ஓடிடி உலா ‘தி கிரே மேன்’: ஆக்‌ஷன் வாணவேடிக்கை!


நெட்ஃப்ளிக்ஸ் வரலாற்றில் பெரும் பொருட்செலவிலான படைப்பாக வெளியாகி இருக்கிறது ’தி கிரே மேன்’ திரைப்படம். இதில் நடித்திருக்கும் தனுஷின் நடிப்பு உட்பட பல்வேறு எதிர்பார்ப்புகளை தவிர்த்தால் மட்டுமே, முழுமையான ஹாலிவுட் ஆக்‌ஷன் த்ரில்லர் அனுபவத்தை ’தி கிரே மேன்’ தர இயலும்.

சிஐஏவின் சியாரா!

உளவு நிறுவனங்களின் உண்மை முகம், அதன் நிழல் ஒற்றர்களுக்கு இடையே நடக்கும் மோதல் ஆகியவற்றின் பின்னணியில் ஏராளமான படங்கள் வெளியாகி இருக்கின்றன. அப்படி 12 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான த்ரில்லர் நாவலை அடியொற்றி அதே தலைப்பில் ’தி கிரே மேன்’ வெளியாகி இருக்கிறது. தேச பாதுகாப்புக்கான விலையாக அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ பல்வேறு நிழலான காரியங்களை சத்தமின்றி செயல்படுத்தி வருகிறது. தங்களது நேரடி ஏஜென்டுகளால் இயலாத காரியங்களை வெளி ஆட்களை நியமித்தும் சிஐஏ சாதிக்கிறது. அப்படி, ‘சியாரா’ என்ற தலைப்பிலான அதிரடி நடவடிக்கைகளுக்காக, கொலைக்கைதி ஒருவனை சிறையில் சிஐஏ அடையாளம் காண்பதிலிருந்து திரைப்படம் தொடங்குகிறது. தலைமைக்கு விசுவாசமாக இருக்கும் அவன் ‘சியாரா சிக்ஸ்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறான். உளவு நிறுவனத்துக்கு ஆகாதவர்கள், உள்ளடி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பலரை சட்டத்துக்கு அப்பாற்பட்டு அழித்தொழிக்கும் பணியில் இந்த ’சிக்ஸ்’ ஈடுபடுத்தப்படுகிறான்.

சாகசக்காரர்களின் விரட்டல்

அங்கிருந்து 18 வருடங்கள் கழித்து பாங்காங்கில் அவன் மேற்கொள்ளும் வழக்கமான அழித்தொழிப்பு முயற்சிக்கு கதை தாவுகிறது. இதில் தான் குறிவைக்கும் நபர் தன்னைப் போன்றே இன்னொரு நிழல் உளவாளி என்பதை சிக்ஸ் அறிகிறான். அவனிடமிருந்து சிஐஏ நிறுவனத்துக்கு எதிரான ரகசியங்கள் அடங்கிய டிஜிட்டல் துணுக்கு சிக்ஸ் வசம் வருகிறது. இதனால் சீற்றமடையும் சிஐஏவின் நிழல் தலைமை, சிக்ஸையும் மேற்படி ரகசியத்தையும் கைப்பற்றத் துடிக்கிறது. இதற்காக இன்னொரு முன்னாள் உளவாளியை சிஐஏ நியமிக்கிறது. லாய்ட் ஹென்சிங் எனப்படும் கிஞ்சித்தும் இரக்கம் இல்லாத இந்தக் கொடூரன் சிக்ஸை துரத்த ஆரம்பிக்கிறான். இங்கே தொடங்கும் துரத்தல் பாங்காங், ஹாங்காங், வியன்னா, மொனாகோ, துருக்கி, லண்டன் உட்பட பல்வேறு உலக நாடுகளின் பிரதான நகரங்களில் வலம் வருகிறது. இரு சாகசக்காரர்கள் இடையே எலியும் பூனையுமாக தொடரும் இந்த விரட்டலை அலுக்காமல் ரசிக்கத் தந்ததில் தி கிரே மேன் தப்பிப் பிழைக்கிறது.

