ஓடிடி உலா: தீபாவளிக்கு பொங்கல் பரிசு!


தமிழர்களின் வீரத்தோடும், தமிழ் மண்ணின் பாரம்பரியத்தோடும் பின்னிப் பிணைந்த ஜல்லிகட்டு விளையாட்டு, ‘பேட்டைக்காளி’ வாயிலாக முதல்முறையாக வலைத்தொடர் வடிவெடுத்திருக்கிறது. ’ஆஹா தமிழ்’ தளத்தின் தீபாவளி வெளியீடாக பேட்டைக்காளி வலைத்தொடரின் முதல் அத்தியாயம் தற்போது வெளியாகி உள்ளது.

மண்ணோடும் மரபோடும் ஊறிய ஜல்லிக்கட்டு விளையாட்டை முன்னிறுத்தி தமிழர்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் முயற்சிக்காகவே ‘பேட்டைக்காளி’ குழுவினருக்கு ஒரு பூங்கொத்து தரலாம். தீபாவளி இனிப்புகளின் அங்கமாய் சர்க்கரை பொங்கல் ருசித்த அனுபவத்தையும் பேட்டைக்காளி வழங்குகிறது. ஜல்லிக்கட்டு பின்னணியில் பல திரைப்படங்கள் வெளியாகி உள்ள போதும், அந்த வீரவிளையாட்டு குறித்து சற்று செறிவான பதிவினை பேட்டைக்காளி பேச முயல்கிறது.

பல்வேறு திரை படைப்புகளிலும் அலசி ஆராயப்பட்ட தமிழ் கிராமங்களின் பாரம்பரியம், வீரம், காதல், மோதல் உள்ளிட்ட சம்பவங்களே பேட்டைக்காளி வலைத்தொடரையும் ஆக்கிரமித்துள்ள போதும், தொல்குடியின் தொப்புள்கொடிக்கு நெருக்கமான படைப்பாக பேட்டைக்காளியை செதுக்க முனைந்திருக்கிறார்கள்.


பேட்டைக்காளி வலைத்தொடரின் முதல் அத்தியாயம் அக்டோபர் 21-ல் வெளியானது. அதன் தொடர்ச்சியாக அடுத்த அத்தியாயம் அக்டோபர் 28-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காத்திருப்பின் மத்தியில் முதல் அத்தியாயத்திலேயே பார்வையாளர்களை கட்டிப்போடவும் செய்திருக்கிறது பேட்டைக்காளி.

தாமரைக்குளம் கிராமத்தின் பெருவாரி விவாசய நிலங்களை தனியுடமையாக ஆக்கிரமித்திருக்கும் பண்ணையார் குடும்பம், வேர்வையும் ரத்தமும் சிந்தி மண்ணைப் பொன்னாக்கும் விவசாய கூலிகளை சற்றும் மதிப்பதில்லை. காலம் காலமாக உழைக்கும் நிலத்தில் உரிமை கோரி உழைப்பாளர்கள் திரள்கிறார்கள். தங்களை அண்டிப் பிழைப்போர் அணி திரள்வதை ரசிக்காத பண்ணையார், அடியாட்களைக் கொண்டு ஊரை விட்டே அடித்து விரட்டுகிறார். வயிற்றுப் பாட்டுக்கு நாதியற்ற மக்களுக்கு மலையில் மேயும் ஆநிரைகள் மறுபிறவி அளிக்கின்றன. பசுக்களையும், காளைகளையும் மேய்த்து தங்களது முல்லையூர் கிராமத்தை புதிதாக்கி உழைப்பாளர்கள் தலை நிமிர்கிறார்கள். அப்படி உயரும் மக்களின் மத்தியிலிருந்து புறப்படும் மாடுபிடி இளைஞன் ஒருவன் பண்ணையார் குடும்பத்தின் காளையை அடக்க ஜல்லிக்கட்டு களத்தில் குதிக்கிறான். ஊர் கட்டுப்பாட்டை மீறி அவன் எடுக்கும் பாய்ச்சலுடன் முதல் அத்தியாயம் நிறைவடைகிறது.


கிராமத்து இளைஞர்களின் வீரத்தை பறை சாற்றும் கபடி மற்றும் ஜல்லிக்கட்டு நாயகனாக கலையரசன் தோன்றுகிறார். தமிழகத்தில் எங்கே வாடி திறந்தாலும் தேடிச் செல்லும் மாடுபிடி இளைஞன் பாண்டியாக சுண்டியிழுக்கிறார். உடலெங்கும் தரித்த வீரத்தழும்புகளும், முறுக்கிய மீசையுமாக அசல் மாடுபிடி வீரனைப் பிரதிபலிக்கிறார். தாயை ஏமாற்றி மஞ்சு விரட்டுக்கு விரைவதாகட்டும், மாடுபிடி முனைப்பே பெண் பார்க்குமிடத்தில் அவமானம் சேர்க்கும்போது சீறுவதாகட்டும், முறைக்கும் முறைப்பெண்ணிடம் கல்யாணத்துக்குப் பின்னரும் ஜல்லிக்கட்டுக்கு முன்தீர்மானம் கோருவதாட்டும்... பாண்டியாகவே வாழ்ந்திருக்கிறார். கிராமங்களின் கலங்கலான குட்டையில் தலைமுழுகுவது முதல், ஜல்லிக்கட்டு காளைகளின் திமில்களை மெய்யாலுமே தழுவுதுவது வரை மெனக்கிடவும் செய்திருக்கிறார்.

