ஓடிடி உலா: அனுராக் காஷ்யப் கொண்டாடும் ‘அதினா’


’ஆண்டின் ஆகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று’ என்று அண்மையில் வெளியான ‘அதினா’ பிரெஞ்சு திரைப்படம் குறித்து பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் விதந்தோதி இருக்கிறார். அவரை பின்பற்றி ஓடிடி ரசிகர்கள் பலரும் அதினாவை ரசித்தும் கொண்டாடியும் வருகிறார்கள். அப்படியென்ன இருக்கிறது ‘அதினா’வில்?

பரவும் இனவெறியால் வஞ்சிக்கப்படுவதாக பிரான்ஸை சேர்ந்த சிறுபான்மை கிளர்ச்சியாளர்கள் கலவரத்தில் இறங்குவதும், அதன் பின்னணியிலான அதிகாரத்தின் சதிராட்டம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் பாசப் போராட்டமுமே ‘அதினா’ திரைப்படம்.

பாரிஸ் மாநகரின் புறநகர் பிராந்தியங்களில் ஒன்று அதினா. புகலிடம் தேடி பிரான்சில் குடியேறியவர்கள் இதனை கட்டமைத்திருக்கிறார்கள். அவர்களில் அல்ஜீரிய பின்புலத்தை சேர்ந்த இஸ்லாமிய குடும்பம் ஒன்றுக்கு நேரும் பெருந்துயர் தேசத்தின் கலவர முகமாக மாறுகிறது. 4 சகோதரர்களை உள்ளடக்கிய அந்த குடும்பத்தில் கடைக்குட்டியான ’இதிர்’ என்ற 13 வயது சிறுவன் போலீஸார் சிலரால் அடித்துக் கொல்லப்படுகிறான். இந்த சம்பவம் குறித்த மர்ம வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக, தொடரும் இனவெறியை கண்டிக்கும் போராட்டங்கள் ஆங்காங்கே வெடிக்கின்றன. இதிரின் அண்ணனாக இருபதுகளில் இருக்கும் ‘கரிம்’ கிளர்ச்சியாளர்களுக்கு தளபதியாகிறான். தம்பிக்கு இழைக்கப்பட்ட கொடூரத்துக்கு நியாயம் கோரி, காவல்துறைக்கு எதிரான கலவரங்களை அரங்கேற்றுகிறான்.

இதிர், கரிம் இருவருக்கும் அண்ணனான அப்தெல் ஒரு ராணுவ வீரன். முதிர்ச்சியுற்ற அப்தெல், காவல்துறை மீதும் அதன் விசாரணையின் மீதும் நம்பிக்கை இழக்காதிருக்கிறான். பழிக்குப்பழி என ஆத்திரம் கொண்டு அலையும் தம்பி கரிமை சமாதானப்படுத்த விழைகிறான். இந்த மூவருக்கும் ஒருவகையில் மூத்தவனான மொக்தர் ஒரு சந்தர்ப்பவாதி. செத்துப்போன தம்பி இதிர் குறித்த கவலைகள் அற்றவன், கரிமின் கிளர்ச்சியால் தனது போதைப்பொருள் வணிகம் பாதிப்புக்குள்ளாவதாக நோகிறான். இப்படி சுபாவம் மற்றும் நம்பிக்கையால் வேறுபட்டிருக்கும் சகோதரர்கள் இடையிலான மோதலும், கிளர்ச்சியாளர்கள் - காவல்துறையினர் இடையே வெடிக்கும் கலவரமுமே ‘அதினா’ கதையின் அடித்தளம்.

இத்தனை சம்பவங்களும் அவற்றை இணைத்து இதர மர்மங்களை விடுவிக்கும் கதையும் இந்த விவரணைகள் ஏதுமின்றி அவற்றின் போக்கில் ஆங்காங்கே மடல் விரிக்கின்றன. கண்ணிகளை முடிச்சிட்டு நாமாக கதைப்போக்கின் அடிநாதத்தை அடையாளம் கண்டாக வேண்டும். அப்படியான கதையின் ஆரம்பமே காவல்துறைக்கு எதிரான கலவரத்தில் தொடங்குகிறது. காவல் நிலையம் ஒன்றை தாக்கி அங்குள்ள ஆயுதங்களை கிளர்ச்சியாளர்கள் கொள்ளையடிக்கின்றனர்.

சுமார் 11 நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டில் விரியும் இந்த காட்சியின் வேகம் பார்வையாளர்களை நிமிர்ந்து அமரச் செய்கிறது. அதன் பின்னர் படம் முடியும் வரை அந்த விறுவிறுப்பை கைநழுவாது பாவிக்கிறார்கள். இயக்குநர் ரோமைன் கவ்ராஸ் படைப்புகளில் அதிகம் சிலாகிக்கப்படும் வன்முறை மற்றும் பின்னணி இசை, ‘அதினா’ திரைப்படத்திலும் அதகளம் செய்திருக்கிறது. அடுத்த ஆஸ்கர் விருதுக்கு ரோமைன் கவ்ராஸ் பெயரை அதிகளவு ரசிகர்கள் பரிந்துரைக்கவும் ‘அதினா’ காரணமாகி இருக்கிறது.

