திரைப்பட இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, ’வதந்தி’ என்ற வெப் சீரிஸ் வாயிலாக தனது ஓடிடி பிரவேசத்தை அறிவித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா தனது சமூக ஊடகங்களில் நேற்று(நவ.17) ஒரு பதிவை இட்டிருந்தார். ’என்னைப் பற்றி வெளியான வதந்தி உண்மைதான். அதைப் பற்றி பேச வேண்டிய நேரம் வந்தாயிற்று. நாளை பிற்பகல் அது குறித்து விளக்கமளிக்கிறேன்’ என்று அதில் தெரிவித்திருந்தார். எஸ்.ஜே.சூர்யாவின் திருமண அறிவிப்பு, மீண்டும் படம் இயக்கப் போகிறார் என்றெல்லாம் பலவாறாக ரசிகர்கள் மத்தியில் அந்த பதிவு எதிர்பார்ப்புகளையும் ஊகங்களையும் உருவாக்கி இருந்தது. இதனிடையே மேற்படி வதந்தி குறித்து இன்று எஸ்.ஜே.சூர்யா விளக்கம் அளித்திருக்கிறார்.
‘வதந்தி’ என்ற தலைப்பிலான தனது ஓடிடி பிரவேசத்தின் அதில் அறிவித்துள்ளார். க்ரைம் த்ரில்லர் வலைத்தொடராக, அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ‘வதந்தி’ வெளியாக இருக்கிறது. டிசம்பர் 2 என வெளியீட்டு தேதியையும் எஸ்.ஜே.சூர்யா அறிவித்துள்ளார். ’விக்ரம் வேதா’ திரைப்படத்தின் இயக்குநர்களான புஷ்கர் - காயத்ரி இந்த புதிய வலைத்தொடரை தயாரித்துள்ளனர். இவர்களது முந்தைய வலைத்தொடரான சுழல், அமேசான் பிரைமில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்த வலைத்தொடராக வதந்தி மூலம் எஸ்.ஜே.சூர்யாவுடன் கூட்டு சேர்ந்துள்ளார்கள்.
ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் நாசர், லைலா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். 8 அத்தியாயங்கள் அடங்கிய வதந்தி வலைத்தொடரில் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா தோன்றுகிறார். தனிப்பட்ட வகையில் சிக்கல்களில் தவிக்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கு, நகரின் புதிய க்ரைம் வழக்குகள் சவாலாவதும், அதன் போக்கில் தனிப்பட்ட பிரச்சினைகளின் முடிச்சுகளையும் அவர் விடுவிக்க முற்படுவதுமாக வதந்தியின் கதை செல்கிறது. வன்முறை காட்சிகள் காரணமாக பெரியவர்களுக்கான வலைத்தொடராக வகைப்படுத்தப்பட்டிருக்கும் ’வதந்தி’, தமிழ் மட்டுமன்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும் வெளியாகிறது.