தியேட்டர்களில் சறுக்கிய திரைப்படங்கள் சில ஓடிடி வாயிலாக தங்கள் வெற்றியை உறுதி செய்யும் அதிசயம் இப்போது நடந்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களின் சமூக அரசியலை கூராயும் ’அனேக்’ திரைப்படம் அவற்றில் முக்கியமானது. பாக்ஸ் ஆபிஸில் சொதப்பிய இந்த படம், ஓடிடியில் கரையேறியதில் கடந்த ஒரு வாரமாக நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் முதலிடம் பிடித்திருக்கிறது.
புறக்கணிக்கப்பட்ட குரல்கள்
டெல்லி ஆட்சியாளர்களுக்கு நிகராக பாலிவுட் படவுலகமும் வடகிழக்கு மாநிலங்களை புறக்கணித்து வந்திருக்கிறது. அப்படி வெளியான ஒருசில படங்களும் எல்லைக்கு அப்பாலிருந்தே, வடகிழக்கின் பிரச்சினைகளுக்கான காரணங்களை துழாவியிருக்கின்றன. 'அனேக்’ வாயிலாக இயக்குநர் அனுபவ் சின்ஹா அதற்கு பிராயசித்தம் தேடியிருக்கிறார். அதிலும் எல்லைகளுக்கு உள்ளிருந்தே ஆதாரமான பிரச்சினைகளை ஆராய்ந்திருக்கிறார். பாராமுகமாக நீடிக்கும் வடகிழக்கு மக்களின் கோரல்களையும் அதில் பதிவு செய்திருக்கிறார்.
சிறப்பு அதிகாரத்தின் பெயரில் வடகிழக்கை ஆக்கிரமித்திருக்கும் இந்திய ராணுவம், கேள்வியின்றி மண்ணின் மக்களை அவை வேட்டையாடும் போக்கு, மக்கள் போராட்டத்தின் பெயரில் போதை மருந்து மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபடும் கிளர்ச்சியாளர்கள், சகோதர யுத்தத்தில் அழிந்தொழியும் அக்குழுக்களின் உள்ளரசியல், அவற்றை ஊதிவிடும் அரசு உளவாளிகள்... என ’அனேக்’ திரைப்படம் அம்பலப்படுத்தும் உண்மைகள் அநேக இந்தியர்கள் அறியாதது. வீட்டு கூர்க்காவாகவும், மசாஜ் பார்லர் யுவதிகளாகவும், துரித உணவகங்களின் கடைநிலை சிப்பந்திகளாகவுமே வடகிழக்கு மக்களை பார்த்து பழகிய பொதுப்புத்தி சமூகத்துக்கு ‘அனேக்’ புதிய திறப்பாகவும் அமையக் கூடும்.
அனுபவ் சின்ஹாவின் முத்தொகுதி
ஷாருக்கானை வைத்து ’ரா.ஒன்’ போன்ற ஆக்ஷன் மசாலாக்களை கொடுத்த அனுபவ் சின்ஹா, பின்னர் ’முல்க்’, ’தப்பட்’, ’ஆர்டிகிள் 15’ படங்களின் வாயிலாக தேசம் நெடுகிலும் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்தியாவின் ஆதாரமான பன்மைத்துவத்தை பறைசாற்றும் வகையில் அவர் தொடங்கிய முத்தொகுதி திரைப்படங்களின் நிறைவாக ’அனேக்’ வெளியாகி உள்ளது. மதவாதம் (’முல்க்’) மற்றும் சாதியத்தின்(’ஆர்டிக்கிள் 15’) முகமூடிகளை கிழித்ததன் வரிசையில், நாட்டில் இப்போது அதிகம் விவாதிக்கப்படும் அடையாளச் சிக்கலை மையப்படுத்தி ’அனேக்’ தந்திருக்கிறார்.
