ஓடிடி உலா: மற்றுமொரு மலிவு பதிப்பு ‘வெற்றிவிழா’


நெட்ஃப்ளிக்ஸில் இந்த வாரம் வெளியாகியிருக்கும் ’பிளாக்அவுட்’ திரைப்படம் இந்திய நெட்ஃப்ளிக்ஸின் டாப் திரைப்படங்களில் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறது. இங்கு மட்டுமன்றி இம்மாதிரியான பட்டியலில் அமெரிக்க நெட்ஃப்ளிக்ஸிலும் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது. அப்படியென்ன இந்த திரைப்படத்தில் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பே பிளாக் அவுட் திரைப்படத்தை காணவும் தூண்டி வருகிறது.

மெக்ஸிகன் மருத்துவமனை ஒன்றில் கண்விழிக்கும் ஒருவன், தான் குறித்த முன் நினைவுகள் எதையும் மீட்டெடுக்க வழியின்றி திணறுகிறான். உடனிருந்து அவனை பராமரிக்கும் அழகிய பெண்ணொருத்தி தன்னை மனைவி என அறிமுகம் செய்துகொள்கிறாள். நினைவிழந்தவனின் பெயரை ஜான் கெய்ன் என விளிக்கிறாள். கூடவே அவனது ஆருயிர் தோழன் என்று எட்டி என்பவனை அறிமுகம் செய்து வைக்கிறாள். பெரும் விபத்தொன்றில் சிக்கி உயிர் பிழைத்திருக்கும் அவனை திடீர் ஞாபகமறதி பீடித்திருப்பதாக மருத்துவர் விளக்குகிறார். நினைவுகள் தேய்ந்திருந்தபோதும் ஜானின் உள்ளுணர்வு பிரகாசமாய் சுடர் விடுகிறது. அதன் உதவியோடு அனைவரது கண்களையும் ஆழ்ந்து ஊடுருவி அவர்களை படிக்க முயல்கிறான். அந்த பார்வைகளில் ஒளிந்திருக்கும் நிழல்களை அடையாளம் காண்கிறான்.

சுதாரிக்க முற்படும் அவன் மீது அடுத்த விநாடியே கொலைவெறித் தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. உயிரை காப்பாற்றிக்கொள்ள பூட்டப்பட்ட அந்த மருத்துவமனைக்குள் திக்குத் தெரியாது அல்லாடுகிறான். சீறும் தோட்டாக்கள், விரட்டும் குண்டர்கள் ஆகியவற்றின் மத்தியில் அவனது பழம் நினைவுகள் அவ்வப்போது தவணை முறையில் கண்ணாமூச்சி ஆடுகின்றன. அப்படி வெளிப்படும் நினைவலைகளின் கீற்றுகளோடும், உள்ளுணர்வின் உதவியோடும் அவனது போராட்டம் தொடர்கிறது. தன்னை அடையாளம் காணும் அவனது முனைப்பில் பார்வையாளரும் சறுக்கி மீளும்போது மர்ம முடிச்சுகள் சுபமாய் அவிழ்கின்றன.

தான் யார் என்றே அறியாது மருத்துவமனையில் கண் விழிப்பவனை மையமாக்கி பல நூறு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் ஒன்றா அல்லது ஏதேனும் வித்தியாசம் காட்டுகிறார்களா என்பதை அறியும் முன்னரே பரபர ஆக்‌ஷன் களேபரத்தில் திரைப்படம் நிறைவடைந்து விடுகிறது. தனது நினைவுகளைத் துழாவி ஜான் துவளும் போதெல்லாம் அந்த விறுவிறுப்பு நம்மையும் பற்றிக்கொள்கிறது. போதை மருந்து கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளியா அல்லது அவர்களுக்கு எதிரான அரசின் அண்டர்கவர் ஏஜென்டா என்ற கேள்வியோடு டபுள் ஏஜென்ட் உளவாளிக்கான எதிர்பார்ப்பையும் நாயகனின் அலைகழிப்பு அடுத்தடுத்து விதைக்கிறது. நினைவிழக்க காரணமான விபத்துக்கு முந்தைய நினைவுகள் எதையும் மீட்க முடியாத ஜான் கெய்ன், தாய்மொழியை சரியாக அடையாளம் காண்கிறான்; தற்காப்புக் கலைகளை பிரமாதமாய் பிரயோகிக்கிறான்.

