ஓடிடி உலா: இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


சாணிக் காயிதம்: தமிழ் திரைப்படம்

ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கான சகல வடுக்களோடும் உழலும் ஒரு குடும்பம், ஆதிக்க சாதியினரால் வேட்டையாடப்படுகிறது. தன்னை சீரழித்து தனது குடும்பத்தினரை கொன்றவர்களை பழிதீர்க்க கிளம்புகிறாள் சாமானியப் பெண். நாவல் பாணியில் பிரித்து சொல்லப்பட்ட கதை மற்றும் பழிவாங்கலை நியாயப்படுத்த முகத்திலறையும் காட்சிகள் ஆகியவற்றால் ’சாணிக் காயிதம்’ திரைப்படம் வேறுபடுகிறது.

ஹாலிவுட் டரன்டினோவின் ’கில்பில்’ திரைப்படத்தின் இந்திய சாதிய பின்னணியிலான பதிப்பாக தென்பட்டபோதும், கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் உள்ளிட்டோரின் கனமான பங்களிப்பால் சாணிக் காயிதம் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகிறது.

சாணிக்காயிதம்

மேக்கப் இல்லாத கீர்த்தியின் ருத்ர தாண்டவத்தில் ஆங்காங்கே மிகை நடிப்பு பிசிறடித்தபோதும், திரையுலகின் அடுத்தடுத்த சுற்றுகளுக்கும் தாக்குப்பிடிப்பேன் என்கிறார் அம்மிணி. செல்வராகவன் நடிப்பு மிரட்டல் ரகம். வன்முறை மற்றும் சித்ரவதையை ஆலாதித்திருப்பதும், வசன வசைகளும் இது குழந்தைகளுக்கான திரைப்படம் அல்ல என்கிறது.

பழிவாங்கல் அழகியலில், தனது முத்தொகுதி திரைப்பட வரிசையில் சென்ற வருடத்தின் ’ராக்கி’யைத் தொடர்ந்து இரண்டாவது படைப்பாக சாணிக் காயிதம் தந்திருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். யாமினி யக்னமூர்த்தியின் ஒளிப்பதிவும், சாம் சிஎஸ்ஸின் இசையும் திரைப்படத்தின் பலம். அமேசான் ப்ரைம் வீடியோவில் சாணிக் காயிதம் வெளியாகி இருக்கிறது.

பெட் புராண்: மராத்தி வலைத்தொடர்

திருமணமான தம்பதியரை நச்சரிக்கும் உறவினர்களின் வழக்கமான விசாரணைகளுக்கு அதுல் - அதிதி ஜோடியும் ஆளாகிறார்கள். வித்தியாசமான யோசனையாக, வளர்ப்பு பிராணிகளுக்கு பெற்றோர் ஆக இருவரும் முடிவு செய்கின்றனர். நிஜவாழ்வில் நாயும், பூனையுமான அதுல் - அதிதி ஜோடி, வளர்ப்பு பிராணியிலும் ஆளுக்கொன்றாக அவற்றையே வளர்க்க யத்தனிக்கிறார்கள். இதற்கு குழந்தைகளையே பெற்று வளர்த்திருக்கலாம், என்று இருவரும் புலம்பும் வகையில் அடுத்தடுத்த கலாட்டாக்கள் வளர்ப்பு பிராணிகளால் அரங்கேறுகின்றன.

பெட் புராண்

ஒரு பக்கம் குழந்தைக்காக உறவினர்கள் படுத்தும்பாடு, மறுபுறம் வளர்ப்பு பிராணிகளின் சேட்டை என அதுல் அதிதி தம்பதியின் வாழ்க்கை அல்லோலகல்லோலப்படுகிறது. ’பெட் புராண்’ என்ற பிராணி வளர்ப்பு புராணம் குறித்த இந்த மராத்தி காமெடி வலைத்தொடர், தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் காணக் கிடைக்கிறது. தலா அரை மணி நேரம் என ஆறு அத்தியாயங்களில் கலகலப்புக்கு உத்தரவாதமளிக்கும் பெட் புராண் வலைத்தொடரை சோனி லிவ் தளத்தில் காணலாம்.

ஹோம் ஷாந்தி: இந்தி வலைத்தொடர்

டேராடூனில் வசிக்கும் மத்திய வர்க்க குடும்பம், தங்கள் கனவு இல்லத்துக்கு தயாராகிறது. ஓய்வுபெறவிருக்கும் பள்ளி தலைமையாசிரியை, அவரது கணவரான கவிஞர் கனவான், இரண்டு வளர்ந்த பிள்ளைகள் என பிரியம் சமைக்கும் தங்கள் கூட்டுக்காக தயாராகிறார்கள். ஒவ்வொரு செங்கல்லாக பார்த்து அடியெடுக்கும் அவர்களுக்கு எதிர்பாரா திசைகளிலிருந்து சவால்கள் எழுகின்றன.

ஹோம் ஷாந்தி

இந்திய மத்திய குடும்பங்களின் வாழ்வில் தவிர்க்க முடியாது இடம்பெறும் கனவு இல்ல சடங்குக்கான காட்சிகளை, காமெடியில் தோய்த்து தந்திருக்கிறது ஹோம் ஷாந்தி வலைத்தொடர். இந்த இந்தி வலைத்தொடரை தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் ரசிக்கலாம். தலா அரை மணி நேரம் என ஆறு அத்தியாயங்களில் விரியும் இத்தொடர், டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.

