ஓடிடி தளங்களுக்கு என்றே தயாராகும் மலையாள த்ரில்லர் படங்களின் வரிசையில் இந்த வாரம் சேர்ந்திருக்கும் திரைப்படம் ’ஈசோ’. படத்தின் தலைப்பு கிறிஸ்துவர்களை சீண்டுவதாக கேரள அரசியல்வாதிகள் மத்தியில் தொடக்க எதிர்ப்பை எதிர்கொண்டது ஈசோ. பின்னர் படம் பேசும் கதைக்களத்துக்காக அவர்களே விளம்பர தூதுவர்களாகவும் மாறிய வினோதங்கள் அங்கே நடந்திருக்கின்றன. ’சோனி லிவ்’ தளத்தில் வெளியாகியிருக்கும் ஈசோ திரைப்படத்தை தமிழ் டப்பிங்கிலும் காணலாம்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், அந்த குற்றங்களை நிகழ்த்துவோருக்கு நிகராக அவற்றை கண்டும் காணாது இருப்போரும் தண்டனைக்கு உரியவர்களே என்கிறது ஈசோ. இதனை த்ரில்லருக்கு தோதான ஒற்றை இரவில் நடந்தேறும் புதிரான சம்பவங்களின் பின்னணியில் விவரித்ததன் மூலம் உருப்படியான பொழுதுபோக்கு அனுபவத்தையும் திரைப்படம் வழங்க முயல்கிறது.
ஏடிஎம் மையம் ஒன்றின் செக்யூரிட்டியாக பணியாற்றுபவர் ராமச்சந்திரன் பிள்ளை. 2 பெண் பிள்ளைகளின் தந்தையான இவர், தனது குடும்பக் கடமைகளின் நெருக்கடியோடு மத்திம வயதுக்கான தடுமாற்றங்களிலும் இருக்கிறார். அன்றைய தினம் பகல் டூட்டி பார்க்கும் பிள்ளைக்கு இரவு நேரப் பணியும் தலையில் விழுகிறது. விடிந்தால் அதிமுக்கியமான குற்றவழக்கு தொடர்பாக நீதிபதி முன்பாக ரகசிய வாக்குமூலம் அளிக்கும் நெருக்கடியும் அவருக்கு காத்திருக்கிறது. ஆளரவமற்ற இடத்தில் கண்காணிப்பு கேமரா பழுதடைந்த அந்த ஏடிஎம் வாசலில் வாயில் புகையும் பீடியோடு அந்த இரவை கரைக்கும் தவிப்போடு காத்திருக்கிறார் பிள்ளை.
அப்போது அழையா விருந்தாளியாக ஒருவன் அங்கே வந்து சேருகிறான். அந்த மர்ம நபரின் வருகையும் நடவடிக்கைகளும் பிள்ளையின் இரவை மேலும் கனக்கச் செய்கின்றன. இருட்டுக்கு நிகரான உண்மைகள் சிலவும் அடுத்தடுத்து வெளுக்கத் தொடங்குகின்றன. அப்படி அங்கே என்ன நடந்தது, அந்த ஒற்றை இரவுக்கு ஆதாரமான முன்பின் சம்பவங்கள் என்ன உள்ளிட்ட புதிர்களை விடுவிப்பதுடன் ஈசோ திரைப்படம் நிறைவடைகிறது.
ஓடிடி தளங்களுக்கு என்றே அளவெடுத்து தைக்கப்படும் மலையாள த்ரில்லர் சினிமாக்களின் வரிசையில் ஈசோ சேர்ந்தாலும், கதையின் அடிநாதமாய் கூராயப்படும் சமூக அவலம் திரைப்படத்துக்கு தனி பரிமாணம் தருகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் அவற்றை நிகழ்த்தும் அதிகாரம் படைத்தவர்களையும் தோலுரிப்பதோடு, அவலத்தை அறிந்திருந்தும் கள்ளமௌனம் காக்கும் பொது சமூகத்தையும் ஈசோ சாடுகிறது. அந்த வகையில் குழந்தைமையை சிதைக்கும் பாலியல் குற்றவாளிகளுக்கு நிகராக அவற்றுக்கு துணைபோகும் நபர்களையும், ஆதாயத்துக்காக அவலத்தை மூடி மறைப்போரையும் கூண்டில் ஏற்ற வலியுறுத்துகிறது.