ஆனால், சிநேகமாய் நெருங்கி முறுவலிக்கும் பெண்ணை தன்னுடைய மனைவியா என அடையாளம் காணத் தடுமாறுகிறான். அவளுடைய நடவடிக்கைகள் ஜானுக்கு மட்டுமல்ல நமக்கும் சந்தேக புகைச்சலை எழுப்புகின்றன. இவற்றினூடே தனக்கு எதிரான மர்ம கும்பலின் அங்கத்தினர்களை மருத்துவமனையின் சகல மூலைகளிலும் தவணை முறையில் எதிர்கொள்கிறான். துப்பாக்கி, கத்தி, பலப்பிரயோகம் என குட்டித்திரையில் ரத்தக்களரி சமைக்கிறார்கள். இருதரப்பினரும் பரஸ்பரம் பரிமாறும் துப்பாக்கிக் குண்டுகள், பார்வையாளர்களை பதம் பார்ப்பதற்கு இணையான பரிதாபத்தையும் பல காட்சிகள் அரங்கேற்றுகின்றன.

ஜான் கெய்னாக தோன்றும் ஜோஷுவா டேவிட் தன் பங்குக்கு நிறைவாகச் செய்திருக்கிறார். கதையில் அதற்கு மேல் சுரத்து இல்லாத போதும் இயன்றவரை திரைப்படத்தை தாங்க முயற்சிக்கிறார். மெக்சிகன் நடிகரான ஒமர் ரஃபேல் வில்லன் எட்டியாக வருகிறார். நண்பனா, துரோகியா, பரம வைரியா என எட்டியை அடையாளம் காண இயலாத ஜான் கெய்னை குயுக்தியாய் ஏமாற்றுவதில் ஒமர் ரஃபேல் ஸ்கோர் செய்கிறார். அன்னாவாக தோன்றும் ஆஸ்திரேலிய நடிகையான அப்பி கானிஷ், நாயகனை மட்டுமன்றி பார்வையாளரையும் அழகாக குழப்புகிறார். விருது நடிகரான நிக் நோல்டே தனது தனித்துவ உச்சரிப்பின் ஊடாக பஞ்ச் டயலாக் எல்லாம் பேசுகிறார். அவருக்கு அப்பால் இதர கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் அனைத்தும் நகரும் காட்சிக்கு சத்தின்றி ஒலிக்கின்றன.

திரைப்படத்தின் போஸ்டரில் தொடங்கி, ’ஜான் விக்’ போன்ற படங்களின் சுமாரான பதிப்பாக, ’பிளாக்அவுட்’ திரைப்படத்தை ஆனமட்டும் இயக்குநர் சாம் மக்கரோனி இருட்டடித்து இருக்கிறார். நாயகன் மறைத்து வைத்ததில் மறந்துபோன உலோகப்பெட்டியில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன என்பதை ரசிகர்களுக்கும் சொல்ல மறந்திருக்கிறார் இயக்குநர். ஆக்‌ஷன் காட்சிகளில் தீபாவளி பட்டாசு சத்தங்களுக்கு அப்பால் புதுமை இல்லை.

மறைந்த இயக்குநர் பிரதாப் போத்தன் தனது புதின வாசிப்பு மற்றும் ஹாலிவுட் ரசிக தாக்கத்தில், கமல்ஹாசனை முன்னிறுத்தி எண்பதுகளின் இறுதியில் உருவாக்கிய ’வெற்றி விழா’ திரைப்படம் இன்றைக்கும் ரசிகர்களின் நினைவில் மீந்திருக்கிறது. பல மொழிகளில் அடித்து துவைத்த இதே கதையோட்டத்தில் தற்போது உருவாகியிருக்கும் பிளாக்அவுட் திரைப்படம் அநியாயத்துக்கு சோபை இழந்திருக்கிறது. தீவிர ஆக்‌ஷன் ரசிகர்கள் மட்டும் இத்திரைப்படத்தை துணிந்து ரசிக்கலாம். மற்றவர்கள் திரையரங்கிலிருந்து ஓடிடிக்கு தாவியிருக்கும் பல்வேறு பன்மொழி திரைப்படங்களை ரசிக்கலாம்.

அந்த வகையில் மலையாளத்தின் ’ஒரு தெக்கன் தல்லு கேஸ்’ (நெட்ஃப்ளிக்ஸ்), தமிழின் ’வெந்து தணிந்தது காடு’ (அமேசான் ப்ரைம் வீடியோ), ’பபூன்’ (நெட்ஃப்ளிக்ஸ்), ட்ரிக்கர் (ஆஹா தமிழ்) மற்றும் ’கணம்’ (சோனிலிவ்), இந்தியின் தோபாரோ (நெட்ஃப்ளிக்ஸ்), லால் சிங் சத்தா (நெட்ஃப்ளிக்ஸ்) மற்றும் ‘மோனிகா மை லவ்வர்’ (நெட்ஃப்ளிக்ஸ்), தெலுங்கின் கார்த்திகேயா (ஜீ 5) உள்ளிட்ட பல படங்கள் காத்திருக்கின்றன. திரையரங்குகள் மீண்டும் புத்துயிர் பெற்றதில் நேரடி திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் குறைந்ததில், ’பிளாக்அவுட்’ போன்றவை டாப் வரிசையில் இடம்பிடிக்கும் அபத்தமும் நேர்ந்திருக்கிறது.

x