சர்வதேச ஓடிடி சந்தையில் பிரதான இடம் வகிக்கும் நெட்ஃப்ளிக்ஸ், எதிர்வரும் 2023-ல் தமிழ் மற்றும் தெலுங்கு படவுலகை மையமாகக் கொண்டு தனது இந்திய இலக்கை எட்ட தீவிர திட்டங்களில் குதித்துள்ளது.
வெளிநாடுகளில் பிரபலமான ஓடிடி பயன்பாடு, கரோனா காலத்துக்கு முன்பு வரை இந்தியாவில் பெரிதாக எடுபடாதிருந்தது. இந்திய ரசிகர்களை ஆக்கிரமித்திருந்த தொலைக்காட்சி நெடுந்தொடர்கள், சந்தா செலுத்தி பார்ப்பதில் ஆர்வமின்மை, ஓடிடி தளங்களில் இடம்பெற்றிருந்த குறைவான உள்ளூர் படைப்புகள் போன்ற காரணங்களால் ஓடிடி பக்கம் திரும்பாதிருந்தனர். அமேசான் நிறுவனம் தனது மின் வர்த்தகத்தின் ’ப்ரைம்’ பயனர்களுக்கான கூடுதல் சலுகையாக ப்ரைம் வீடியோவை வழங்கி வந்ததிலும், ஹாட் ஸ்டார் நிறுவனம் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தததிலும் கணிசமான சந்தாதாரர்களை இவை தக்க வைத்திருந்தன. உடன் தலையெடுத்த ஒரு சில சுதேசி ஓடிடி நிறுவனங்களும், வயது வந்தோருக்கான மலினமான படைப்புகளில் கல்லா கட்டுவதோடு சேவையில் திருப்தி கொண்டன.
இந்த சூழலில் ஆரவாரமாய் இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ் காலடி வைத்த போதும், உலக சினிமா ரசிகர்களுக்கு அப்பால் பெரிய ஆதரவு கிட்டவில்லை. நெட்ஃப்ளிக்ஸின் கட்டண விகிதமானது போட்டி நிறுவனங்களைவிட அதிகமிருந்ததும், உள்ளூர் படைப்புகள் அரிதாக இருந்ததும் முக்கிய காரணங்களாகின. ஓடிடி உலகின் நாடித் துடிப்பை உணர்ந்த பெரும் தொலைக்காட்சி நிறுவனங்கள், தங்கள் குழும சேனல்களின் மெகா சீரியல்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளை வலையேற்றுவதற்காக தனி ஓடிடி கடை திறந்தன. தொடர்ந்து இன்ன பிற சர்வதேச ஓடிடி நிறுவனங்களும் இந்தியாவில் நுழைந்ததும் போட்டி எகிறியது. கட்டற்ற இணைய இணைப்பின் கதவுகளைத் திறந்துவிட்ட ஜியோ நிறுவனமும் தன் பங்குக்கு ஓடிடி கோதாவில் குதித்தது.
கரோனா பரவலின் மத்தியில் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதில், வீடுகளில் முடங்கிய மக்கள் ஓடிடி தளங்களை ஊடுருவ ஆரம்பித்தனர். திரையரங்க வெளியீட்டுக்காக திட்டமிடப்பட்ட திரைப்படங்கள் பலவும், கடந்த 2 ஆண்டுகளாக ஓடிடியில் தஞ்சமடைந்தன. இதன் மூலம், ஒதுங்கியிருந்த வெகுஜன சினிமா ரசிகர்களின் வருகையையும் ஓடிடி தளங்கள் அறுவடை செய்தன. தொடர்ந்து இந்த நிறுவனங்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் வருமானமும் எதிர்பாரா வகையில் உச்சம் தொட்டன. இவற்றின் வருமானத்தை புதிய சந்தாதாரர்களின் எண்ணிக்கையும், அவர்களின் அடுத்தடுத்த சந்தா புதுப்பித்தலுமே தீர்மானிக்கின்றன. கரோனா உபயத்தில் இந்த இரண்டுமே ஓடிடி தளங்களுக்கு சுலபமாய் சாத்தியமாயின.