ரூஸோ சகோதரர்கள்

நிழல் உளவாளிகள் இடையிலான மோதலை மையமாகக் கொண்ட கதையில் அலுக்காதிருக்க ஆங்காங்கே சென்டிமென்ட் தூவி பரிமாறுகிறார்கள். இதற்காக, சியாரா சிக்ஸை உருவாக்கும் சிஐஏ தலைமை அதிகாரிக்கு ஒரு வளர்ப்பு மகள், அவருக்கும் அந்த சிறுமிக்கும் ஆபத்து என்றெல்லாம் கதையை இழுக்கிறார்கள். திரைப்படத்தின் பட்ஜெட்டான சுமார் ரூ.1,600 கோடியில் சில இலக்கங்களை நீக்கினால், அதே கதையில் எண்பதுகளின் இந்திய சினிமாக்களை அடையாளம் காணலாம். ஆனால், மெகா பட்ஜெட்டுக்கு நேர்மை செய்யும் வகையில் ரசிகர்கள் கண்ணிமைக்க வாய்ப்பின்றி, படம் நெடுக ஆக்‌ஷன் சட்டகங்களால் அதகளம் செய்திருக்கிறார்கள். கேப்டன் அமெரிக்கா மற்றும் அவெஞ்சர்ஸ் வரிசைகளில் பல்வேறு வெற்றிகர திரைப்படங்களை தந்திருக்கும் ஜோ மற்றும் ஆன்டனி ரூஸோ சகோதரர்கள், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்-க்கு வெளியே தந்திருக்கும் ஆக்‌ஷன் படையலாக தி கிரே மேன் அமைந்திருக்கிறது.

நம்பியார் வில்லன்

சியாரா சிக்ஸ் ஏஜென்டாக ரியான் கோஸ்லிங். ஆழமான கதைகளில் பார்த்துப் பழகிய ரியான் முகம் ஆரம்ப காட்சிகளில் அதிரடி உளவாளிக்கு உட்கார மறுக்கிறது. அவருக்கான பின்னணி கதை மற்றும் கதாபாத்திரத்தை எழுதிய வகையில் ரியான் கோஸ்லிங்கின் தனித்துவ நடிப்பு பின்னர் ஒருவாறாக ஒட்டிக்கொள்கிறது. வில்லன் லாய்ட் ஹென்சிங்காக கேப்டன் அமெரிக்காவில் கவர்ந்த கிறிஸ் இவான்ஸ் தோன்றுகிறார். சர்காஸ்டிக் வசனமும், பயமுறுத்தல் பூச்சுமாக வித்தியாசமான வில்லனை படைக்க முயற்சித்திருக்கிறார்கள். வலிந்த இளிப்பும், பிறருக்கு வலி தருவதில் ஆர்வமுமான வில்லன் சித்தரிப்பில் கிறிஸ் இவான்ஸ் பிரமாதப்படுத்துகிறார். ஆனால், அதற்காக நம்பியார் காலத்து சித்திரவதைகளை ஹாலிவுட் வில்லன் மேற்கொள்வது நகைச்சுவையாகக் கடந்து போகிறது. ரியான் - இவான் இடையிலான வசனங்கள் மற்றும் மோதல் காட்சிகள் படுவேகம் மற்றும் சுவாரசியம்!

ஆக்‌ஷன் வாணவேடிக்கை

படத்தின் தொடக்கத்தில் வாணவேடிக்கைகள் மத்தியிலான ஆக்‌ஷன் காட்சி ஒன்று நீளும். இதர ஆக்‌ஷன் காட்சிகளில் அந்த வாணவேடிக்கை இல்லாது போனாலும், அதன் பாதிப்பை உணரச் செய்கிறார்கள். அக்காட்சிகளுக்கான பின்னணி இசை, படத்தொகுப்பு என சகலத்திலும் மெச்சும்படியான உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். முற்றிலும் பெரிய திரைக்கான இந்த படஓட்டத்தை நெட்ஃப்ளிக்ஸ் சின்னத் திரையில் தைத்திருப்பது ஆக்‌ஷன் ரசிகர்களுக்கான சோகம்.

