மாறன்: அரசியல் ஆக்ஷன் த்ரில்லர்
பத்திரிகையாளர் சத்தியமூர்த்தி தனது நேர்மையான எழுத்துக்கு பரிசாக உயிரை இழக்கிறார். தந்தையின் வழியில் பத்திரிகையாளனாகும் மகன் மதிமாறன், புலனாய்வு இதழியலில் புதிய தடம் பதிக்கிறான். அந்த வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யும் அரசியல்வாதியை அம்பலப்படுத்தும் மாறனின் முயற்சி, அவனது வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போடுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையிலும், புலனாய்வு இதழியலிலும் எதிர்கொள்ளும் புதிய சவால்களை இளம் இதழாளன் வித்தியாசமாக சமாளிப்பதே மாறன் திரைப்படம்.
துடிப்பான புலனாய்வு இதழியலுக்கோ, பத்திரிகையாளனாக தோன்றும் தனுஷின் நடிப்பு பசிக்கோ தீனியிடும் அளவுக்கு படத்தில் புதிதாக எதுவும் இல்லை. ஆனால், கொடுத்த வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார் தனுஷ். தந்தையாக ராம்கி, வில்லனாக சமுத்திரக்கனி என முக்கிய வேடங்களில் பலர் நடித்துள்ளனர். பெயரளவில் வந்து செல்லும் மாளவிகா மோகனனைவிட, தனுஷ் தங்கையாக தோன்றும் ஸ்ம்ருதி வெங்கட்டுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஜி.வி.பிரகாஷ் குமார் படத்துக்கு தேவையான இசையை தந்திருக்கிறார். ’பொல்லாத உலகம்’ பாடல் இணையத்தில் ஏற்கனவே ஹிட்டடித்திருக்கிறது. ஆனால், ’சிட்டுக்குருவி’ பாடல், வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் அம்மா சென்டிமென்ட் பாடலை அப்படியே நினைவூட்டுகிறது. இயக்குநர் கார்த்திக் நரேன் மீதான எதிர்பார்ப்புகள் சற்று பொய்த்தபோதும், சுமாரான பொழுதுபோக்கு ரகமாக மாறன் ரசிக்கவே செய்கிறது.
சுவாரசியமான ஒன்லைன் கதையில், கடந்த தலைமுறை திரைப்படங்களின் பாணியை தோய்த்து தந்திருக்கிறார் கார்த்திக் நரேன். அதிகம் தொடப்படாத புலனாய்வு இதழியலை கையில் எடுத்தவர்கள், அதன் போக்கில் கதையில் சுவாரசியம் சேர்க்க தவறி இருக்கிறார்கள். ஓடிடி வெளியீட்டுக்கு என்று முடிவான பிறகேனும், படத்தின் நீளத்தில் மேலும் சற்று குறைத்திருக்கலாம். டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடி ஓடிடி வெளியீடாக மாறன் திரைப்படம் வெளியாகி உள்ளது.
கிளாப்: தன்னம்பிக்கையூட்டும் ஸ்போர்ட்ஸ் டிராமா
தந்தையின் ஊக்குவிப்பால் ஓட்டப் பந்தயத்தில் தங்கமகனாக ஜொலிக்கிறான் கதிர். மாநில அளவில் தங்கம் வென்றவனை தேசிய அளவுக்கு உயர்த்த தந்தை கனவு காண்கிறார். ஆனால், எதிர்பாராத விபத்தொன்றில் எல்லாம் கானலாகிப் போகிறது. இடிந்துபோய் மூலையில் முடங்கும் கதிர், தன்னைப்போலவே ஓட்டத்தில் ஆர்வம்கொண்ட பெண்ணை கண்டதும் உற்சாகமாகிறான்.
ஆனால், கிராமத்து பின்னணி கொண்ட அவள், நாட்டின் விளையாட்டுத்துறை அரசியலை தாண்டி ஓடமுடியாமல் தவிக்கிறாள். அவளுக்கு உதவும் கதிரின் முயற்சியும் அத்தனை சோபிக்கவில்லை. அவனுடைய இறந்தகாலமே, அவளின் எதிர்காலத்தை நசுக்க முயல்கிறது. இத்தனை தடைகளையும் கடந்து அந்தப் பெண்ணை ஓட்டப்பந்தய வீராங்கனையாக்கும் கதிரின் முயற்சி வெற்றியடைந்ததா என்ற கேள்விக்கு விடை காண்கிறது கிளாப் திரைப்படம்.
ஸ்போர்ட்ஸ் டிராமா வகைமையில் அறிமுக இயக்குநர் பிருத்வி ஆதித்யா தேறி விடுகிறார். நாயகனாக தோன்றும் ஆதிக்கும் ’கிளாப்’ முக்கியமான திரைப்படமாகிறது. தன்னம்பிக்கை தெறிப்பிலும், நாட்டின் விளையாட்டுத் துறையில் புரையோடிப் போயிருக்கும் அவலங்களை வெளிப்படுத்துவதிலும், கூர்மையான வசனங்கள் திரைப்படத்தின் பலமாகின்றன.
