ஓடிடியில் ரமணிஸ் ரகளை
(ரமணி Vs ரமணி 3.0 - தமிழ் வலைத்தொடர்)
சேட்டிலைட் சேனல்கள் வந்த புதிதில் பிரபலமாக இருந்த வாராந்திர தொடர்கள், தினசரி நெடுந்தொடர்களால் வரவேற்பிழந்தன. 90 களின் பிற்பகுதியில் அப்படி அதிகமானோரால் ரசிக்கப்பட்ட ‘ரமணி Vs ரமணி’ தொடர் ஓடிடி வாயிலாக புத்துயிர் பெற்றிருக்கிறது. 23 வருடங்களுக்குப் பின்னர் ரசிகர்களை நம்பி ஒரு தொடர் உதயமாவதும் தமிழுக்குப் புதிது.
கே.பாலச்சந்தரின் மின்பிம்பங்கள் தயாரிப்பில், ’மர்ம தேசம்’ நாகா இயக்கத்தில் ‘ரமணி Vs ரமணி’ தொடரின் அத்தியாயங்கள் மறக்க முடியாதவை. தம்பதியர் இடையிலான ஈகோ மோதலை, அவர்களின் நிபந்தனையற்ற அன்பின் ஊடாக நகைச்சுவையில் நனைத்து பரிமாறியதே ‘ரமணி Vs ரமணி’ தொடர். இன்றைக்கும் கவிதாலயாவின் யூடியூப் பக்கத்தில் ‘ரமணி Vs ரமணி’ தொடரின் முதலிரு பாகங்களின் அத்தியாயங்களை லட்சக்கணக்கானோர் ரசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஓடிடி தலைமுறையினருக்காக ’ரமணி Vs ரமணி 3.0’ வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்திலிருந்து நாயகி ரமணியையும், இரண்டாம் பாகத்திலிருந்து நாயகன் ரமணியையும் கோர்த்து, மூன்றாவது சீஸன் ’ரமணி Vs ரமணி 3.0’ உருவாகி உள்ளது. இந்த வகையில் ராம்ஜி - வாசுகி ஆகியோர் புதிய தொடரின் ரமணிஸ் தம்பதிகளாக வருகின்றனர். 20 ஆண்டு இடைவெளியில் ராம்ஜி களையிழந்திருக்க, வாசுகி வழக்கமான கலகலப்பை கைவிடாதிருக்கிறார். ’பூவிலங்கு’ மோகன் போன்ற பழைய முகங்களையும் புதிய சீஸனில் பார்க்கலாம்.
’ஆஹா வீடியோ’ ஓடிடி தளம் மற்றும் செயலியில் வாரம் ஒரு அத்தியாயமாக திட்டமிடப்பட்டிருக்கும் ‘ரமணி Vs ரமணி 3.0’ தொடரின் முதல் அத்தியாயம் மார்ச் 4 அன்று வெளியானது. ’கிரகப்பிரவேசம்’ என்ற தலைப்பிலான இந்த அத்தியாயம், பிரமாதம் என்று சிலாகிக்க முடியாதெனினும், ‘ரமணி Vs ரமணி’ ரசிகர்களை ஏமாற்றாது.
புதிய சீஸனில் ரமணி தம்பதியரின் மகள் பதின்ம வயதை எட்டி இருக்கிறாள். சுட்டி வயதில் மகனும் இருக்கிறான். புதுவீட்டு கிரகப்பிரவேசத்தில் கதை தொடங்குகிறது. சாங்கியப்படி முதல் நாளிரவு புதுவீட்டில் தம்பதியர் ’தங்கியாக’ வேண்டும் என்று புரோகிதர் அறிவுறுத்திச் செல்கிறார். அந்த ஒற்றை இரவில் ரமணி தம்பதியரின் தங்கல் முயற்சிகள் அனைத்துமே குடும்ப உறவுகளால் தாங்கல்களில் நீள்வதும், அதையொட்டிய நகைச்சுவை களேபரங்களுமே முதல் அத்தியாயம். அரைமணி நேரம் நெடுக இதழில் தொற்றிய முறுவலுக்கு இந்த சீஸனிலும் இயக்குநர் நாகா உத்திரவாதம் தந்திருக்கிறார்.
அஜய் தேவ்கனின் ருத்ர தாண்டவம்
(ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ் - இந்தி வலைத்தொடர்)
மாநகரில் தொடரும் தொடர் கொலைகள் காவல்துறைக்கு பெரும் சவாலாக, அதிரடி போலீஸ் அதிகாரி ருத்ரவீர் சிங் வசம் வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. குற்றவாளிகளின் மனநிலையில் இருந்தே அவர்களை வளைக்கும் இந்த புலனாய்வு அதிகாரி, அதே தீவிரத்தில் கொலைகளின் பின்னணியை நெருங்குகிறார். இன்னொரு திசையிலிருந்து கொலையாளியும் போலீஸ் அதிகாரியை நெருங்க, அதிகாரி ருத்ரா சில தியாகங்களையும் செய்ய வேண்டியதாகிறது. இதற்கிடையே ருத்ராவின் தனிப்பட்ட வாழ்க்கையும் புதிய இடர்களை எதிர்கொள்கின்றன. இறுதியில் கொலையாளியை அதிகாரி வளைத்தாரா, அதற்காக அவர் மேற்கொள்ளும் வியூகங்கள் என்ன என்பதை சைக்கலாஜிக்கல் க்ரைம் திரில்லராக விவரிக்கிறது ’ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னெஸ்’ (Rudra: The Edge Of Darkness) வலைத்தொடர்.
