ஓடிடி உலா: ‘தமிழ் ராக்கர்ஸ்’


திரைத்துறையை கலங்கடிக்கும் திருட்டு இணையதளங்களின் பின்னணியிலான ஆக்‌ஷன் த்ரில்லர் வலைத்தொடரில், சினிமா உலகின் இருட்டு மூலைகளிலும் வெளிச்சம் பாய்ச்சுகிறது ’சோனி லிவ்’ தளத்தில் வெளியாகியிருக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ வலைத்தொடர்.

சுடச்சுட திருட்டு

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் தங்கள் அபிமானத்துக்குரிய நட்சத்திரத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு தயாராகும் ரசிகர்கள், அந்த திரைப்படம் சுடச்சுட ’தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானதை கண்டு அதிர்வதுடன் வலைத்தொடரின் கதை தொடங்குகிறது. அந்த படத்தின் தயாரிப்பாளர் பரிதாபமாக தற்கொலை செய்துகொள்ள, தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், படைப்பாளிகள் என அனைவரும் கொந்தளிக்கிறார்கள். ஆனால், இணையத்தின் இருள் மூலையில் ஒளிந்துகொண்டு புதிய திரைப்படங்கள் திரையை தீண்டும் முன்னரே ஆன்லைனில் அவற்றை வெளியிடும் முகம் தெரியா எதிரிகளிடம் மோதும் திராணி இன்றி முடங்குகிறார்கள்.

அவர்களில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் படத்தயாரிப்பில் நுழைந்திருக்கும் அனுபவ தயாரிப்பாளர் ஒருவர் அதிகம் புலம்புகிறார். கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அதிரடி ஸ்டார் ஆதித்யாவை வைத்து 300 கோடியில் படம் எடுத்திருக்கும் இந்த தயாரிப்பாளருக்கு, ‘திரையரங்கில் படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக இணையத்தில் வெளியாகும்’ என்ற தமிழ் ராக்கர்ஸின் பகிரங்க அறிவிப்பு இடியாக இறங்குகிறது. இணைய திருடர்களிடமிருந்து தனது திரைப்படத்தை காப்பாற்ற அரசியல், அதிகாரம், பணம் என ஆகமுடிந்த அஸ்திரங்கள் அனைத்தையும் பாய்ச்சுகிறார். அதன்படி ஆக்‌ஷனில் இறங்கும் போலீஸ் புலனாய்வுக் குழு தங்களது அதிரடி நடவடிக்கைகளால் ’தமிழ் ராக்கர்ஸ்’ குழுவை வளைத்தார்களா, உச்ச நட்சத்திரத்தின் சினிமா தப்பியதா உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காண்கிறது ‘தமிழ் ராக்கர்ஸ்’ வலைத்தொடர்.

திகிலூட்டும் தமிழ் ராக்கர்ஸ்

’தமிழ் ராக்கர்ஸ்’ என்ற பெயரில் புத்தம் புதிய சினிமாக்களை திருட்டுத்தனமாக கவர்ந்து இருட்டு இணையத்தில் வெளியிடும் நிதர்சனமே அதே தலைப்பிலான புதிய வலைத்தொடருக்கு வித்திட்டிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் வலைப்பின்னலாக பதுங்கியிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் கும்பலின் பின்னணியில், ஆள்-போதை-ஆயுத கடத்தல்களும் தீவிரவாத தொடர்புகளும் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு. இவற்றில் தமிழ் திரையுலகை சார்ந்த முக்கிய நபர்களின் தொடர்பும் அடக்கம். தமிழ் ராக்கர்ஸை முடக்க நீதிமன்றம், காவல்துறை, அரசியல் என பலதரப்பிலும் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பலமுறை பரிதாபமாக முனைமுறிந்து போயிருக்கின்றன. இவையனைத்தும் வலைத்தொடரிலும் வருகின்றன.