இந்தியாவின் தனிச் சிறப்பே அதன் பன்மைத்துவம்தான். வேறுபட்ட மக்களும் அவர்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம், வழிபாடு உள்ளிட்டவையும் உலகின் வேறெங்கும் காண முடியாதது. ஆனால், அண்மைக் காலமாக அந்த அடையாளங்களைத் தகர்த்து, குடிமக்கள் என்ற பெயரில் ஒற்றைத்துவ கோட்டில் நிறுத்தும் முயற்சி கடும் விவாதங்களை கிளப்பி வருகிறது. தேச விரோதி என்ற பழியிலிருந்து தப்பிக்க, குறிப்பிட்ட தரப்பு மக்கள் சதா தங்களது தேசபக்தியையும், விசுவாசத்தையும் நிரூபிக்க வேண்டிய நெருக்கடிக்கும் ஆளாகி வருகிறார்கள். இவற்றின் மத்தியில் வடகிழக்கு மண்ணிலிருந்து அனுபவ் சின்ஹா உடைத்துப் பேசியிருக்கும் நுண்ணரசியல் கவனம் பெற்றிருக்கிறது.
உள்ளடி உளவாளி
உள்ளடுக்குகளில் சமூக - அரசியல் கூறுகளை ஆராய்ந்தாலும், மேலடுக்கில் ஆக்ஷன் த்ரில்லருக்கான பொழுதுபோக்கு அனுபவத்தையும் ’அனேக்’ பூர்த்திசெய்கிறது. வடகிழக்கு மண்ணில் அண்டர் கவர் ஏஜென்டாக உலவும் இளைஞன் ஜோஷுவா. மத்திய அரசு உளவாளியான இவனது பணிகளில், அங்கு கோலோச்சும் முப்பதுக்கும் மேற்பட்ட போராட்டக் குழுக்களின் தீவிரத்தை தணிப்பதும் அடங்கும். இவன், பிராந்தியத்தில் அமைதியை தழைக்கச் செய்வதன் பெயரில் டெல்லிக்கு உவப்பான அடித்தளத்தை அங்கே உருவாக்க பல உள்ளடி விவகாரங்களையும் கட்டமைக்கிறான்.
அதில் ஒன்றாக, முன்னணி போராட்டக் குழுவை முக்கியத்துவம் இழக்கச்செய்யவும், அதன் தலைவரை மத்திய அரசின் சமாதான ஒப்பந்தத்துக்கு இணங்கச் செய்யவும், இல்லாத போட்டிக் குழுவுக்கான சாத்தியங்களை உருவாக்குகிறான். எதிர்பாரா வகையில் அதே பெயரிலான ஆயுதக் குழு ஒன்று மக்கள் ஆதரவுடன் ரகசியமாய் வளர்ந்து நிற்கிறது. இவற்றினூடாக பேச்சுவார்த்தையின் மூலம் அமைதிக்கு வித்திட முயலும் உளவாளியின் வியூகங்களும், அதிரடி மோதல்கள் மூலமாக அமைதியை நிறுவ விரும்பும் அவனது மேலிடத்தின் மறைமுகங்களும் குறுக்கிடுகின்றன. இந்த உளவாளின் போக்கில் இன்னும் சிலரின் கதைகளை இழைத்து முழுமையான திரைப்பட அனுபவம் தர முயல்கிறது அனேக்.
அனுபவ் - ஆயுஷ்மான் கூட்டணி
பான் இந்தியா என்ற பெயரில் மசாலா திரைப்படங்கள் மட்டுமே அலங்கரிப்பதன் வரிசையில், அனுபவ் சின்ஹாவின் ’ஆர்டிகிள் 15’ என்ற சமூக உணர்வு கொண்ட திரைப்படமும் அதிசயமாய் வரவேற்பை பெற்றது. அது பல்வேறு மொழிகளில் மறுஆக்கமும் செய்யப்பட்டு வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘நெஞ்சுக்கு நீதி’யாக இதன் தமிழ் பதிப்பும் வெளியானது. ’ஆர்ட்டிகிள் 15’-ல் கவனம் ஈர்த்த ஆயுஷ்மான் குரானா, ’அனேக்’ உளவாளியாக அனுபவ் சின்ஹாவுடன் மீண்டும் இணைந்திருக்கிறார்.
