திரையங்க வெளியீட்டில் வாகை சூடிய பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது ஓடிடி-யில் வெளியாகி உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பான் இந்திய வெளியீடாக தமிழில் உருவான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். மணிரத்னத்தின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா பச்சன், த்ரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்களுடன் வெளியான இந்த திரைப்படம், தமிழ் மட்டுமன்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திரை கண்டது.
இந்தியா மட்டுமன்றி உலகமெங்கும் வெளியான பொன்னியின் செல்வனை திரளான மக்கள் திரையரங்குகளில் தரிசித்தனர். வரலாற்றின் கூறுகளை புனைவில் தோய்த்து அமரர் கல்கி படைத்த பொன்னியின் செல்வனை 2 பாகமாக உருவாக்கியது இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான குழு. திரைப்படத்தின் முதல் பாகம் செப்.30 அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவலான கவன ஈர்ப்பை பெற்றது. ஒரு புதினமாக தமிழர்களின் வாசிப்பில் 3 தலைமுறைகளாக ஊறியிருந்த காவியத்தை அகன்ற திரையில் காண மக்கள் படையெடுத்தனர். கரோனா பொதுமுடக்கம் காரணமாக நசிந்திருந்த திரையரங்குகளின் மறுவாழ்வுக்கு பொன்னியின் செல்வனும் புத்துயிர் தந்தது.
திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒரு மாத இடைவெளியில் ஓடிடியில் வெளியாவது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. திரைப்படத்தின் வணிகத்துக்கும், கடல் தாண்டிய ரசிகர்களை படைப்புகள் சென்று சேர்வதிலும் இவை கைகொடுத்து வருகின்றன. இந்த வகையில் கட்டண அடிப்படையிலான பார்வையாளர்களுக்காக அக்.28 அன்று ’அமேசான் பிரைம் வீடியோ’ ஓடிடி தளத்தில் பொன்னியின் செல்வன்-1 வெளியானது. இதனை அமேசான் சந்தாதாரர்கள் உட்பட அனைவரும் ரூ199 கட்டணம் செலுத்தியே பார்க்க முடிந்தது. பின்னர் அமேசான் சந்தாதாரர்களுக்கான வழக்கமான வெளியீடாக நவ.3 நள்ளிரவு பொன்னியின் செல்வன் ஓடிடி வெளியீடு அமைந்தது.
திரையரங்க வசூலில் ஏற்கனவே சாதனை படைத்துள்ள பொன்னியின் செல்வன் ஓடிடி-யிலும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கலாம். அதற்கேற்ப அமேசான் தளமும் தனது படைப்புகளின் சிறப்புகளை விளக்கும் ’எக்ஸ்ரே’ தலைப்பின் கீழ் பொன்னியின் செல்வன் படைப்பு, வரலாற்று பின்னணி, கதாபாத்திரங்கள், நிலவியல் கூறுகள் உட்பட பல்வேறு அம்சங்களை சுவாரசியமாக பட்டியலிட்டுள்ளது. இவை பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்தறியாத இளம் தலைமுறையினர் மற்றும் தமிழை வாசிக்க வாய்ப்பில்லாத புலம் பெயர்ந்தோர் ஆகியோருக்கு பொன்னியின் செல்வனை முழுதுமாக உள்வாங்க உதவும்.
இவை மட்டுமன்றி பத்திரிக்கைகளில் வெளியாகும் சுவாசியமான திரை துணுக்குகளின் பாணியில் பொன்னியின் செல்வன் உருவாக்கத்தை ஒட்டிய சினிமா செய்திகளையும் அமேசான் ப்ரைம் தொகுத்துள்ளது. உதாரணமாக மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் பிரிக்க முடியாதவராக இருந்த கவிஞர் வைரமுத்து, பொன்னியின் செல்வனில் இடம்பெறாதது குறித்தும் அதன் பின்னணியிலான ’மீடூ’ சர்ச்சை குறித்தெல்லாம் தொகுத்து இருக்கிறார்கள். இவையெல்லாம் ஏற்கனவே பொன்னியின் செல்வன் பார்த்த ரசிகர்களையும் ஓடிடிக்கு இழுக்கும் என நம்பலாம்.
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,037-வது சதய விழா கொண்டாட்டங்களின் அங்கமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.