தார்: இந்தி திரைப்படம்

ராஜஸ்தானின் தார் பாலைவனத்தை ஒட்டிய நகருக்கு பழம்பொருள் சேகரிப்பாளன் ஒருவன் குடியேறுகிறான். நிழல் சம்பவங்கள் மற்றும் வன்முறைகளுக்கு பெயர் பெற்ற அந்த நகரில், பழிவாங்கல் ஒன்றுக்காக அவன் பிரவேசித்திருப்பதை ஊரார் அறியாதிருக்கின்றனர். தொடர்ந்து நகரில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களை ஆராய போலீஸ் அதிகாரி ஒருவர் பாலைவன நகருக்கு வருகிறார்.

தார்

எண்பதுகளின் பின்னணியில் உண்மைச் சம்பவங்களின் அழுத்தத்தோடு நகரும் கதையில், குற்றம் புரிவோருக்கும் அனுபவ போலீஸ் அதிகாரிக்கும் இடையிலான போட்டி ஆட்டமாக ’தார்’ (Thar) திரைப்படம் உருவாகி உள்ளது. தயாரிப்பில் இணைந்திருக்கும் அனில் கபூர், பிரதான பாத்திரத்திலும் தோன்றுகிறார். திரைக்கதை மற்றும் வசனத்தில் அனுராக் காஷ்யப் பங்களித்திருக்கிறார். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள தார் திரைப்படத்தை தமிழிலும் ரசிக்கலாம்.

தி டேக்டௌன்: பிரெஞ்சு திரைப்படம்

வளர்ப்பு, பயிற்சி, திறமை என சகலத்திலும் முற்றிலும் வேறான போலீஸ் காளையர் இருவர், சிக்கலான வழக்குக்காக ஒரே நுகத்தடியில் பூட்டப்படுகிறார்கள். இவர்களின் மாறுபட்ட பார்வைகளே குற்ற புலனாய்வுக்கும், ஆக்‌ஷன் அதகளத்துக்கும் விநோதமாய் உதவுகின்றன. போதைக் கடத்தல் கும்பலைத் தேடி பிரான்ஸ் நெடுக பயணிக்கும் கதைக்காக, தேசத்தின் அதிகம் அறியப்படாத இடங்களைத் தேடித்தேடி படம் பிடித்துள்ளனர்.

தி டேக்டௌன்

நெட்ஃப்ளிக்ஸின் பிரபல லூபின் வலைத்தொடரின் இயக்குநர், நாயகன் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்துக்காக மீண்டும் கைகோத்துள்ளனர். 2012-ல் வெளியான ’ஆன் தி அதர் சைட் ஆஃப் ட்ராக்ஸ்’ திரைப்படத்தின் அடுத்த பாகமான ’தி டேக்டௌன்’ (The Takedown) ஆக்‌ஷன் காமெடியிலும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

இதர ஓடிடி படைப்புகள்

பணயக் கைதிகளை மையங்கொண்ட பல்வேறு கதைகளிலும் பிரபலமான, ’ஸ்டாக்ஹோல்ம் சிண்ட்ரோம்’ என்ற பதத்துக்கு காரணமான, ஸ்வீடனின் பிரபல கடத்தல் மன்னன் கதையை விவரிக்கும் க்ளார்க் (Clark) வலைத்தொடரை நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.

வெல்கம் டு ஈடன்

சமூக ஊடக இளசுகளுக்கான போதை மற்றும் சாகச விசித்திரங்களின் மறுபக்கத்தை எச்சரிக்கும் ’வெல்கம் டு ஈடன்’ (Welcome to Eden) என்ற ஸ்பானிஷ் வலைத்தொடர் மற்றும் இலுமினாட்டிகளை நகைச்சுவையாக இடித்துரைக்கும் The Pentaverate வலைத்தொடர் ஆகியவற்றையும் நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.

ஸ்டோரீஸ் ஆன் தி நெக்ஸ்ட் பேஜ்

உறவின் வெவ்வேறு பரிமாணங்களை ஆழமாய் அலசும் 3 கதைகள் உள்ளடங்கிய, ’ஸ்டோரீஸ் ஆன் தி நெக்ஸ்ட் பேஜ்’ (Stories On The Next Page) என்ற ஆந்தாலஜியை டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் காணலாம். Star Trek: Strange New Worlds என்ற அறிவியல் புனைவு ஆக்‌ஷன் வலைத்தொடரை வூட் செலக்ட் தளத்தில் காணலாம். புதுமை முயற்சிகளை பரிசோதிக்கும் கன்னட திரைப்படங்களின் வரிசையில் புதிய வரவான ’மேன் ஆஃப் தி மேட்ச்’ நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகி உள்ளது.

வைல்ட் பேபிஸ்

நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்பட வரிசையில், கானுயிரிகளின் வாரிசுகளின் மத்தியிலான நேசம், குடும்பமாய் பேணப்படும் உறவு உள்ளிட்ட ஆச்சரியமான தரவுகளை பதிவு செய்திருக்கிறது வைல்ட் பேபிஸ் (Wild Babies).

நசிர்

திரையரங்கிலிருந்து ஓடிடிக்கு

பல்வேறு திரைவிழாக்கள் மற்றும் விருதுகளை வென்ற ’நசிர்’ தமிழ் திரைப்படம் சோனி லிவ் தளத்தில் வெளியாகி உள்ளது. அமிதாப் பச்சன் நடித்த இந்தி ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான ’ஜுண்ட்’, ஜீ5 தளத்தில் வெளியாகி உள்ளது. ‘பவசித்ரா’ (Bhavachitra) என்ற கன்னட த்ரில்லர் திரைப்படத்தை வூட் செலக்ட் தளத்தில் காணலாம்.

ஜுண்ட்

x