திரையரங்குகளை கலக்கிய ’காந்தாரா’ ஓடிடியில் கரையேறுகிறது: எதில்? எப்போது?


கன்னட திரைப்படமான ’காந்தாரா’ தனது திரையரங்க வெற்றிகளைத் தொடர்ந்து ஓடிடி தளத்தில் கரையேற உள்ளது.

கன்னடத்தில் மட்டுமே வெளியான காந்தாரா, திரையரங்குகளில் ரசிகர்கள் அளித்த வரவேற்பை அடுத்து இதர தென்னக மொழிகளில் டப் செய்யப்பட்டது. பின்னர் சிறிய தயக்கத்தோடு இந்தியிலும் டப் செய்யப்பட்டது. அப்படி வெளியான இந்தி காந்தாரா இந்திய சினிமாவில் பெரும் வரவேற்பு மற்றும் வசூல் சாதனையை வடக்கே நிகழ்த்தி வருகிறது.

வாராவாரம் வெளியாகும் இந்தி திரைப்படங்களை வீழ்த்தியதோடு, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் என பான் வெற்றியை முரசறைந்த சக தென்னக படங்களின் சாதனையையும் தாண்டியது. படத்தை இயக்கி நடித்த ரிஷப் ரெட்டி நிற்க நேரமில்லாது பேட்டிகள், திரைவிழாக்கள் என பங்கேற்று வருகிறார். அவருக்கு தங்கச் செயின் பரிசளித்து வாழ்த்திய ரஜினி காந்த் சொன்னதுபோல ‘இது 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்’ அதிசயம் ஆனது. பான் வெளியீட்டுக்கான முன்தயாரிப்பு இன்றி வெளியான காந்தாரா நாடு நெடுக வரவேற்பு பெற்றதுபோல, உலகளவிலும் படத்துக்கு எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.

அவற்றை ஓடிடி வாயிலாகவே முழுமையாக தீர்க்க இயலும் என்பதால், ஓடிடி தளங்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. படக்குழு எதிர்பார்க்காத ஒப்பந்ததில் அமேசான் பிரைம் வீடியோ காந்தாரா ஓடிடி உரிமையை கவர்ந்தது. அடுத்தபடியாக ஓடிடி வெளியீட்டுக்கான நாளை தீர்மானிப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டது. திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் தற்போதைய படங்களின் ஓடிடி தரிசனம் அமைந்து வந்த போதிலும், காந்தாராவுக்கான தேதியை பலமுறை தள்ளி வைக்க வேண்டியதாயிற்று. ஓடிடி வெளியீடு திரையரங்க வசூலை பாதிக்கும் என்று எழுந்த கோரிக்கையை அடுத்து இந்த தள்ளிப்போடல்கள் நிகழ்ந்தன.

தற்போது ஒரு வழியாக நவ.24 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் காந்தாரா களம் காண இருக்கிறது. பட தயாரிப்பு நிறுவனத்தினர் மற்றும் ஓடிடி தளத்தினர் விரைவில் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கின்றனர்.

x