சூப்பர் ஹீரோக்களின் அட்டகாசம்: அமெரிக்க வலைத்தொடர்
வல்லவர்களான சூப்பர் ஹீரோக்கள் நல்லவர்களாகவும் இருந்தேயாக வேண்டுமா? இந்த கேள்வியிலிருந்து உருவானது, அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரத்யேக வலைத்தொடரான ’தி பாய்ஸ்’ (The Boys). செவன் என்ற குழுவில் செயல்படும் சூப்பர் ஹீரோக்களை ரட்சகர்களாக வெகுஜனம் தொழுகிறது. ஆனால், சுய நலமும், திமிரும், பேராசையும் வாய்த்த இந்த சூப்பர் ஹீரோக்கள் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு விலைபோகிறார்கள். கபட ரகசியங்கள் பொதித்திருக்கும் இவர்களுக்கு எதிராக ’தி பாய்ஸ்’ என்ற இன்னொரு குழு கிளம்புகிறது.
மக்களின் நம்பிக்கைகளை புறந்தள்ளி மங்காத்தா ஆட்டம் போடும் கெட்ட சூப்பர் ஹீரோக்களை ’பாய்ஸ்’ சமாளிக்க முயல்வதும், அவை தொடர்பான போராட்டங்களுமே இந்த அமெரிக்க வலைத்தொடர். சூப்பர் ஹீரோ குறித்த கற்பிதங்களை உடைக்கும் இந்த வலைத்தொடர், ரசிக வரவேற்புக்கு அப்பால் எம்மி விருதுகளின் பரிந்துரைக்கும் ஆளாகி இருக்கிறது. தலா 8 அத்தியாயங்களுடன் 2019-ல் முதல் சீஸனில் தொடங்கிய ’தி பாய்ஸ்’ வலைத்தொடரின் முன்றாவது சீஸன் தற்போது வெளியாகி இருக்கிறது. வழக்கமான அறிவியல் புனைவு ஆச்சரியங்கள், ஆக்ஷன் காட்சிகள், டார்க் காமெடி ஆகியவற்றுடன், இந்த சீஸனில் கூடுதலாய் சில சூப்பர் ஹீரோக்கள் அறிமுகமாகிறார்கள்.
நித்யானந்தாவை அம்பலப்படுத்தும் ஆவணத்தொடர்
உடல்நிலைக் கோளாறு காரணமாக செத்துப் பிழைத்திருக்கும் நித்யானந்தா, தனது 2.0 புறப்பாட்டுக்கு தயாராகி வருகிறார். இதன் மத்தியில் நித்தியின் ரகசியங்களை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தும் ஆவணத்தொடர் ஒன்றினை ’டிஸ்கவரி+’ தனது ஒரிஜினல்ஸ் வரிசையில் வெளியிட்டுள்ளது. 'மை டாட்டர் ஜாய்ன்ட் எ கல்ட்’ (My Daughter Joined A Cult) என்ற தலைப்பிலான இந்த ஆவணத்தொடரின் முதல் சீஸன், 3 அத்தியாயங்களுடன் வெளியாகி இருக்கிறது. நித்யானந்தா குறித்த ஆவணப்பதிவுகள் பலவும் அவரது அபிமானிகளால் புனையப்பட்டவை. வேறுபலவை பரபரப்புக்கான புரட்டுகள் நிறைந்தவை. மாறாக, டிஸ்கவரி ப்ளஸின் படைப்பு, ஒரு புலனாய்வு ஆவணப்படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பாடமாகவும் உள்ளது.
மேற்குலக பார்வையாளர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டதால், இந்தியர்கள் கவனத்தில் விடுபட்ட விவரங்கள் பலவற்றையும் ஆவணத்தொடர் ஆழமாக அலசி இருக்கிறது. நித்தியின் குஜராத் ஆசிரமத்தில் அடைபட்டிருக்கும் தங்கள் மகள்களை விடுவிக்க கோரும் தமிழக பெற்றோரிடம் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. அப்படியே திருவண்ணாமலை பூர்வாசிரம நித்தியிடம் தொடங்கி, பிடதி ஆசிரமம் வழியாக மதுரை ஆதீன சர்ச்சை வரை செல்கிறது. பின்னர், நித்தியின் லீலைகள், ஆசிரமத்தில் அரங்கேறிய மர்ம மரணங்கள் மற்றும் பாலியல் சுரண்டல்கள் ஆகியவற்றை, பாதிக்கப்பட்ட உள் மற்றும் வெளிநாட்டு முன்னாள் சிஷ்யகோடிகளே புட்டு வைக்கிறார்கள்.
தாஜ்மஹாலில் சோட்டா பீம்: அனிமேஷன் திரைப்படம்
நெட்ஃப்ளிக்ஸ் ஜுனியர் வரிசையில், முற்றிலும் குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படமாக ’மைட்டி லிட்டில் பீம்: ஐ லவ் தாஜ்மஹால்’ (Mighty Little Bheem: I Love Taj Mahal) வெளியாகி இருக்கிறது. தாஜ்மஹாலை தரிசிக்க அழைத்துச் செல்லப்படும் சோட்டா பீம், அங்கே கரடி பொம்மையை இழக்கும் சிறுமிக்காக செல்ல சாகசங்கள் நிகழ்த்துகிறான். ஒட்டகம், யானைகளில் எல்லாம் தாவுகிறான். தனது நண்பனும் கதையின் வில்லனுமான காலியாவுடன் வழக்கம்போல மல்லுக்கட்டுகிறான்.
