’மன்னா, எனக்கு சிறுநீர் வேணுமின்னு சொல்லுங்கள்..’: பிக்பாஸ் போட்டியாளர்களிடம் தமிழ் படும் பாடு!


ராபர்ட் -ரச்சிதா

இப்படி ரச்சிதா கேட்டபோது பார்வையாளர்கள் துணுக்குற்றார்கள். மன்னர் வேடத்திலிருக்கும் தன்னிடம் ராணி வேடத்திலிருக்கும் ரச்சிதா ’மன்னா, எனக்கு சிறுநீர் வேணுமின்னு சொல்லுங்கள்..’ என்றபோது, ராபர்ட் மாஸ்டரும் திருதிருவென விழித்தார்.

தன் காதில் விழுந்ததும் தான் புரிந்துகொண்டதும் ஒன்றேதானா என்ற ஐயம் எழ, தனக்குள் முனகியபடி இடத்தை காலி செய்தார். கடைசிவரை ரச்சிதா தான் பேசிய தமிழ் குறித்து அறியாதிருந்தார். ரச்சிதா மட்டுமல்ல பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மத்தியில் பொருள் குறையோடு தமிழ் படும் பாடு அத்தகையது.

தனக்கு ’சிறிது நீர் வேண்டும்’ என்பதை சொல்லும் முயற்சியில் ரச்சிதா அப்பாவியாக இப்படி உளறி வைத்தார். கன்னடத்துப் பைங்கிளியான ரச்சிதாவின் தமிழைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் பிக்பாஸின் பெரும்பாலான போட்டியாளர்களின் தமிழும் இப்படித்தான் ததிங்கிணத்தோம் போடுகிறது. அதிலும் தங்கள் மத்தியில் சண்டை எழும்போதும் இந்த தமிழ் தகராறு கிச்சுகிச்சு மூட்டுகிறது. பார்வையாளார்களுக்கு நகைச்சுவையாகவும் தொனிக்கிறது.

நேற்று நடைபெற்ற அரண்மனை நாடக ஏற்பாட்டில் தளபதி வேடமணிந்த அசீம் வழக்கம்போல தனது வில்லத்தனத்தை வெளிக்காட்டினார். ராஜகுரு வேடமிட்ட விக்ரமனுக்கும் அசீமுக்கும் இடையே முட்டிக்கொண்டதில், வாதாட வார்த்தைகள் வராது கொச்சையாக பேச ஆரம்பித்தார் அசீம். இந்த இயாலமையே அசீமின் சினத்தை அதிகரித்ததில் தன்னுடைய மதிப்பை தாழ்த்தும் வகையிலும் நடந்துகொண்டார்.

ஜனனி

பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் தெளிவான தமிழை இலங்கையரான ஜனனியிடம் ரசிக்க முடிகிறது. ஆனால் அவரது தூய தமிழை அங்கீகரிக்காத சக போட்டியாளர்கள், அறியாமையில் ஜனனியை கிண்டலடித்து வருகிறார்கள். ஜனனி மொழியில் மட்டுமல்ல அதனை முறையாக வெளிப்படுத்துவதிலும் கவனம் ஈர்க்கிறார். அரண்மனை அரங்கில் சக பெண் போட்டியாளர்களிடம் அசீம் தொடர்ந்து ’நீ’ என்றபோது, ஜனனி அதனை ’நீர்’ என்று திருத்தினார். ராபர்ட் மாஸ்டரிடமும் தமிழ் தடுமாறுகிறது.

அரச காலத்து உச்சரிப்பில் சகலரும் தடுமாற ஜனனியிடம் மட்டுமே சரளம் கரைபுரள்கிறது. அவருக்கு அடுத்தபடியாக அரசியல் மற்றும் ஊடக பின்புலம் கொண்ட விக்ரமனின் உச்சரிப்பும், வார்த்தைகள் தேர்வும் கவர்கின்றன. அதிலும் அவர் கைக்கொள்ளும் மொழி அறம் சார்ந்தும் வெளிப்படுவது சிறப்பு. வார்த்தைகள் பிடிபடாத அசீம் ’எச்சில் துப்பியதை’, தனக்கான தன்மானத்தில் விழுந்த அடியாக விக்ரமன் கொந்தளித்தது இதில் சேரும்.

அசீம் - விக்ரமன்

சீரியல்களில் நடிக்கும் சக போட்டியாளர்களைவிட திருநங்கையான ஷிவின் தனது சரளமான தமிழில் ஆச்சரியமளிக்கிறார். இந்த வரிசையில் அடுத்தபடியாக அமுதவாணன், மைனா நந்தினி, ஆர்யன் தினேஷ், தனலட்சுமி ஆகியோர் இதே வரிசையில் வருகிறார்கள். மொழியை நேசிக்கும் கமல்ஹாசன், போட்டியாளர்களின் தமிழ் தகராறுக்கும் ஒரு பஞ்சாயத்தை கூட்டுவார் என எதிர்பார்க்கலாம்.

x