ஒரு காட்சியில், பிரிட்டிஷ் உளவாளி 007 உடன் ஒப்பிட்டு சிக்ஸ் கதாபாத்திரம் வேடிக்கையாக வசனம் பேசும். நிஜத்தில் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு நிகரான ஆக்‌ஷன் காட்சிகளை தி க்ரே மேனில் வடிவமைத்திருக்கிறார்கள். அவற்றில் விஎஃப்எக்ஸ் காட்சிக்ளை தனித்துத் தேடும்படி சிரத்தையாக செதுக்கியிருக் கிறார்கள். படத்தின் 2 மணி நீளமும் ஆக்‌ஷன் கதைக்குத் தோதாகிறது.

எட்டிப்பார்க்கும் தனுஷ்

நாயகன் வசமிருக்கும் டிஜிட்டல் ரகசியத்தை கைப்பற்றும்படி வில்லனால் நியமிக்கப்படும் அதகள கையாக தனுஷ் தோன்றுகிறார். சொற்ப நேரமே வந்தாலும் தனக்கான ஆக்‌ஷன் காட்சிகளில் குறைவைக்காது மின்னுகிறார். அவகாசத்துக்கு அப்பால், தனுஷின் முதல் ஹாலிவுட் பிரவேசம் அவரது ரசிகர்களை ஏமாற்றாது. தனுஷ் ரசிகர்களுக்காக அவரை விளிக்கும் தனி வசனத்தையும் சேர்த்திருக்கிறார்கள். தமிழ் டப்பிங் பெரிதாக உறுத்தவில்லை. சவாலான இடங்களில் குறுகத்தரிக்கும் தமிழ் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. சிஐஏ தலைமையின் இன்னொரு அதிகாரியாக தோன்றும் ஜெசிகா ஹென்விக்கும், குறைந்த வாய்ப்புகளில் நிறைவாக செய்திருக்கிறார். அழகு உளவாளியாக தோன்றும் அனா டி அர்மாஸ் குறிப்பிட்டு சொல்லும்படியான வாய்ப்பு அமையாதபோதும் கதையின் திருப்பங்களுக்கு உதவுகிறார்.

ஆக்‌ஷன் ரசிகர்கள் தவிர்த்து ஏனையோருக்கு தி கிரே மேன் செவிகளை பதம்பார்க்கும் இரைச்சல் அனுபவத்தையே தரக்கூடும். உலகம் சுற்றும் திரைக்கதை, படத்தின் செலவினத்துக்கு நியாயம் சேர்க்க மறுக்கிறது. காட்சிகளை அமைத்ததில் நவீனம் பளிச்சிட்ட போதும் கதையின் போக்கிலும், ஊகிக்கக்கூடிய திருப்பங்களிலும் முந்தைய தலைமுறை யினருக்கான ஆக்‌ஷன் அனுபவத்தையே ’தி கிரே மேன்’ நினைவூட்டுகிறது.

12 வருடங்களுக்கு முன்னர் வெளியான நாவலை அடியொற்றி அதிகாரபூர்வமற்ற வகையில் ஏராளமான ஆக்‌ஷன் த்ரில்லர்கள் வெளியாகி இருக்கும்போது, அதன் அதிகாரபூர்வ திரை ஆக்கத்துக்கு நவீனத்தின் சாயலில் கூடுதல் பூச்சு தந்திருக்கலாம். அவ்வாறின்றி கதைக்கான உள்ளடக்கத்துக்கு உட்பட்டு ஆக்‌ஷன் காட்சிகளின் மிரட்டலோடு அடக்கி வாசித்திருக்கிறார்கள். கையடக்க தொடுதிரைகளைவிட ஸ்மார்ட் டிவியில் குடும்பத்தோடு ரசிப்பதற்கான திரைப்படம் ’தி கிரேன் மேன்’.

x