தமிழர் பாரம்பரியத்தில் ஏறு தழுவல் என்பது இணைந்தது எப்படி என்ற ஐயத்துக்கு கிஷோரை முன்னிறுத்தி பேட்டைக்காளி வலைத்தொடரில் சுவாரசியமான காட்சிகள் சமைத்திருக்கிறார்கள். விவசாயத்துக்கு அப்பால் வயிற்றுப்பாட்டுக்கு என மலை மாடுகளை அடக்கி வீட்டுப் பிராணிகளாக்கிய தொன்மத்தின் கூறுகளையும் கதையின் போக்கில் சுலபமாகக் கலந்திருக்கிறார்கள். திக்கற்ற கிராம மக்களின் வாழ்வாதாரத்துக்கான மீட்பராக தோன்றும் கிஷோர் தனக்கான அழுத்தமான கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். நடிப்பில் கிஷோருக்கு நேர் நிற்பவராக பண்ணையார் செருக்கோடு வலம் வரும் வேல.ராமமூர்த்தி தனி ராஜபாட்டையில் பயணிக்கிறார்.

பேட்டைக்காளி படைப்புக்காக இயக்குநர் ல.ராஜ்குமார் நெடும் ஆய்வு மேற்கொண்டிருப்பது, அதனடிப்படையில் கட்டமைக்கப்பட்ட காட்சிகளில் தெறிக்கிறது. ராஜ்குமாரின் கற்பனைக்கு ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ் சிறப்பாக உரு கொடுத்திருக்கிறார். மலையடிவாரத்து கோயிலும் அதனையொட்டிய திருவிழா மற்றும் ஜல்லிக்கட்டு களமுமாக லட்சம் மக்களை பருந்துப் பார்வையில் படமாக்கிய காட்சியில் வாய்பிளக்க வைக்கிறார். அகன்ற திரைக்கான உழைப்பையும், பிரம்மாண்டத்தையும் ஓடிடி படைப்புக்குத் தந்திருப்பது தமிழுக்கு புதுசு. சந்தோஷ் நாராயணன் மேற்பார்வையில் பாப்பம்பட்டி பெரியமேளம் கலைஞர்களை வைத்து இசை சேர்த்தது முதல், ஜல்லிக்கட்டு மைதானத்தில் நிஜமான மாடுபிடி வீரர்களை களமிறக்கியது வரை மண்வாசனை மணக்கிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாயிலாக உலகத் தமிழர்களுக்கு அநேகம் பரிச்சயமான ஜல்லிக்கட்டு காளையின் பெயர் என்பதற்கு அப்பால், பேட்டைக்காளி என்ற தலைப்பின் பின்னணியை முதல் அத்தியாயத்தில் முழுதாய் அறிய வாய்ப்பில்லை. நடிகர்களிலும் ’மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் இன்னமும் கதையில் பிரவேசிக்கவில்லை. வலைத்தொடர் இலக்கணப்படி அடுத்த அத்தியாயத்துக்கான எதிர்பார்ப்பை முந்தைய அத்தியாயத்தின் இறுதியிலேயே விதைப்பார்கள். ஆனால், நாட்டு வெடிகுண்டு தாக்குதலும், வீச்சரிவாள் பாய்ச்சலுமாக அத்தியாயத்தின் தொடக்கமே அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறது.

ஒரே மூச்சில் அத்தியாயங்களை தரிசிப்பதற்கு வாய்ப்பின்றி வாரம் ஒன்றாக அவற்றை வெளியிடும் உத்தியின் பின்னணி பிடிபடவில்லை. ஜல்லிக்கட்டு மற்றும் மக்களின் வாழ்வியலுக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தில், அவற்றில் பயணிக்கும் கதையோட்டம் ஆங்காங்கே அடிசறுக்கவும் செய்திருக்கிறது. ’தூங்கும் எரிமலையின் பெருவெடிப்பு’ என்ற முதல் அத்தியாயத்துக்கு சூட்டப்பட்ட தலைப்பின் அதிர்வு உள்ளடக்கத்தில் சுணங்கவும் செய்திருக்கிறது.

இயக்குநர் வெற்றிமாறனின் 'கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி' தயாரித்திருக்கும் பேட்டைக்காளி வலைத்தொடர், வழமையான ஓடிடி படைப்புகளுக்கு மாற்று செய்திருக்கிறது. அதிலும் முன்னணி ஓடிடி தளங்களுக்கு நிகராக ஒரு பிராந்திய தளத்தில் செறிவான படைப்பு வெளியாவது படைப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆறுதல் சேர்ப்பது. ஜல்லிக்கட்டு என்பதை முன்னிறுத்தி தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பாரம்பரியத்தை வலைத்தொடருக்குள் அடக்க முயற்சிக்கும் பேட்டைக்காளியின் முயற்சி வரவேற்புக்குரியது. அதேவேளையில், பாரம்பரிய விளையாட்டு என்ற பெருமிதத்தின் மறுபக்க அவலமாய் ஜல்லிக்கட்டுக்குள் ஒளிந்திருக்கும் வர்க்கம் மற்றும் சாதிய பாகுபாடுகளையும் பேட்டைக்காளி தோலுரிக்கும் எனவும் தெரிகிறது. அந்த வகையில் பொதுவெளியில் தீவிர அதிர்வுகளையும் உருவாக்கவும் புதிய வலைத்தொடர் காத்திருக்கிறது.

x