முழுக்கவும் தாஜ்மஹால் பின்னணியில் அதன் சகல மூலைகளிலும் இருந்து சுழலும் கேமரா கோணங்களில் அனிமேஷன் காட்சிகள் விரிகின்றன. சோட்டா பீம் இதில் இன்னும் ’சோட்டா’வாக தவழும் வயதில் தென்படுகிறான். இதனால் வசனங்கள் இன்றியே கதை நகர்கிறது. அதேசமயம், குழந்தைகள் ரசிக்கத்தக்க ரம்யமான கதையோட்டமும் உண்டு. நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பு என்பதால், வழக்கமான தொலைக்காட்சி கார்ட்டூன்களில் காணக்கிடைக்கும் சோட்டா பீம் கதைகளைவிட காட்சிகள் செறிவாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சிறாருக்கான திரைப்படம் என்பதால் நீதிநெறியையும் கதையோட்டத்தில் கலந்திருக்கிறார்கள்.
சித்தியளிக்கும் முத்தம்: கொரிய வலைத்தொடர்
அந்த இளம்பெண்ணுக்கு விசித்திரமான சித்தி ஒன்று வாய்த்திருக்கிறது. அவள் எவரையேனும் முத்தமிட்டால் அந்த நபரின் மொத்த எதிர்காலத்தையும் கணித்து விடுவாள். இந்த ஒற்றை சுவாரசியத்தை அடித்தளமாக்கி காமெடி - ரொமான்ஸ் களேபரங்களை அடுக்கிய, அறிவியல் புனைவு ஃபாண்டஸி வலைத்தொடராக வெளியாகி இருக்கிறது ’சிக்ஸ்த் சென்ஸ் கிஸ்’ (Sixth Sense Kiss). இந்த தென்கொரிய வலைத்தொடரை டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் காணலாம்.
இதர நேரடி ஓடிடி படைப்புகள்
நெட்ஃப்ளிக்ஸின் ’மனி ஹெய்ஸ்ட்’ வலைத்தொடர் பாதிப்பில், தெலுங்கு மசாலா தோய்த்து உருவாக்கி இருக்கும் 9 ஹவர்ஸ் (9 Hours) என்ற க்ரைம் வலைத்தொடரை, டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் தமிழிலும் பார்க்கலாம். நாய் வளர்ப்போர் இல்லங்களில் மனிதருக்கும் இந்த வளர்ப்பு பிராணிக்கும் இடையிலான பந்தம் மற்றும் புரிதல்களை சுவாரசியமான புனைவாக பரிமாறும் ’மேன், உமன், டாக்’ (Man, Woman, Dog) என்ற வலைத்தொடரும் இதே தளத்தில் வெளியாகி இருக்கிறது.
மற்றுமொரு மெக்ஸிகன் கேங்ஸ்டரின் சுயசரிதையை Malverde: El Santo Patrón என்ற தலைப்பிலான ஸ்பானிஷ் வலைத்தொடராக நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டிருக்கிறது. நேரம் நகர்வேனா என்கிறது என்பவர்களுக்கு, 80 அத்தியாயங்கள் அடங்கிய இந்த வலைத்தொடரை பரிந்துரைக்கலாம். அண்ணன், தங்கை பாசத்தை பிழியும் மாண்டரின் மொழி திரைப்படமான ’நைஸ் வியூ’ (Nice View) இதே தளத்தில் வெளியாகி உள்ளது.
நித்யானந்தாவின் முன்னோடிகளான அசராம் பாபு மற்றும் குர்மித் ராம் ரஹிம் சிங் ஆகிய சாமியார்களின் மோசடிகளை புனைவில் தோய்த்த, ’ஆஷ்ரம்’ வலைத்தொடரின் மூன்றாவது சீஸனை எம்எக்ஸ் பிளேயரில் காணலாம்.
திரையரங்கிலிருந்து ஓடிடிக்கு
பிரித்விராஜ், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடிப்பில் மலையாள கோர்ட் டிராமாவான 'ஜனகணமன’, ஹாலிவுட் நகைச்சுவை திரைப்படமான ’ஹியர் டுடே’ (Here Today), இந்தோனேசிய மொழியில் காதல் ரசம் சொட்டும் Story of Dinda: Second chance of Happiness திரைப்படம் ஆகியவற்றை நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.
மராத்தி திகில் திரைப்படமான Raudra, மற்றுமொரு கரோனா லாக் டவுண் காதல் காமெடியான Jal Wayu Enclave என்ற பஞ்சாபி படம், ஹாலிவுட் திகில் திரைப்படமான Paranormal Activity: Next of Kin, ஃபாண்டஸி சினிமாவான Fantastic Beasts: The Secrets of Dumbledore ஆகியவற்றை அமேசான் ப்ரைம் வீடியோவில் காணலாம்.
மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த ’சர்காரு வாரி பாட்டா’ தெலுங்கு ஆக்ஷன் திரைப்படம், ஹாலிவுட் ஆக்ஷன் திரில்லரான ஏஜெண்ட் கேம் (Agent Game) ஆகியவை அமேசான் ப்ரைம் வீடியோவில் கட்டண அடிப்படையில் காணக்கிடைக்கின்றன. இந்த இரவல் கட்டண திட்டத்திலிருந்த ’கேஜிஎஃப்-2’ சூப்பர்ஹிட் திரைப்படத்தை, தற்போது அனைத்து அமேசான் ப்ரைம் சந்தாதாரர்களும் தரிசிக்க வழி செய்துள்ளது அமேசான்.