந்திருக்கிறது.

அமுதவாணன் - ஜனனி

குளியலறை கதவருகே நின்றிருக்கும் அமுதவாணன், உள்ளிருக்கும் நபருடன் பேசியவாரே கதவிடுக்கில் நோக்குகிறார். உள்ளே ஜனனி அல்லது ஷிவின் குளித்துக் கொண்டிருப்பதாகவும், அமுதவாணன் தன்னை மறந்து கேவல நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பலத்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். சகலத்தை கவனித்து வரும் பிக்பாஸ் சரியான தருணத்தில் ‘அமுதவாணன் மைக் மாட்டுங்க’ என்று குரல் கொடுத்ததில் அமுதவாணன் தன்னுணர்வு பெற்றிருக்கிறார். இல்லையெனில் பிக்பாஸ் வீட்டு வீடியோவில் விபரீதமாக சிக்கியிருப்பார் என்று கரித்து கொட்டுகிறார்கள்.

இதற்கு முன்பாக நடிகர் சரவணன், கானா பாடகர் அசல் கோளார் போன்ற ஆண்கள் இவ்வாறு தங்கள் அதிருப்திக்குரிய நடத்தை காரணமாக, பார்வையாளர்களின் அதிருப்திக்கு ஆளாகி வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் பெண்கள் குளியலறையை எட்டிப்பார்த்த அமுதவாணனும் அடிவாங்கப்போகிறார் என்று எரிச்சல் காட்டுகிறார்கள். ஆனால் அமுதவாணன் ஆதரவாளர்கள் கருத்து முற்றிலும் வேறாக இருக்கிறது.

அமுதவாணன் உட்பட சகல போட்டியாளர்களும் தங்களை 60 கேமராக்கள் சதா கவனித்து வருகின்றன என்பதை உணர்ந்தே பிக்பாஸ் வீட்டில் நடமாடி வருகிறார்கள். நடிகர் சரவணன் ஓட்டை வாயால் உளறிவைத்து தனது பெயரை கெடுத்துக்கொண்டார். மற்றபடி சக பெண் போட்டியாளர்களிடம் கண்ணியமாகவே நடந்து கொண்டார். அசல் கோளார்கூட இயல்பாகவே சக பெண்களிடம் பழகினார். அந்த பெண்கள் எவரும் அசல் மீது ஆட்சேபம் தெரிவிக்காததே இதற்கு சாட்சி. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே அசல் வித்தியாசமாக பட்டிருக்கிறார் என்றெல்லாம் விளக்குகிறார்கள். தற்போதைய வைரலான அமுதவாணன் வீடியோவிலும், ’குளியலறை கதவு சாத்தியிருப்பதை நன்கு அறிந்தே அவர் உள்ளிருக்கும் போட்டியாளாருடன் கிசுகிசுப்பாக பேச வேண்டி முகத்தை கதவில் வைத்திருந்தார். பேச்சு கேட்காது போகவே பிக்பாஸ் தலையிட்டு, மைக் எடுத்து மாட்டுமாறு உத்தரவிட்டிருக்கிறார்’ என்று வாதிடுகிறார்கள்.

ஆனால் அந்த வீடியோ துணுக்கை பார்த்தால் அமுதவாணனுக்கு எதிராக அது காட்சியளிக்கிறது. இதனால் அவரை உடனடியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றுமாறு குரல் தரும் நெட்டிசன்கள் அதிகரித்து வருகின்றனர். மேலும் அமுதவாணனுக்கு எதிராக வாக்களிக்கும்படியும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். சில விநாடிகளில் கடந்துபோகும் அந்த சம்பவம் குறித்து அமுதவாணன் மற்றும் பிக்பாஸ் விளக்கினால் மட்டுமே உண்மை புரிய வரும். ஆனால் அதுவரை அமுதவாணன் பிக்பாஸ் வீட்டில் தாக்குபிடிக்க மக்கள் வாக்கு இடம் கொடுக்குமா என்பது கேள்விக்குறியே.

x