பிபிசியின் லூதெர் (Luther) வலைத்தொடரின் அதிகாரபூர்வ மறு ஆக்கமே இந்த ருத்ரா. அஜய் தேவ்கனுக்கு பழகிய வேடம் என்பதால் சமாளித்து விடுகிறார். ஆனால், லூதெரில் ஈர்த்த இட்ரிஸ் எல்பா அருகில்கூட, அஜய் தேவ்கனின் இருப்பும் நடிப்பும் நெருங்கவில்லை. மறுஆக்கம் என்பதற்காக காட்சிக்குக் காட்சி அப்படியே எடுத்திருக்கிறார்கள். 12 வருடங்களுக்கு முன்னர் வெளியான லூதெர் கதையின் பாதிப்பில் பல படைப்புகள் வெளியாகி விட்ட சூழலில், அதே கதையை சட்டகம் மாறாது எடுத்திருப்பது இந்த வலைத்தொடரின் தனித்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.
இஷா தியோல், ராஷி கன்னா, அதுல் குல்கர்னி, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் உடன் நடித்துள்ளனர். லூதெர் தொடரை பார்க்காதவர்களுக்கு ருத்ரா திருப்தியளிக்கும். இந்தி ருத்ராவை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் பார்க்கலாம். தலா 45 - 60 நிமிடங்களுக்கு நீளும் ருத்ரா தொடரின் 6 அத்தியாயங்கள் அடங்கிய முதல் சீஸன் டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ளது.
பிபிசியின் லூதெர் தொடரின் அனைத்து சீஸன்களையும் காண விரும்புவோர், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தை நாடலாம்.
நெட்ஃப்ளிக்ஸ் த்ரில்லர் தொடர்கள்
இஸ்தான்புல் நகரின் வரலாற்று பின்புலம் மிக்க ஹோட்டலில் தங்கும் பெண் பத்திரிகையாளர், அங்கே தனது புலனாய்வின் ஊடாக நூறாண்டு பின்னே காலப்பயணம் மேற்கொள்கிறார். அங்கிருந்தபடி துருக்கியின் பெரும் வரலாற்று பிழையையும், தனக்கு எதிரான சவாலையும் அவர் எதிர்கொள்வதே ‘மிட்நைட் அட் தி பேரா பேலஸ்’ (Midnight at the Pera Palace) சாகச வலைத்தொடர்.
அமெரிக்க நகரமொன்றில் தாயுடன் வசிக்கும் இளம்பெண்ணின் வாழ்க்கையை, எதிர்பாராது அரங்கேறும் வன்முறை சம்பவம் ஒன்று புரட்டிப்போடுகிறது. அந்த அசந்தர்ப்ப சூழலைவிட அதனை எதிர்கொண்ட தாயின் மறுமுகத்தை கண்டு மகள் அரண்டு போகிறாள். மகளின் பாதுகாப்புக்காக இருவரும் பிரியவும் நேரிடுகிறது. தாயின் கடந்த காலத்தை துழாவத் தொடங்கும் மகளுக்கு அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. இதே தலைப்பிலான பிரபல அமெரிக்க த்ரில்லர் நாவலின் கதையை தழுவி உருவாகி இருக்கிறது, தலா 45-60 நிமிடங்களில் விரையும் 8 அத்தியாயங்கள் கொண்ட ’பீசஸ் ஆஃப் ஹெர்’(Pieces Of Her) வலைத்தொடர்.
திரையரங்கிலிருந்து ஓடிடிக்கு..
இவை தவிர்த்து அண்மையில் நேரடியாக திரையரங்குகளில் வெளியான சில திரைப்படங்களும், மார்ச் 4 முதல் ஓடிடி தளங்களை தஞ்சமடைந்துள்ளன. இந்த வகையில் ’நோ டைம் டு டை’ என்ற ஜேம்ஸ் பாண்டின் ஆக்ஷன் படம் மற்றும் மலையாளத்தில் வெளியான அரசியல் நகைச்சுவை திரைப்படமான ’ரண்டு’ ஆகியவற்றை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம். தெலுங்கு காமெடி க்ரைம் திரைப்படமான ’டிஜே தில்லு’, ஆஹா வீடியோவில் வெளியாகி இருக்கிறது. விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தை ஜீ5 தளத்தில் காணலாம்.
அடுத்த ஓடிடி அல்டிமேட்
பிக் பாஸ் அல்டிமேட் வரிசையில் இந்தியாவின் இளம் சாகச போட்டியாளர்கள் பங்கேற்கும், ’இன்டியாஸ் அல்டிமேட் வாரியர்’ என்ற ரியாலிட்டி ஷோ, டிஸ்கவரி+ தளத்தில் மார்ச் 4 முதல் காணக்கிடைக்கிறது.