அபாரமான உடல்மொழியுடன் வலம் வரும் ஆயுஷ்மான் மூலமாக திரைப்படம் எழுப்பும் பல கேள்விகள் பார்வையாளர்களின் மனசாட்சியை உலுக்கக்கூடியவை. உளவாளியின் மேலதிகாரியாக தோன்றும் மனோஜ் பஹ்வா ஒரு காஷ்மீரியாக தன்னை உணர்வதிலும், வடகிழக்கின் ஆதார பிரச்சினைகளை முதலில் அலட்சியமாகவும் பின்னர் ஆதுரமாக உணரத் தலைப்படுவதிலும் வித்தியாசம் காட்டுகிறார். அவரை இயக்கும் அமைச்சராக தோன்றும் குமுத் மிஸ்ரா, அப்பட்டமான அரசியல்வாதியின் சுயரூபத்தை தோலுரிக்கிறார்.
படைப்பின் ஆதார நோக்கம்
இந்தியாவுக்குள் சிதறிக் கிடக்கும் ’இந்தியாக்கள்’ என்றுமே படைப்பாளர்களை பதறவைப்பவை. வடகிழக்கின் பிரச்சினைகளை அலசுவதிலும் இவை விதிவிலக்கல்ல. வடகிழக்கில் நசுக்கப்படுவோரின் உரிமைக் குரலை எதிரொலிப்பதா அல்லது பெரும்பான்மை இந்தியாவின் அதிகாரக் குரலை பின்தொடர்வதா என்ற ஊசலாட்டத்துக்கு அனேக் திரைப்படமும் ஆளாகி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிப்பதே உண்மையான படைப்பின் ஆதார நோக்கமாக அமைய முடியும். ஆனால், வணிக சினிமாவுக்கான இரையாக மேற்கண்ட இரண்டிலும் சமநிலை பேணும் முயற்சியில் திரைப்படத்தின் முழுமையும், கதையின் ஆன்மாவும் சில இடங்களில் காவு போகின்றன. இது தவிர, பெரும்பான்மை இந்தியர்களால் புரிந்துகொள்ளவே முடியாத வடகிழக்கின் பிரச்சினைகளை சில காட்சிகள் மேலும் குழப்பி இருக்கின்றன.
இந்தியா யார் வீட்டுச் சொத்து?
புதிரான பள்ளி ஆசிரியரின் மகளாக பிறந்து அந்நியனுடன் காதலும், குத்துச் சண்டையில் பித்துமான வடகிழக்கு யுவதியாக மண்ணின் மகளான ஆண்ட்ரியா நடித்துள்ளார். ’இந்திய அணியில் சீனத்துப் பெண்ணா?’ என்று தனது தோற்றத்தை எள்ளி நகையாடும் டெல்லியாளர்கள் மத்தியில் தன்னை நிரூபிக்க இன்னொரு மேரி கோம்-ஆக உருவெடுக்கும் ஆண்ட்ரியாவின் கதை இணையான இன்னொரு தளத்தில் பயணிக்கிறது.
“இந்தியா ஒன்றும் உங்கப்பன் வீட்டு சொத்து இல்லை...” என்று க்ளைமாக்சில் அவர் பறக்கவிடும் குத்துகளில் தேசபக்தி ரசிகர்களை சிலிர்க்க வைப்பார். இத்துடன் கிளர்ச்சியாளர் குழுக்களில் அடைக்கலமாகும் பதின்ம வயதினரின் பின்னணியை விவரிக்க ’நிகோ’ என்ற சிறுவனின் பரிதாபக் கதையையும் அனேக் பேசுகிறது. இந்த இருவர் உட்பட வடகிழக்கின் மைந்தர்களையே பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருப்பது படத்தில் ஒன்றச் செய்கிறது. ’அமைதியைவிட யுத்தத்தை பராமரிப்பது எளிது’ போன்ற வசனங்கள் திரைக்கதைக்கு பலம். துல்லிய தாக்குதல் மற்றும் பிரம்மாண்ட சிலை எழுப்புதல் குறித்த அரசியல் பகடிகள் ரசிக்க வைக்கின்றன. ’அனேக்’ திரைப்படத்தை தமிழ் டப்பிங்கிலும் காண நெட்ஃப்ளிக்ஸ் உதவுகிறது.