இளையராஜாவின் பின்னணி இசையும் படத்தில் ஒன்றச் செய்கிறது. ஆகங்ஷா சிங், க்ருஷா சிங், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், ஸ்போர்ட்ஸ் படைப்புகளை ரசிப்போருக்கு கூடுதலாக பிடிக்கும். நேரடி ஓடிடி வெளியீடாக சோனி லைவ் தளத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகி உள்ளது.
’தி ஆதம் புராஜெக்ட்’: களேபரமாகும் காலப் பயணம்
காலப் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் புதின ஆக்ஷன் கதையில் நகைச்சுவை கலந்து பரிமாறி இருப்பதே ’தி ஆதம் புராஜெக்ட்’ திரைப்படம். 2050-ம் ஆண்டில் வாழும் ஆதம், தனது காலப்பயண பரிசோதனையில் தவறுதலாக 2022-ல் பிரவேசித்து விடுகிறான். அங்கே தனது பதின்ம வயது பதிப்பை சந்திக்கிறான். இருவரும் சேர்ந்து ஆதம் வாழ்க்கையின் முக்கிய நபரை இறப்பிலிருந்து காப்பாற்ற முயல்கின்றனர். இந்த முயற்சி ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் அழிவிலிருந்து காக்கும் சவாலாக உருவெடுக்கிறது.
நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கும் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படமான இது குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களுக்குமான உள்ளடக்கம் கொண்டிருக்கிறது. பிரம்மாண்டமான கிராஃபிக்ஸ் காட்சிகள் அடங்கிய ‘தி ஆதம் புராஜெக்ட்’ காட்சிதோறும் காமெடிக்கும் உத்தரவாதமளிக்கிறது. ஆதமாக தோன்றும் ரியான் ரெனால்ட்ஸ் தனது அனுபவமிக்க நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார்.
எத்தகைய உயர்வான அறிவியல் கண்டுபிடிப்புகளின் மத்தியிலும், அற்புதமான மனித உணர்வுகளால் மட்டுமே வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்க முடியும் என்பதை கலகலப்பாக சொல்லி இருக்கிறார்கள். ஆக்ஷன், கிராஃபிக்ஸ், காமெடி, சென்டிமென்ட் என ஒட்டுமொத்த குடும்பத்துக்குமான கலவையான பொழுதுபோக்கினை தருகிறது ‘தி ஆதம் புராஜக்ட்’.
இதர ஓடிடி வெளியீடுகள்
நகைச்சுவை அறிவியல் புதின வலைத்தொடரான ’அப்லோட்’ இரண்டாவது சீஸன், அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது. சன்னி லியோன் பிரதான பாத்திரத்தில் தோன்றும் ‘அனாமிகா’ ஆக்ஷன் வலைத்தொடரின் முதல் சீஸன் எம்.எக்ஸ் பிளேயர் தளத்தில் வெளியாகி உள்ளது. திருமணத்தின் பெயரால் இந்திய சிறுமிகள் அரேபிய ஷேக்குகளுக்கு சட்டவிரோதமாக இரையாக்கப்படுவதைச் சித்தரிக்கும் வலைத்தொடர் ‘க்யூபூல் ஹை’, ஹைதராபாத் நகரை மையமாகக் கொண்டு நடந்தேறும் உண்மைச் சம்பவங்களின் அடிப்டையில் எடுக்கப்பட்ட இந்த தெலுங்கு வலைத்தொடர் ஆஹா தளத்தில் வெளியாகி உள்ளது.
திரையரங்கிலிருந்து ஓடிடிக்கு..
ஆஷிஷ் ரெட்டி, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் ஆக்ஷனும், காதலும் கலந்த அக்மார்க் தெலுங்கு திரைப்படமான ‘ரௌடி பாய்ஸ்’, இதே தெலுங்கு பாணியில் நிகில் குமார், காஷ்மீரா பர்தேஸி நடிப்பிலான, கன்னட ஆக்ஷன் - காதல் திரைப்படமான ’ரைடர்’, பொறியியல் படிப்புக்காக பெருநகரில் அல்லாடும் மாணவியை மையமாக்கி சுழலும் இயல்பான மலையாளத் திரைப்படமான ’சூப்பர் சரண்யா’ ஆகிய அண்மையில் வெளியான திரைப்படங்களை ஜீ5 தளத்தில் பார்க்கலாம்.
ரவி தேஜா நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லராக பெரும் எதிர்பார்ப்புடன் தெலுங்கில் கடந்த மாதம் வெளியான ’கிலாடி’ திரைப்படம் தற்போது டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. மத துவேஷம் பரப்பும் அரசியலின் கோர முகத்தைத் தோலுரிக்கும் ’வர்த்தமனம்’ மலையாளத் திரைப்படம் மனோரமா மேக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. பார்வதி திரிவொத்து, ரோஷன் மாத்யூ உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்த ’எஃப்.ஐ.ஆர்’ தமிழ் திரைப்படத்தை அமேசானில் பார்க்கலாம்