உத்தரபிரதேசத்தின் உன்னாவ் உட்பட நாடெங்கும் நடந்தேறும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை உண்மையின் தகிப்போடு ஈசோ கையாண்டிருக்கிறது. இந்த பின்னணியில் ஒரு ஏடிஎம் மையம் மற்றும் ஒற்றை இரவில் நொடிக்கும் சம்பவங்களை முன்வைத்து திரைக்கதை நகர்கிறது. த்ரில்லர் கதையாடலின் பொழுதுபோக்கு அனுபவத்தையும், சமூக அவலத்தின் தோலுரிப்பையும் மலையாள படங்களுக்கே உரிய வழக்கமான பாணியில் விவரிக்கிறார்கள்.
பின்னிரவில் ஏடிஎம் வாசலில் பிரசன்னமாகும் மர்ம நபராக ஜெயசூர்யா; மத்திம வயது ஏடிஎம் காவலாளியாக ஜாஃபர் இடுக்கி. இந்த இரண்டு நடிப்பு சூரர்களும் அலுப்பூட்டும் நெடிய இரவின் காட்சிகளை அநாயசமாக கடக்கச் செய்வதில் போட்டி போடுகிறார்கள். தாடிக்குள் புதைந்திருக்கும் புதிர்களும், வன்மம் ஊறிய விழிகளும், வறட்டு சிரிப்புமாக வளைய வருகிறார் ஜெயசூர்யா. பாதுகாவலர் என்ற பதத்துக்கு சற்றும் பொருத்தமில்லாது ஏடிஎம் வாசல்களில் அதிகம் தட்டுப்படும் செக்யூரிட்டிகளை அசலாய் பிரதிபலிக்கிறார் ஜாஃபர் இடுக்கி. தனது தலைக்கு மேல் தொங்கும் கத்தியை உணர்ந்தவராக, இடுக்கிய கண்களின் சந்தேகங்களுடன் ஜாஃபர் இடுக்கி வெளிப்படுத்தும் தடுமாற்றமும் வெகுளியும் கலந்த நடிப்பு பல சந்தர்ப்பங்களில் ஜெயசூர்யாவை ஏப்பமிடுகின்றன. இந்த இருவர் தவிர்த்து இதர காதாபாத்திரங்கள் எதுவும் பெரிதாய் கவனம் ஈர்க்க மறுக்கின்றன. நமீதா பிரமோத் உள்ளிட்டோர் வீணடிக்கப்பட்டுள்ளனர்.
திரைப்படத்தின் தொடக்கமாக வரும் பாடலும் அதற்கு வாயசைக்கும் சிறுமியும், தாய் - மகள் இடையிலான பாசப் பிணைப்பும் கொள்ளை அழகு. அடுத்து அரங்கேறவிருக்கும் அவலத்துக்கான தகிப்புக்கு இந்த ஈரமான காட்சிகள் சிறப்பாக தயார்படுத்துகின்றன. இதே கோணத்தினாலான பார்வை படத்தின் வேறு சில இடங்களில் தடுமாறி தத்தளிக்கவும் செய்கின்றன. குறிப்பாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை குற்றவாளியின் பார்வையிலும் விவரித்ததில் இயக்குநர் நாதிர்ஷா சொதப்பி இருக்கிறார்.
குழந்தையை சிதைக்க முயலும் நபரின் கோணத்தில் சித்தரிக்கப்படும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு தவறான கோணத்தில் விரிகிறது. 80-90’-களின் திரைப்படங்களில் அட்சரமாய் இடம்பெறும் பலாத்கார காட்சிக்கு நிகரான வக்கிரத்தை இந்த ஈசோவும் விதைக்கிறது. இதே அபத்தம் த்ரில்லருக்கான பதைபதைப்பை கூட்டுவதில், 80-களின் மசாலா பாணியில் சொல்லப்படும் தட்டையான காட்சிகளிலும் தொடர்கிறது. இதனால் அடுத்து வரும் காட்சிகளை எளிதில் ஊகிக்க முடிவதால், பொழுதுபோக்கு அனுபவத்தை சொதப்பி வைத்திருக்கிறார்கள். த்ரில்லர் அனுபவத்துக்கு அவசியமான பின்னணி இசையிலும் தொய்வே தென்படுகிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை சினிமா வணிகத்துக்கான கச்சாப் பொருளாக மட்டுமே அணுகியதிலும், அதனையொட்டி பார்வையாளர் தரப்பில் அவசியமான பாதிப்பை விதைக்காத வகையிலும் ஈசோ பிசகியிருக்கிறது. ஆனபோதும், குறைவான பட்ஜெட், ஏமாற்றாத எழுத்து, அழுத்தமான நடிகர்கள் என சாமானிய ரசிகனை ஈர்ப்பதில் மலையாள சினிமாவின் வழக்கமான மேஜிக் இந்த திரைப்படத்திலும் தொடர்கிறது.