ஓடிடி தளத்துக்கே உரிய சுதந்திரமும், வலைத்தொடருக்கான கட்டமைப்பும் ’தமிழ் ராக்கர்ஸ்’ தொடரின் உருவாக்கத்துக்கு மிகவும் உதவியிருக்கின்றன. வழக்கமான திரைப்படத்தில் பேசுவதற்கு சாத்தியக் குறைவானதை வலைத்தொடர் வாயிலாக சாதித்திருக்கிறார்கள். திருட்டு இணையத்தின் செயல்பாடுகள், அதன் பின்னணியில் இயங்கும் நிழல் நபர்களின் வலைத்தொடர்புகள், அவர்கள் நோக்கம், வருமானம், தொழில்நுட்பம் என அனைத்தையும் நேர்த்தியாக வலைத்தொடர் பதிவு செய்திருக்கிறது. நிஜவுலகின் அதிர்ச்சிகர சம்பவங்களுடன் புனைவுக்கான கூறுகளையும் கலந்ததில், 8 அத்தியாயங்கள் அடங்கிய நான்கரை மணி நீள வலைத்தொடர் அலுப்பூட்டாது பயணிக்கிறது.

ஏவிஎம் - அறிவழகன் கூட்டணி

’தமிழ் ராக்கர்ஸ்’ வலைத்தொடர் வாயிலாக பாரம்பரிய ஏவிஎம் படத்தயாரிப்பு நிறுவனம் ஓடிடி துறையிலும் காலடி வைத்திருக்கிறது. வழக்கமான பிராந்திய வலைத்தொடர் தயாரிப்புகளில் பிரதிபலிக்கும் திணறல்கள் எதுவுமின்றி, ஒரு முழு நீள திரைப்படத்துக்கான சுவாரசியத்துக்கு தயாரிப்பு நிறுவனமும் காரணமாகி இருக்கிறது. படைப்புக் கோரும் பட்ஜெட், படப்பிடிப்பு தளங்கள், நட்சத்திரங்கள் என வலைத்தொடரிலும் பிரம்மாண்டம் காட்டியிருக்கிறார்கள்.

தயாரிப்பு நிறுவனத்துக்கு இணையாக வலைத்தொடர் படைப்பில் தடம் பதித்திருக்கிறார் இயக்குநர் அறிவழகன். ’ஈரம்’, ’குற்றம் 23’, ’ஆறாது சினம்’ உள்ளிட்ட படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்த அறிவழகன், மனோஜ் குமார் கலைவாணனின் கதைக்கு தமிழ் ராக்கர்ஸில் உயிர் கொடுத்திருக்கிறார். இணையத்தில் மறைந்திருக்கும் கிரிமினல்கள், அவர்களுக்கு உறுதுணையாகும் நவீன தொழில்நுட்பம் என அதிகப்படியான தரவுகள், மற்றும் ஆய்வுகளுக்கான உழைப்பை அறிவழகன் குழுவினரும் தந்திருக்கிறார்கள். கோலிவுட்டில் ‘டீடெய்லிங்’ என்பதற்கு முக்கியத்துவதும் தரும் இயக்குநர்களில் ஒருவரான அறிவழகனின் கதை சொல்லலும் வலைத்தொடருக்கு உதவியிருக்கிறது.

நம்பிக்கையூட்டும் நட்சத்திரங்கள்

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்கும் நோக்கில் அதன் பின்னணியிலான சைபர் குற்றவாளிகளை தேடும் குழுவுக்கு தலைமை வகிக்கிறார் உதவி கமிஷனராக தோன்றும் அருண் விஜய். தொடர் நெடுக திரையை ஆக்கிரமிக்கும் இவரது இறுக்கமான முகமும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு தோதான கட்டுடலும் கதைக்கு திடம் சேர்க்கின்றன. சொந்த வாழ்க்கையின் சோகத்தால் சதா குடியும், பணியில் முரட்டுத் தனமுமாக வெடிக்கும் அருண் விஜய், அவ்வப்போது மின்னிடும் ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் ஐஸ்வர்யா மேனன் உடனான ரொமான்ஸில் ரசிக்க வைக்கிறார்.