படம் முழுக்க கேமரா ஓரிடத்தில் நிற்காது அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது. கதாபாத்திரங்களின் ஓட்டம், தாவல், பதுங்கல் என அனைத்திலும் கேமராவும் பங்கெடுக்கிறது. அவற்றை நுட்பமாக பதிவு செய்யும் சிங்கிள் ஷாட்டுகள் கலவர பூமியின் ஓய்வற்ற தன்மையையும், பதட்டத்தையும் சதா பார்வையாளருக்கு கடத்தவும் முயற்சிக்கின்றன. இனவெறிக்கு எதிராக அவ்வப்போது பற்றிக்கொள்ளும் சீற்றம், வலுக்கும் வலதுசாரிகளின் போக்கு, சிறுபான்மையினரின் நமுத்துப்போகும் நம்பிக்கைகள், அதன் காரணமாக இலக்கின்றி வெடிக்கும் அவர்களின் போராட்டம், அவர்களை நுட்பமாக சீண்டும் அரசியல் மற்றும் அதிகார பீடங்கள்... உள்ளிட்டவை பிரான்சுக்கு அப்பாலும் அடையாளம் காணக் கிடைப்பவை.

இனவெறிக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்களின் போராட்டத்தையும் அவர்கள் மீதான நடைமுறைக்கு அப்பாற்பட்ட கரிசனமோ, பச்சாதாபமோ இன்றி பதிவு செய்ததன் வாயிலாகவும் ஒரு படைப்புக்கான நியாயத்தை கண்டடைய முயல்கிறார்கள். பூச்செடிகளை அலங்கரிக்கும் வெடிகுண்டு விற்பனன், தான் கொண்ட நிலையிலிருந்து அடியோடு மாறும் பிரதான பாத்திரம், கிளர்ச்சியாளர்கள் மீது சட்டத்துக்கு அப்பாற்பட்டு தாக்க துணியாத காவல்துறை உள்ளிட்ட பல சுவாரசிய அம்சங்களும் கதையின் போக்கில் தட்டுப்படுகின்றன. முக்கியமாய் உக்ரைனில் ரஷ்ய கவச வாகனங்களை தாக்கும் ’மாலடாஃப் காக்டெய்ல்ஸ்’(Molotov cocktails) எனப்படும் நம்மூர் பெட்ரோல் குண்டுக்கு நிகரான சித்தரிப்புக்கும் ‘அதினா’வில் அதிக இடம் தந்திருக்கிறார்கள்.

கொல்லப்பட்ட தம்பிக்காக 3 அண்ணன்களும் தத்தம் புரிதல், சுபாவம், நம்பிக்கை மற்றும் முதிர்ச்சிக்கு ஏற்ப எதிர்வினையாற்றுகிறார்கள். தம்பியின் இழப்பைத் தாங்க முடியாத கரிம், பெரும் கலவரத்துக்கு காரணமாகிறான். அவனுக்கு எதிராக காவல்துறையும் பின்னே ராணுவமும் களமிறங்கும்போது, கலவர முகம் நாடெங்கிலும் பரவியிருக்கிறது. காவல்துறையின் விசாரணை மீது நம்பிக்கை வைத்திருக்கும் அப்தெல், தம்பியை சமாதானப்படுத்த முயல்வதுடன் பாதிக்கப்படும் அப்பாவிகளை காப்பாற்றவும் முயல்கிறான்.

இவர்களில் ஒவ்வொருவர் பார்வையிலிருந்தும் விரியும் காட்சிகளும், முன்வைக்கப்படும் நியாயங்களும் அடுத்தடுத்து தடம்புரள்கின்றன. எதிர்பாரா சம்பவங்களும் அவை விடுவிக்கும் புதிர்களுமாக திரைப்படம் முடியும்போது, கதை கைக்கொண்டிருந்த ஓய்வற்ற போக்கு பார்வையாளரையும் பீடித்துக்கொள்கிறது. அவற்றோடு விசித்திரமான எதிர்மறை போக்கினையும் படம் நெருக்கமாக அணுகுகிறது. சினிமாக்களில் அரிதான இந்த பாணி, கதையாக அல்லாது நம்மை அடிக்கடி அச்சுறுத்தும் நிதர்சனத்தை முகத்தில் அறைகிறது. விவாதங்களை கிளப்பியிருக்கும் சமரசமற்ற இந்த அணுகுமுறையும் ‘அதினா’வின் சிறப்புக்கு காரணமாகி இருக்கிறது.

பாலியல் காட்சிகள் இல்லாத ‘அதினா’ அதன் அதிகப்படி வன்முறை சித்தரிப்புகளால் பெரியவர்களுக்கு மட்டுமான திரைப்படமாக இந்தியாவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ஒன்றரை மணி நேரத்தில் விரைந்து முடியும் ‘அதினா’ அனுபவம் அனுராக் காஷ்யபின் பரிந்துரைக்கு கட்டியம் சொல்கிறது. தமிழ் டப்பிங்கிலும் காண நெட்ஃபிளிக்ஸ் வழி செய்திருக்கிறது.

x