தொலைக்காட்சி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற 'கனா காணும் காலங்கள்' தொடரின் புது சீசன் இன்று ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. முதல் எபிசோட் எப்படி இருக்கிறது?
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2006-ம் ஆண்டு 'கனா காணும் காலங்கள்' என்ற புதிய தொடர் ஒளிபரப்பட்டது. பள்ளி கால மாணவர்களின் நட்பு, அவர்களின் குறும்பு, சேட்டைகள், காதல், சண்டை, ஆசிரியர் மாணவர் உறவு என தொடர் ஒளிபரப்பான சமயம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பள்ளி காலங்களை காட்சிப்படுத்திய 'கனா காணும் காலங்கள்' அடுத்து கல்லூரி காலத்தையும் தொடராக்கியது. பள்ளி காலத்தில் நடித்தவர்களோடு இன்னும் சில புதுமுகங்கள் இணைய அந்த 'கனா காணும் காலங்கள்' - கல்லூரியின் கதை சீசனும் ரசிகர்களிடையே மறக்க முடியாத நினைவுகளை கொடுத்திருக்கிறது.
பழைய சீசன் நடிகர்கள் எல்லாம் சமீபத்தில் ரீ- யூனியன் செய்திருந்தார்கள். இதனை அடுத்து இப்போது பல வருடங்களுக்கு பிறகு இந்த தொடரின் அடுத்த சீசனை இன்று முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். ஓடிடி பார்வையாளர்களுக்கென பிரத்யேகமாக இது தொடராக்கப்பட்டுள்ளது.
'கனா காணும் காலங்கள்' தொடரின் முதல் சீசனை நினைவூட்டும் பழைய எபிசோடின் சில காட்சிகளை காண்பித்து பள்ளி என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, மறக்க முடியாத நினைவுகளை கொண்டது என்பதோடு சீரியலின் முதல் காட்சி தொடங்குகிறது.
முன்பே சொன்னது போல சோஷியல் மீடியாவில் பிரபலமாக உள்ள பல முகங்கள் இந்த சீசனில் நடிகர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள். கரோனா காலம் முடிந்து பள்ளிக்கு வர கூடிய பேட்ச் மாணவர்களாக இருக்கிறார்கள். இதில் நடிகர் ராஜேஷ் ஆசிரியராக வருகிறார். இது தவிர பழைய சீசனின் பிரின்சிபால், வாட்ச்மேன் என அவர்களும் இந்த புது சீசனில் இணைந்திருக்கிறார்கள்.
கரோனா காலம் ஆன்லைன் க்ளாஸ் முடித்து பள்ளிக்கு வரும் மாணவர்கள், பள்ளிக்கூடத்தை எப்படி மிஸ் செய்திருக்கிறார்கள், சோஷியல் மீடியாவை எப்படி இந்த காலத்தில் உபயோகித்தார்கள், மாணவர்களின் சேட்டை, கலாய் கான்வர்சேஷன், புதிதாக பள்ளிக்கு சேர்ந்திருக்கும் மாணவர்களின் ராக்கிங் என 'கனா காணும் காலங்கள்' தொடரின் வழக்கமான கலகல டெம்ப்ளேட் இதிலும் இடம் பிடித்து இருக்கிறது.
ஹீரோவாக திருச்சியில் இருந்து பள்ளிக்கு புதிதாக வரும் மாணவனாக கலை, அவனை முதல் நாளே ராக் செய்யும் ஒரே வகுப்பின் சீனியர் மாணவர்கள், கலையை காப்பாற்றும் மாணவி அபி, தனியார் பள்ளியில் முதல்வர் பள்ளியை நடத்த விடாமல் செய்யும் மறைமுக வேலைகள் என சண்டை, காதல், நட்பு என அனைத்திற்குமான இடத்தை தரும் விதமாக முதல் எபிசோட் நகர்கிறது.
மொத்தம் 130 எபிசோட்கள் திட்டமிட்டுள்ள இந்த தொடரின் முதல் நாளில் 30-40 நிமிடங்களுக்குள்ளான நான்கு எபிசோட்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார்கள். இனி வரும் நாட்களில் தொடர் எப்படி இருக்க போகிறது, பழைய 'கனா காணும் காலங்கள்' தொடரின் கலகலப்பையும் நினைவுகளையும் தக்க வைக்குமா என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.