விஜய் டிவியில் ஒளிரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வடிவமான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. 24X7 என ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியில் முந்தைய சீஸன்களில் இருந்து 14 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். இப்போது நிரூப், தாமரை, பாலா மற்றும் ரம்யா ஆகிய மூவர் இறுதிக்கட்டப் போட்டியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜூலி இந்த வாரம் இறுதிப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆனால், அந்தக் காட்சிகள் எதுவும் பிக் பாஸ் அல்டிமேட்டில் ஒளிபரப்பப்படவில்லை. முதல் சீஸனைக் காட்டிலும், இந்த நிகழ்ச்சியில் ஜூலி மீதான நெகட்டிவ் விமர்சனங்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் அல்டிமேட்டின் ‘டைட்டில் வின்ன’ராக வருவதற்கு பாலாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கடுத்து ரம்யா, நிரூப் மற்றும் தாமரை எனவும் வாக்குகள் அன்அஃபிஷியலாக உள்ளன. ஆனால் இறுதி நேரத்தில் முடிவுகள் எப்படியும் மாறலாம்.
இறுதிக் கட்டத்தில் பொதுவாக முந்தைய சீஸன்களின் போட்டியாளர்கள் மற்றும் அந்த சீஸனில் இருந்து எலிமினேஷன் ஆனவர்கள் உள்ளே வருவார்கள். அந்த வகையில் இந்த பிக் பாஸ் அல்டிமேட் சீஸனின் போட்டியாளர்களான அனிதா, ஷாரிக், அபிநய், சுஜா, ரியோ ஆகியோர் உள்ளே உள்ளனர். மேலும் முந்தைய சீஸனில் இருந்து பிரியங்கா, பாவனி ஆகியோர் உள்ளே வருவது போன்ற ப்ரோமோக்களும் இன்று வெளியாகின. நிரூப் - பிரியங்கா நட்பு, பாவனி மற்ற போட்டியாளர்களுடன் என்ன பேச இருக்கிறார் என்பதெல்லாம் இன்று தெரியவரும்.
மேலும் இறுதி நிகழ்ச்சிக்கு நடிகை ஹன்சிகா மோத்வானி சிறப்பு விருந்தினர் எனவும் சொல்லப்படுகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இறுதி ஷூட்டில் அன்அஃபிஷியலாக அல்டிமேட்டின் வின்னர் யார் என்ற தகவல் நாளை வெளியாகிவிடும். அதிகாரபூர்வமாக சிம்பு தொகுத்து வழங்கும் இறுதிக் கட்ட எபிசோட் ஞாயிறன்று டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும்.