ஆனால், கரோனா காலத்தின் முடிவில் இந்த 2 இலக்குகளிலும் பலமாய் அடிவாங்கின. திரையரங்குகள் திறக்கப்பட்டதும், ஓடிடி தளங்களுக்கான புதுப்பட வரத்து குறைந்தது. தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பொதுமக்கள் மத்தியில், ஓடிடி தளங்களின் முக்கியத்துவம் குறைந்தது. கரோனா காலத்துக்குப் பிந்தைய பணவீக்கம் காரணமாக, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் முதலடியாக பொழுதுபோக்கு அம்சங்களில் கைவைத்தனர் மக்கள். இதில் சக ஓடிடி நிறுவனங்களைவிட அதிகமாக நெட்ஃப்ளிக்ஸ் அடிவாங்கியது. சுதாரித்துக்கொண்டு கட்டண விகிதங்களை தரைமட்டத்துக்கு தளர்த்தி, ஒரே கணக்கில் பலரும் பார்க்கும்படியான வழிமுறைகளை அறிமுகம் செய்தபோதும் நெட்ஃப்ளிக்ஸ் சரிவினை தடுக்க முடியவில்லை. இந்தியாவில் மட்டுமன்றி சர்வதேசளவிலும் இந்த இழப்பு நெட்ஃப்ளிக்ஸை அதிகம் பாதித்தது.
சறுக்கல்களை ஆறஅமர ஆராய்ந்த நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம், இருக்கும் இந்திய சந்தாதாரர்களை தக்கவைத்துக்கொள்ளவும், புதியவர்களை தொடர்ந்து ஈர்க்கவும் இயன்ற நடவடிக்கைகளில் தற்போது இறங்கி உள்ளது. அப்படி எடுக்கப்பட்ட முடிவுகளில் முக்கியமானதாக, பாலிவுட்டை புறந்தள்ளி தென்னக ரசிகர்கள் பக்கம் கரிசனத்தோடு திரும்பியிருக்கிறது. குறிப்பாக, கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்களை குறிவைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் புதிய படைப்புகளை களமிறக்க முடிவு செய்துள்ளது. திரை நட்சத்திரங்களை தொழுவதிலும், திரைப்படங்களை கொண்டாடுவதிலும் வெறித்தனமான ரசிகர்களை அதிகம் கொண்ட இந்த 2 மொழிகளிலும், நெட்ஃப்ளிக்ஸின் புதுமையான படைப்புகள் வெளியாக இருக்கின்றன.
இந்த இரண்டு மொழிகளில் தெலுங்குக்கு, நெட்ஃப்ளிக்ஸ் முதல் முக்கியத்துவம் தந்திருக்கிறது. நட்சத்திரங்களை முன்னிறுத்தி எந்த படைப்பை வழங்கினாலும் டோலிவுட் ரசிகர்கள் அவற்றை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறது. அதில் ஆழம் பார்த்ததன் அடிப்படையில் பின்னர் தமிழுக்கான முயற்சிகள் இருக்கும். இப்போதைக்கு தெலுங்கில் பெரும் நட்சத்திரங்கள், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களுடன் நெட்ஃப்ளிக்ஸின் பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது. எம்மாதிரியான நிகழ்ச்சிகள் என்பதில் மட்டும் கமுக்கம் காக்கிறார்கள். திரைப்படம், வலைத்தொடர்களுக்கு அப்பால் ரசிக மனோபாவம், மண்ணின் மணம் ஆகியவற்றில் ஆழம் பார்க்கும் பட்டிமன்ற பாணியிலான பேச்சரங்கம், புதுமையான ஸ்டாண்ட் அப் காமெடி மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் இடம்பெறும் எனவும் தெரிய வருகிறது.