அருண் விஜய்க்கு போட்டியாக திரையை ஆக்கிரமிப்பவர், அனுபவ சினிமா தயாரிப்பாளராக தோன்றும் இயக்குநர் அழகம் பெருமாள். திரையுலகின் பழம் பெருச்சாளி தயாரிப்பாளருக்கான குணாதிசயங்களுடன் அவர் தோன்றும் காட்சிகளும் சுவாரசியமூட்டுகின்றன. சைபர் தடயவியல் அதிகாரியாக வரும் வாணி போஜனைவிட அவருக்கு வசீகர பின்னணி குரல் தந்தவர் அதிகம் நடித்திருக்கிறார். காமெடிக்கும் இயல்புக்கும் இடையே சரியாக நூல்பிடிக்கிறார் விநோதினி. ஒற்றைக் காட்சியில் தோன்றினாலும் ஒட்டுமொத்தமாய் உள்ளம் கொள்ளையிடுகிறார் எம்.எஸ்.பாஸ்கர். திருட்டு இணையத்தின் இருட்டு நடவடிக்கைகள் குறித்து வலைத்தொடரின் எங்கேயும் நன்னெறி கருத்துகள் புகட்டப்படாதபோதும், எம்.எஸ்.பாஸ்கர் மூலமாக ரசிகர்களின் மனசாட்சியை உலுக்க முயற்சித்திருக்கிறார்கள்.

நிஜமும் நிழலும்

சினிமா ரசிகர்கள் நன்கறிந்த ’தமிழ் ராக்கர்ஸ்’ கதையென்பதால் நம்பத்தகுந்த நிஜமான சம்பவங்கள் வலைத்தொடர் எங்கும் மிரட்டலாக எதிரொலிக்கின்றன. நிதர்சன இணைய திருட்டுக் கும்பலின் பின்னணியில் இலங்கை முதல் கனடா வரை பல்வேறு தியரிகள் உலா வந்தபோதும், வலைத்தொடரில் சினிமா பாணியிலான பின்னணியைச் சேர்த்திருக்கிறார்கள். இதற்காக திருட்டு விசிடி காலத்தில் தொடங்கி இணையதளம் வரை தமிழ் ராக்கர்ஸ் வளர்ச்சியை தங்கள் கற்பனையில் விவரித்திருக் கிறார்கள். ஏராளமான தொழில்நுட்ப தரவுகள் நிறைந்திருப்பதால் கதையோட்டத்துக்கு அவை உதவவும் செய்கின்றன.

இருட்டு இணையத்துக்கு நிகராக, போட்டி பொறாமையின் பெயரில் சினிமா உலகை பீடித்திருக்கும் கேடுகளையும் வலைத்தொடர் தோலுரிக்கிறது. தாங்கள் அடியோடு வெறுக்கும் தமிழ் ராக்கர்ஸை விளம்பரத்துக்காக பயன்படுத்திக் கொள்ளும் படவுலகம், சினிமா ரசிகர்களை சுரண்டும் திரையரங்குகள், ரசிகர் மன்றத்தை சுயலாபத்துக்காக உபயோகிக்கும் நட்சத்திரங்கள் உள்ளிட்ட சினிமா உலகின் கசடுகளை அவர்களின் தரப்பிலிருந்தே நேர்மையாக பதிவு செய்திருப்பதும் கதைக்கு நம்பகம் சேர்க்கிறது. அதிரடி ஸ்டார் ஆதித்யாவாக தோன்றும் உச்ச நட்சத்திரம், அவரை சுற்றிய சம்பவங்கள் அனைத்தும் நடிகர் விஜய்யை பிரதிபலிப்பதும் இந்த நம்பகத்தில் சேர்த்தி.

சமூக ஊடகங்களில் ரசிகர்களின் ஒப்பிடல்

வலைத்தொடரின் வெற்றி

தொடரில் ஆங்காங்கே உறுத்தும் உதட்டசைவில் உட்காராத வசனங்கள், ஒரு சில காட்சிகளின் நீளம், எளிதில் ஊகிக்க வாய்ப்பளிக்கும் திருப்பங்கள், சினிமாக்களில் அதிகம் பார்த்து சலித்த கிளிஷேக்கள் என சொல்வதற்கு சில குறைகள் தென்பட்டபோதும் ஒரு பிராந்திய வலைத்தொடராக தடம் பதித்திருக்கிறது ’தமிழ் ராக்கர்ஸ்’. அடுத்த சீஸனுக்கு அடிபோட்ட வகையிலும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது.

ஓடிடி தளத்தில் வெளியான சூட்டில் ’தமிழ் ராக்கர்ஸ்’ தளத்திலும் இந்த வலைத்தொடர் வெளியாகி உள்ளதாக தெரிகிறது. அப்படி திருட்டு இணையத்தில் எவரேனும் இந்த வலைத்தொடரை தரிசித்தால், அவர்களுக்கு குற்ற உணர்வை விதைப்பதிலும் வலைத்தொடரின் வெற்றி அமைந்திருக்கும்.

x