நெட்ஃப்ளிக்ஸின் இந்த வியூகம் எடுபடுமா என்பதை அறிய இன்னும் ஆறு மாதங்களேனும் காத்திருக்க வேண்டும். ஆனால், நெட்ஃப்ளிக்ஸின் நகர்வை மோப்பம் பிடித்த பல தெலுங்கு சினிமா நிறுவனங்கள் சொந்தமாக ஓடிடி தளங்களை தொடங்க சித்தமாயுள்ளன. ஓடிடி வணிகத்தைப் பொறுத்தவரை ’அவை தப்பிப் பிழைப்பதற்கு சர்வதேச ரசிகர்கள் அவசியம்; பிராந்திய அளவில் உருவாகும் ஓடிடி தளங்களால் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாது’ என்பதே இதற்கு முந்தைய கணிப்பாக இருந்தது. ஆனால், அல்லு அர்ஜூனின் ’ஆஹா’ ஓடிடி தளம் தெலுங்கில் புதிய அத்தியாயம் படைத்து அந்தப் பார்வையை பொய்யாக்கியது.
பாலிவுட்டுக்கு வெளியே பிராந்திய அளவில் தொடங்கப் பட்டதுடன், அதனையே தாரக மந்திரமாக்கி, ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் ஒரு சகோதர தளம் என்ற முயற்சியில் முன்னேறி வருகிறது ‘ஆஹா’. இந்த வகையில் அண்மையில் சிம்புவை விளம்பரத் தூதுவராக கொண்டு தொடங்கப்பட்ட ’ஆஹா தமிழ்’ தளமும் கவனம் பெற்றுள்ளது. ’ஆஹா’வின் வியூக அடிப்படையில் தமிழ் உட்பட தென்னகத்தின் 4 பிராந்தியங்களிலும் தனி ஓடிடி தளங்கள் முளைத்து வருகின்றன. பிரபல யூடியூப் தளங்கள், பாரம்பரிய ஊடக நிறுவனங்கள் ஆகியவையும் இந்த பிராந்திய ஓடிடி தளங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
’பெரிய திரை கனவுகளுக்கான பிள்ளையார் சுழியை ஓடிடி தளங்களில் பரிசோதிக்கும் இளம் படைப்பாளர்கள் அதிகரித்திருப்பதும், ஓடிடி தளத்துக்கு ஏற்ப சகாய பட்ஜெட்டில் தங்கள் படைப்புகளை உருவாக்கத் துணிவதும், இவர்களின் வித்தியாசமான படைப்புகளுக்கு ரசிக ஆதரவு கிடைப்பதுமாக’ பிராந்திய ஓடிடி தளங்கள் முழு மூச்சுடன ஓடிடி ஓட்டத்தில் அடியெடுத்துள்ளன. இவற்றுக்கு ஈடுகொடுக்கும் நோக்கில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் புதிய முயற்சிகள் அமைந்தாக வேண்டிய நெருக்கடியும் நேர்ந்திருக்கிறது.
நெட்ஃப்ளிக்ஸ் தனது இந்திய பாய்ச்சலை தொடங்கியபோது அதன் அமெரிக்கத் தலைமை, ‘எங்களின் அடுத்த 10 கோடி சந்தாதரர்கள் இந்தியாவிலிருந்தே கிடைப்பார்கள்’ என்று வெளிப்படையாக இறுமாந்திருந்தது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட தேசத்தில் இது குறைந்த எண்ணிக்கை என்றும் கணித்திருந்தது. ஆனால், இந்தியர்களின் ரசனையும், தொய்வடைந்த வாங்கும் திறனும், சக போட்டியாளர்களின் நெருக்கடியுமாக சேர்ந்து சந்தாதாரர் எண்ணிக்கையில் 60 லட்சத்தை தாண்டுவதில் தற்போது வரை நெட்ஃப்ளிக்ஸ் தடுமாறிக்கொண்டிருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் இந்த வாழ்வா சாவா போராட்டத்தின் முடிவு, கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்களின் கைகளில் பொதிந்திருக்கிறது.